மொழி தெரியாதவர்களையும் ஒன்று சேர்க்கும் சக்தி இசைக்கு உண்டு. ஆகவே இசையை ஒரு உலக மொழி என்கின்றனர். இசையே நாட்டியத்திற்கு அடிப்படை. மனிதர்கள் அனைவரையும் ஆட்டி வைப்பது இசை. இசையை ரசிக்காதவர்கள் உலகில் யாரும் இருக்க முடியாது. உலகம் முழுவதும் உள்ள இசையமைப்பாளர்கள் 1982ஆம் ஆண்டு ஜூன் 21 அன்று பிரான்சில் கூடினர். அந்த நாளையே உலக இசை நாளாக அறிவித்தனர்.
இசையின் ஆழத்தை உணர்ந்த ஃபிரெஞ்ச் அரசியல்வாதி ஜாக் லாங் மற்றும் இசையமைப்பாளர் மௌரிக் ஃபிளியூரெட் இருவரும் இசையின் முக்கியத்துவத்தை அனைவரும் தெரிந்துகொள்ளவே இந்நாளை உருவாக்கினார்கள். அதன்பிறகே பாரிஸில் 1982-ம் ஆண்டு முதல் இசை நாள் கொண்டாடப்பட்டது. அப்படி என்னதான் நன்மைகள் என்று பார்க்கலாம்.
மனநிலையை உற்சாகமாக்கும்:
இசையைக் கேட்பதால், மூளை மகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடிய டோபமைன் என்ற ஹார்மோனை சுரக்கச் செய்கிறது. இதனால் இசையைக் கேட்கும்போது மகிழ்ச்சி, ஃபீல் குட் உணர்வு தோன்றுகிறது என்று சில ஆய்வுகள் கூறுகின்றன.
மனஅழுத்தம் குறையும்:
மென்மையான இசையைக் கேட்கும்போது மனஅழுத்தத்தின்போது சுரக்கக் கூடிய கோர்டிசோல் (Cortisol) என்ற ஹார்மோன் சுரப்பது குறைவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால்தான் எந்த சோகமாக இருந்தாலும் பிடித்த இசையைக் கேட்கும்போது மனது இலகுவாகிறது.
பதட்டம் குறையும்:
புற்றுநோயில் இருப்போர் பலருக்கு இசையைக் கேட்க பரிந்துரைத்ததில் அவர்களுக்கு இருக்கும் பதட்டம் குறைந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன.
மனச்சோர்வு குறையும்:
உலகில் 350 மில்லியன் மக்கள் மனச் சோர்வால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அவர்களுக்கு இசையை முதல் மருந்தாக மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். அவ்வாறு தூங்கும் முன் இசைக் கேட்டுக்கொண்டே தூங்கினால் கவலைகள் மறந்து ஆழ்ந்து தூங்குவதாக நோயாளிகள் தெரிவித்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
உடற்பயிற்சிக்கு ஊக்கம் :
உடற்பயிற்சியின் போதும், ஜாகிங், நடைப்பயிற்சி இப்படி எதுவாயினும், இசை கேட்டுக் கொண்டே செய்தால் தொய்வில்லாமல் சுருசுருப்படையச் செய்யும்.
ஞாபகத்திறன் அதிகரிக்கும்:
நாம் கேட்கும் இசை அல்லது பாடல் வரிகள்களை எப்போது கேட்டாலும் நினைவுக்கு வருகிறது என்றால், நம் ஞாபகத்திறனின் வளர்ச்சியை தூண்டப்படுவதே காரணம். இதனால் நம்முடைய ஞாபகசக்தி அதிகரிக்கும்.

