Thursday, February 5, 2026
HomeUncategorizedஅரசு கள்ளர் பள்ளிகளில் மாணவர்களின் கல்வி பாதிப்பு - டிடிவி. தினகரன் வேதனை!

அரசு கள்ளர் பள்ளிகளில் மாணவர்களின் கல்வி பாதிப்பு – டிடிவி. தினகரன் வேதனை!

அரசு கள்ளர் பள்ளிகளில் நிலவும் ஆசிரியர் காலிப்பணியிடங்களால் மாணவர்களின் கல்வித்திறன் பாதிப்பு – காலிப்பணியிடங்கள் நிரப்பும் வரை அப்பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமன முறையை திமுக அரசு அமல்படுத்த வேண்டும்.

தேனி, மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் செயல்பட்டு வரும் அரசு கள்ளர் பள்ளிகளில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்கள் பல வருடங்களாக நிரப்பப்படாமலே இருப்பதால் அப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் சிரமத்திற்குள்ளாகி இருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

மதுரை தும்மக்குண்டு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியர் இல்லாத காரணத்தினால் நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் தமிழ் பாடத்தில் மட்டும் 9 மாணவர்கள் தோல்வி அடைந்த நிலையிலும், போதுமான ஆசிரியர்களை நியமிக்க முன்வராத திமுக அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை கலந்தாய்வின் மூலமாக நிரப்பும் வரை பள்ளி மேலாண்மைக் குழு மூலமாக தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கலாம் என்ற பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவு அரசு கள்ளர் பள்ளிகளில் நடைமுறைக்கு வராமல் இருப்பதாக புகாரும் எழுந்திருக்கிறது.

கள்ளர் பள்ளிகளில் பல ஆண்டுகளாக காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டிய திமுக அரசு, அதற்கு மாறாக வேறு பள்ளிகளில் இருந்து ஆசிரியர்களை வரவழைத்து பாடம் நடத்த நிர்பந்திப்பது அவர்களுக்கு பணிச்சுமையை ஏற்படுத்துவதோடு மாணவர்களின் கல்வித்திறனும் பாதிக்கப்படுகிறது.

எனவே, ஆசிரியர்கள் பற்றாக்குறை, கல்வி கற்பிப்பதில் சுணக்கம் என பல்வேறு காரணங்களால் அரசு கள்ளர் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு அப்பள்ளிகளுக்கு போதுமான ஆசிரியர்களை உடனடியாக நியமிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments