Saturday, March 14, 2026
HomeUncategorizedமாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை

மார்கழி மாதத்தில் இளம் பருவ மங்கையர் ஒன்றுக்கூடி தம்முடைய மற்ற தோழிகளின் இல்லந்தோறும் சென்று, அவர்களையும் எழுப்பி நீராட திருக்குளத்திற்க்கு அழைத்து செல்வதாக அமைந்துள்ளது திருவெம்பாவை பாடல்களாகும்.

மலபரிபாகம் அடைந்த ஆன்மா, ஆணவம், கண்மம், மாயையில் அழுந்திக் கிடக்கும் பக்குவம் அடையாத ஆன்மாவை எழுப்பி, பேரருளும், பெருங்கருணையும் பொழியும் இறைவனது திருவருளில் மூழ்கி திளைப்பதற்கு அழைத்துச் செல்வதாகவும் அமைந்துள்ளது திருவெம்பாவை ஆகும். “மல இருள் உற்று உறங்காமல் மன்னு பரி பாகர் அருள் செல முழுக வருகவெனச் செப்பல் திருவெம்பாவை.” – திருப்பெருந்துறைப் புராணம்.

பாடல் எண் -2 பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம் பேசும்போ தெப்போதிப் போதார் அமளிக்கே நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர் சீசி யிவையுஞ் சிலவோ விளையாடி ஏசு மிடமீதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக் கூசு மலர்ப்பாதந் தந்தருள வந்தருளும் தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள் ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய்.

விளக்கவுரை :

இப்பாடல் உறக்கத்தில் இருக்கும் பெண்ணை எழுப்பிய தோழிக்கும், எழுப்பப்பட்ட பெண்ணிற்கும் இடையே நடைபெறும் உரையாடலாக அமைந்துள்ளது. (உறங்குபவளை எழுப்புகிற பெண்ணின் உரையாடல்) பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல் நாம் பேசும்போது எப்போது : பாசம் – அன்பு. பரஞ்சோதிக்கு – மாசற்ற ஒளி வடிவினரான பரம்பொருள். எப்போது – எப்போதும். “தோழியே நாம் இரவு பகல் என்று எப்போது பேசினாலும் நீ என்னுடைய அன்பு முழுவதும் மாசற்ற ஒளி வடிவினராக திகழும் எமது பரம்பொருளான சிவபெருமானுக்கு மட்டும் தான் என்று சொல்வாயே???!!!…”

இப்போது ஆர் அமளிக்கே நேசமும் வைத்தனையோ நேரிழையாய் : ஆர் அமளி – சென்ற பாடலில் கூறிய மலர்கள் நிறைந்த மென்மையான படுக்கை. நேசம் – அன்பு, பற்று. நேர் இழையாய் – சிறந்த அணிகளை அணிந்தவளே. ஆனால் இப்போது நீ மலர்கள் நிறைந்த மென்மையான படுக்கையின் மீது அன்பும், வைத்துக்கொண்டு இன்னும் உறக்கம் கலைந்து எழும்பாமல் இருக்கிறாயே!! அதுவெல்லாம் வெறும் பொய்யுரைகளா? ஒளிபொருந்தி அழகில் சிறந்த அணிகலண்களை அணிந்தவளே, விரைந்து எழுந்து வா. (உறக்கம் கலைந்து எழுந்த பெண்ணின் மறுமொழி) நேரிழையீர் சீசி இவையும் சிலவோ விளையாடி ஏசும் இடம் ஈதோ :

நேர் இழையீர் – பெண்களே. சீசி – சீச்சீ. இவையும் சிலவோ – நீங்கள் பேசி விளையாடும் சொற்களில் இப்போது நீங்கள் பேசிய சொற்களும் சிலவோ? விளையாடி ஏசும் இடம் ஈதோ – என்னோடு இவ்வாறு துடுக்குத்தனமாக பேசி விளையாடி ஏசும் இடம் பெருமானின் திருப்பெயரை பேசிக்கொண்டு இருக்கும் இந்த இடம் தானா கிடைத்தது உங்களுக்கு? (எழுப்புகிற பெண்ணின் உரையாடல்) விண்ணோர்கள் ஏத்துதற்குக்கு கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும் :

விண்ணோர்கள் – தேவர்கள். ஏத்துதற்கு – வழிபடுவதற்கு. கூசும் – நாணபடுகின்ற. மலர்ப்பாதம் – தாமரை மலர் போன்ற திருவடி. தந்தருள – அடியவருக்குக் தந்தருள, வந்தருளும் – வந்தருளின – எழுந்தருளின. சிவபரம்பொருளை நாம் வாழ்த்துவதால் பெருமானுக்கு எவ்வித நன்மையோ, தீமையோ உண்டாவது இல்லை. அவருக்கு தனு, கரண, புவண, போகங்கள் தேவையில்லை. ஆகையால் வாழ்த்துகின்ற உயிர்களுக்கு தான் அவையனைத்தும் அவசியமாகிறது. உயிர்கள் தாம் வாழ வகை செய்து கொள்கிற வழியே பரம்பொருளை வாழ்த்தி தாம் வாழ்வதாகும். ஆகையால்… தேவர்கள் தங்களுடைய சுகபோக வாழ்வு நீடிக்க வேண்டும், தேவலோக பதவி நிலைபெற வேண்டும், மரணமிலா பெருவாழ்வு எய்த வேண்டும் என்று தங்களின் தேவைகளை கருத்தில் கொண்டு அதன் பயன் கருதியே பரம்பொருளை வழிபடுபவர்கள் ஆதலால் பெருமான் திருவடியைப் போற்றி புகழ்ந்து வழிபடும் பொழுது அவர்கள் மிகுந்த நாணத்துடன் வழிபாடு செய்வார்கள். “……

பொன் ஆர் சடைப் புண்ணியன் பொக்கம் மிக்கவர் பூவும் நீரும் கண்டு நக்கு நிற்பவர் அவர் தம்மை நாணியே.” – அப்பர் சுவாமிகள் – 5-90-9. “தேவர்கள் மிகுந்த நாணத்துடன் போற்றி புகழ்ந்து பாட, தமது ஒப்பற்ற திருவடியை தேவர்களுக்குக் காட்டாது மறைத்து கொண்டு, பேரின்ப பெருவீடளிக்கும் திருவடியை அடியவர்கள் இல்லங்கள்தோறும் எழுந்தருளி அடியவர்களுக்கு மலர்ப்பாதம் தந்தருள எழுந்தருளினார்…” (உறங்கி எழுந்தவளில் பதிலுரை) தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள் ஈசனார்க்கு அன்பு ஆர் யாம் ஆர் ஏலோர் எம்பாவாய் : தேசன் – ஒளி வடிவினன். அன்பு ஆர் – அன்பு மிகப்பொருந்திய, யாம் யார் – நாம் அல்லாது மற்று யார் அவர் அன்பர். “தோழியே நன்றாக கேள். ஒளி வடிவினரான சிவலோக நாயகன், தில்லைச் சிற்றம்பலத்துள் எழுந்தருளி திருநட்டம் பயிலும் ஈசனார்க்கு அடியவள் மட்டும் அன்பர் அல்ல. நாம் அனைவரும் அவரின் அன்பர்தாம்.” முழுவதும் ஓர் தொகுப்பாக : தோழியே நாம் இரவு பகல் என்று எப்போது பேசினாலும் நீ என்னுடைய அன்பு முழுவதும் மாசற்ற ஒளி வடிவினராக திகழும் எமது பரம்பொருளான சிவபெருமானுக்கு மட்டும் தான் என்று சொல்வாயே???!!!

ஆனால் இப்போது நீ மலர்கள் நிறைந்த மென்மையான படுக்கையின் மீது அன்பும், வைத்துக்கொண்டு இன்னும் உறக்கம் கலைந்து எழும்பாமல் இருக்கிறாயே!! அதுவெல்லாம் வெறும் பொய்யுரைகளா? ஒளிபொருந்தி அழகில் சிறந்த அணிகலண்களை அணிந்தவளே, விரைந்து எழுந்து வா. நீங்கள் பேசி விளையாடும் சொற்களில் இப்போது நீங்கள் பேசிய சொற்களும் சிலவோ? என்னோடு இவ்வாறு துடுக்குத்தனமாக பேசி விளையாடி ஏசும் இடம் பெருமானின் திருப்பெயரை பேசிக்கொண்டு இருக்கும் இந்த இடம் தானா கிடைத்தது உங்களுக்கு? தேவர்கள் மிகுந்த நாணத்துடன் போற்றி புகழ்ந்து பாட, தமது ஒப்பற்ற திருவடியை தேவர்களுக்குக் காட்டாது மறைத்து கொண்டு, பேரின்ப பெருவீடளிக்கும் திருவடியை அடியவர்கள் இல்லங்கள்தோறும் எழுந்தருளி அடியவர்களுக்கு மலர்ப்பாதம் தந்தருள எழுந்தருளினார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments