Wednesday, March 11, 2026
HomeUncategorizedஉலகமே ஆவலோடு எதிர்நோக்கும் 33-வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டி

உலகமே ஆவலோடு எதிர்நோக்கும் 33-வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டி

உலகமே ஆவலோடு எதிர்நோக்கும் 33-வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இன்று (வெள்ளிக்கிழமை) கோலாகலமாக தொடங்குகிறது.

தொடக்க விழா இந்திய நேரப்படி இன்று இரவு 11 மணிக்கு தொடங்குகிறது. வழக்கத்திற்கு மாறாக இந்த முறை தொடக்க விழாவை மைதானத்தில் இல்லாமல், பாரீசின் புகழ்பெற்ற சென் நதி கரையில் நடத்துகிறார்கள். ஒலிம்பிக் வரலாற்றில் தொடக்க விழா ஸ்டேடியத்திற்கு வெளியே நடத்தப்படுவது இதுவே முதல்முறையாகும்.

இதையொட்டி அங்கு பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொடக்க விழாவின் சிறப்பு அம்சமே வீரர், வீராங்கனைகளின் கம்பீர அணிவகுப்பு தான்.அணிவகுப்பு அலங்கரிக்கப்பட்ட படகில் நடத்தப்படுகிறது. இதற்காக ஏறக்குறைய 94 படகுகள் தயார் நிலையில் உள்ளன.வீரர்கள் தங்களது பாரம்பரிய உடையில் தேசிய கொடியுடன் படகில் அணிவகுத்து நிற்பார்கள். முதல் நாடாக ஒலிம்பிக்கின் தாயகமான கிரீஸ் அணிவகுப்பை தொடங்கும்.

கடைசி நாடாக போட்டியை நடத்தும் பிரான்ஸ் அணியினர் உற்சாகமாக வலம் வருவார்கள். அகர வரிசைப்படி அணிவகுப்பில் இந்தியாவுக்கு 84-வது இடம் வழங்கப்பட்டுள்ளது. நமது அணிக்கு டேபிள் டென்னிஸ் வீரர் தமிழகத்தை சேர்ந்த சரத்கமல், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து இருவரும் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்கள். இந்திய வீராங்கனைகள் சேலை உடுத்தி செல்ல இருப்பது கூடுதல் சிறப்பாகும். படகு அணிவகுப்பு சென் நதியில் ஆஸ்டர்லிட்ஸ் பாலத்தில் தொடங்கி 6 கிலோமீட்டர் தூரம்  சென்று பான்ட் டி லெனா பாலத்தில் நிறைவடைகிறது. வழியில் பிரான்சின் முக்கியமான அடையாளங்கள், போட்டிக்குரிய ஸ்டேடியங்களை வீரர், வீராங்கனைகள் பார்த்து ரசித்து செல்வார்கள். ஆற்றின் இரு புறமும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களின் ஆரவாரமும், ஆர்ப்பரிப்பும் இதுவரை இல்லாத ஒரு அனுபவத்தை கொடுக்கப்போகிறது. அத்துடன் நகர் முழுவதும் 80 மெகா திரையில் தொடக்க விழா நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

இறுதியில் உலக அதிசயமான ஈபிள் கோபுரத்தின் எதிரில் உள்ள டிரோகேட்ரோ பகுதியில் கலை நிகழ்ச்சிகளுடன் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்படுகிறது.3 மணி நேரத்துக்கு மேலாக நடத்தப்படும் வண்ணமயமான தொடக்க விழாவில், 3 ஆயிரம் கலைஞர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்த காத்திருக்கிறார்கள். இசைவெள்ளத்துக்கு மத்தியில் நடனம், லேசர் மற்றும் டிரோன்ஜாலங்கள், சிலிர்க்க வைக்கும் வாணவேடிக்கை என்று பிரமிப்புக்கு துளியும் பஞ்சம் இருக்காது.

போட்டியை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அதிகாரபூர்வமாக தொடங்கி வைக்கிறார். தொடர் ஓட்டமாக எடுத்து வரப்படும் தீபம் மெகா கொப்பரையில் ஏற்றப்பட்டதும் ஒலிம்பிக் கொண்டாட்டம் களைகட்ட தொடங்கி விடும். தீபத்தை ஏற்றி வைக்கும் அரிய கவுரவம் யாருக்கு வழங்கப்படுகிறது என்பதை பிரான்ஸ் ரகசியமாக வைத்துள்ளது. அது கடைசி நிமிடத்தில் தான் தெரிய வரும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments