Sunday, March 15, 2026
HomeUncategorizedமாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை

மார்கழி மாதத்தில் இளம் பருவ மங்கையர் ஒன்றுக்கூடி தம்முடைய மற்ற தோழிகளின் இல்லந்தோறும் சென்று, அவர்களையும் எழுப்பி நீராட திருக்குளத்திற்க்கு அழைத்து செல்வதாக அமைந்துள்ளது திருவெம்பாவை பாடல்களாகும்.

மலபரிபாகம் அடைந்த ஆன்மா, ஆணவம், கண்மம், மாயையில் அழுந்திக் கிடக்கும் பக்குவம் அடையாத ஆன்மாவை எழுப்பி, பேரருளும், பெருங்கருணையும் பொழியும் இறைவனது திருவருளில் மூழ்கி திளைப்பதற்கு அழைத்துச் செல்வதாகவும் அமைந்துள்ளது திருவெம்பாவை ஆகும்.

“மல இருள் உற்று உறங்காமல் மன்னு பரி பாகர் அருள் செல முழுக வருகவெனச் செப்பல் திருவெம்பாவை.”
– திருப்பெருந்துறைப் புராணம்.

பாடல் எண் -3
முத்தன்ன வெண்ணகையாய் முன்வந் தெதிரெழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதன்என் றள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழவடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டாற் பொல்லாதோ
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்.

விளக்கவுரை :
உறங்கிய பெண்ணிற்கும், அவளை எழுப்பி நீராட அழைத்து செல்ல வந்த தோழிகளுக்கும் இடையே நடைபெறும் உரையாடலாக இந்த பாடல் அமைந்துள்ளது.

(தோழிகளின் உரையாடல்)
முத்து அன்ன வெண் நகையாய், முன்வந்து எதிர் எழுந்து :
முத்து அன்ன வெண் நகையாய் – முத்துக்களைப் போன்ற அழகிய வெண்மையாக பற்களை கொண்டு அழகாக சிரிப்பவளே.
இங்கு முத்து போன்ற வெண்மையாக பற்கள் சிரிப்புக்கு தொழில் ஆகுபெயராகி வந்துள்ளது.
முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை – என்று தெய்வயானை அம்மையாரை குறித்து அருணகிரிநாதரும் அன்னையின் சிரிப்பினையே அடையாளமாக குறித்துள்ளமையும் காணலாம்.

“முன் வந்து எதிர் எழுந்து – நீ எப்பொழுதும் எங்களுக்கு முன்னதாகவே துயில் எழுந்து வந்து எங்களின் முன்னால் வந்து நின்று கொண்டு…”

என் அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறி தித்திக்கப் பேசுவாய் :
என் அத்தன் – என் தந்தை.
ஆனந்தன் – தனு, கரண, புவண, போகங்கள் இல்லாததால் அவருக்கு துன்பம் என்பதே கிடையாது. பேரானந்தமயமானவர். இது சிவபெருமானின் எட்டு குணங்களில் ஒன்றாகும்.
அமுதன் – அமுதத்தை போன்றவர்.
அள்ளூறி – இறைவனை நினைத்த மாத்திரத்தில் வாயில் ஊறும் அமுத நீர்.

“என் தந்தை ஆனந்த மயமானவர், அவர் அமுதத்தை போன்றவர் என்று வாயில் அமுத நீர் ஊறத் தித்திக்கப் பேசுவாயே…”

வந்து உன் கடை திறவாய் :
கடை – வீடு.
“இன்று உனக்கு முன்பாக நாங்களெல்லாம் எழுந்து வந்து விட்டோம். நீ உறக்கத்தை விடுத்து எழுந்து வந்து உனது வீட்டின் வாயிற் கதவைத் திறப்பாயாக.”

(உறங்கிய தோழியின் உரையாடல்)
பத்து உடையீர் ஈசன் பழவடியீர் பாங்கு உடையீர் :
பத்து உடையீர் – அடியார்களுக்குரிய பத்து இலக்கணம் உடையவர்களே.
ஈசன் பழவடியீர் – பழுத்த மனத்து அடியார் பெருமக்களே.
பாங்கு உடையீர் – அடியார்க்குரிய ஒழுங்கு எல்லாம் நிரம்பிய மெய்யடியார்கள்.

“அடியார்களுக்குரிய பத்து இலக்கணம் உடையவர்களே, பழுத்த மனத்து அடியார் பெருமக்களே, அடியார்க்குரிய ஒழுங்கு எல்லாம் நிரம்பிய மெய்யடியார்களே…”

சிவனடியார்களுக்குரிய பத்து இலக்கணம் :
புற இலக்கணம் பத்தும் எனவும், அக இலக்கணம் பத்தும் ஆகும்.

புறத்திலக்கணம் பத்து :
1) திருநீறும் கண்டிகையும் அணிதல்,
2) பெரியோரை வணங்கல்,
3) சிவனைப் புகழ்ந்து பாடுதல்,
4) சிவநாமங்களை உச்சரித்தல்,
5) சிவபூசை செய்தல்,
6) சிவபுண்ணியங்களை செய்தல்,
7) சிவபுராணங்களை கேட்டல்,
8) சிவாலய வழிபாடு செய்தல்,
9) சிவனடியாரிடத்தன்றி வேறிடத்தில் உண்ணாமை,
10) சிவனடியார்க்கு வேண்டுவன கொடுத்தல் என்பன.

அகத்திலக்கணம் பத்து :
சிவபெருமானது புகழை கேட்கும் பொழுது…
1) மிடறு விம்மல்,
2) நாத்தழுதழுத்தல்,
3) இதழ் துடித்தல்,
4) உடல் குலுங்கல்,
5) மயிர் சிலிர்த்தல்,
6) வியர்த்தல்,
7) சொல்லெழாமை,
8) கண்ணீர் அரும்புதல்,
9) வாய்விட்டழுதல்,
10) மெய்மறத்தல் என்பன.
– ஆதாரம் – உபதேச காண்டம் – சிவத்திரு. அருணைவடிவேலு முதலியார் உரை.

புத்தடியோம் புன்மை தீர்த்து ஆட்கொண்டால் பொல்லாதோ :
புத்தடியோம் – புது அடியார்கள்.
நீங்கள் எல்லோரும் பழுத்த மனத்து அடியார்கள் ஆனால் நாமோ அவ்வாறு இல்லை. நாம் புது அடியார் என்று சொல்லுதல்.
புன்மை தீர்த்து – தூங்கிவிட்ட என்னுடைய குற்றத்தை பொறுத்து கொண்டால்.
பொல்லாதோ – அதனால் தீமை எதுவும் உண்டோ.

“இவ்வாறு என்னைப் போன்ற புதிய அடியார்கள் செய்த குற்றத்தைப் பழ அடியாரான தாங்கள் பொறுத்து ஆட்கொண்டால் அதனால் தீமை எதுவும் உண்டாகுமோ…”

(இவ்வாறு அவள் சொல்லியவுடன் அதற்குத் தோழிகள் மறுமொழி)

எத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியோமோ :
எத்து – எத்தகையது.
நின் அன்புடைமை எத்தோ.

“பெண்ணே எம்பெருமான் மீது நீ கொண்டுள்ள அன்பு எத்தகையது நாங்கள் அறியாதவர்களா என்ன?”

சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை :
“பெருமான் மீது மெய்யன்புடைய எந்த பெண்ணாவது மார்கழியில் பாவை நோன்பு நோற்கும் போது சிவனார் திருப்புகழை பாடாமல் இவ்வாறு (உன்னைப்போல் உறங்கிக் கொண்டு) இருப்பார்களா?”

இத்தனையும் வேண்டும் எமக்கு ஏல் ஓர் எம்பாவாய் :
“உன்னை எழுப்ப வந்த எங்களை நீங்கள் பழவடியார் நான் புத்தடியார் என்று சொல்லி வேறு ஏளனம் பேசுகிறாயே, எங்களுக்கு இந்த சொல் தேவைதான். பேசியது போதும் பெண்ணே நீ விரைவாக எழுந்து வா.”

இத்தனையும் வேண்டும் என்பதற்கு…
ஏதோ இன்று ஒரு நாள் அசந்து தூங்கிவிட்டேன். அதற்கு இப்படி எல்லாம் பேசுகிறீர்களே, எனக்கு இந்த சொல் தேவைதான் என்றும் பொருள்கொள்வாருண்டு.

முழுவதும் ஓர் தொகுப்பாக :

முத்துக்களைப் போன்ற அழகிய வெண்மையாக பற்களை கொண்டு அழகாக சிரிப்பவளே, நீ எப்பொழுதும் எங்களுக்கு முன்னதாகவே துயில் எழுந்து வந்து எங்களின் முன்னால் வந்து நின்று கொண்டு, என் தந்தை ஆனந்த மயமானவர், அவர் அமுதத்தை போன்றவர் என்று வாயில் அமுத நீர் ஊறத் தித்திக்கப் பேசுவாயே…!!!
இன்று உனக்கு முன்பாக நாங்களெல்லாம் எழுந்து வந்து விட்டோம். நீ உறக்கத்தை விடுத்து எழுந்து வந்து உனது வீட்டின் வாயிற் கதவைத் திறப்பாயாக.
அடியார்களுக்குரிய பத்து இலக்கணம் உடையவர்களே, பழுத்த மனத்து அடியார் பெருமக்களே, அடியார்க்குரிய ஒழுங்கு எல்லாம் நிரம்பிய மெய்யடியார்களே, இவ்வாறு என்னைப் போன்ற புதிய அடியார்கள் செய்த குற்றத்தைப் பழ அடியாரான தாங்கள் பொறுத்து ஆட்கொண்டால் அதனால் தீமை எதுவும் உண்டாகுமோ???
பெண்ணே எம்பெருமான் மீது நீ கொண்டுள்ள அன்பை நாங்கள் அறியாதவர்களா என்ன?
பெருமான் மீது மெய்யன்புடைய எந்த பெண்ணாவது மார்கழியில் பாவை நோன்பு நோற்கும் போது சிவனார் திருப்புகழை பாடாமல் இவ்வாறு இருப்பார்களா?
உன்னை எழுப்ப வந்த எங்களை நீங்கள் பழவடியார் நான் புத்தடியார் என்று சொல்லி வேறு ஏளனம் பேசுகிறாயே, எங்களுக்கு இந்த சொல் தேவைதான். பேசியது போதும் பெண்ணே நீ விரைவாக எழுந்து வா.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments