இன்றைய கேரள மாநிலத்தில் காலடி கி.பி. 4 அல்லது 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக வரலாற்றாய்வாளர்களால் வரையறுக்கப் படுபவர் ஆதிசங்கரர்.
பரம்பொருளான சிவபெருமானின் அவதாரமாகக் கருதப்படுவர். தனது எட்டாவது வயதிலேயே துறவறம் மேற்கொண்ட “ஆதிசங்கரர்” தனது வாழ்நாளில் பல பிறவிகளில்கூட செய்ய இயலாத காரியங்களை தனது ஆன்மீக வாழ்வில் சாதித்தவர். .
சனாதனதர்மத்தின் ஷண்மதங்களின் நெறிகளை ஆழமாக மக்களிடம் கொண்டு சேர்த்தவர். இன்றும் சனாதன தர்மம் உயிர்ப்புடன் விளங்குதற்கு ஆதிசங்கரர் உண்டாக்கிய மறுமலர்ச்சிகளே காரணம்.
தெய்வீக அவதாரமாகவே தோன்றிய அவர்தம் கைங்கர்யத்தால் யந்திரங்கள் பிரதிஷ்டை செய்த திருத்தலங்கள்,
கால்பதித்த நிலமெல்லாம் பல நூற்றாண்டுகளைக் கடந்தும் கூட இன்றும் ஆன்மீக அதிர்வலைகளை வீசிக்கொண்டேதான் இருக்கின்றன. சென்னைக்கு மிக அருகிலுள்ள மாங்காடு என்னும் ஊரில் தத்துவ விசாரங்களைக் குறித்து கபாலிக மார்க்கத்தை தனது வாதத்திறமையால் வென்றவர்.
கனகதார ஸோத்திரம் பாடியதன் மூலம் நெல்லிக்கனி மழையை வரவழைத்து பக்தியில் சிறந்த ஏழைப் பெண்ணிற்கு அருள்செய்தவர். சனாதன தர்மத்தில், சந்நியாசம் ஏற்பவர்கள் தன் இரத்தபந்தங்களின் ஈமக்கிரியைகளில் பங்கேற்பதில்லை என்கிற நியதி உள்ளது.
ஆனால், ஆதிசங்கரர் தனது தாயாரின் இறுதிசடங்கினை தானே செய்துமுடித்தார். மேலும் கேரள மாநிலத்தில் உள்ள திருவல்லா என்னும் ஊரில் அமைந்துள்ள ”பரசுராமர் ” திருக்கோயிலில் தனது தாயாருக்கு தர்ப்பணமும் செய்துள்ளார் என்பது கதையல்ல. உண்மை வரலாறு.
இத்தகைய பல சிறப்புகள் பெற்ற “ஆதிசங்கரர்” தன் 32 வது வயதிலேயே ”முக்தி” பெற்றுவிட்டவர் என்பது அவரைப் பற்றி புதிதாக கேள்விப்படும் தலைமுறைக்கு மிகவும் ஆச்சரியமான செய்தியாகும். அவர் முக்தி பெற்ற புண்ணிய பூமியானது பாரதத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமான உத்ரகாண்ட் மாநிலத்தில் உள்ள ”கேதார்நாத்” .
இந்த ”கேதார்நாத்” பூமியில் ஆதிசங்கரரின் அரிய பணிகளுக்கு அர்ப்பணம் செய்யும் வகையில் அவரது நினவினை என்றென்றும் பூவுலகம் போற்ற, ஒரு சிலை நிறுவ, மத்திய அரசு அரிய முயற்சி ஏற்கனவே எடுத்தது.

