திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள், சங்கராபரணம், வசந்த மாளிகை போன்று 600க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் ‘திரை இசைத் திலகம்’ கே.வி. மகாதேவன். அவர் வாழ்விலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய சில பாடங்கள் உண்டு.
பிறரிடம் கருணை நோக்கு தேவை
கே.வி.மகாதேவனிடம் ஒரு பெரிய இசைக்குழு உண்டு. அந்த இசைக்கலைஞர்களை எப்போதுமே அவர் மிகக் கனிவுடன் நடத்துவார். அவர் இசையமைக்கும் சில திரைப்படங்களுக்குச் சில இசைக்கருவிகள் தேவைப்பட்டிருக்காது. என்றாலும்கூட தனது ஒவ்வொரு திரைப்படத்திற்கும் தன் குழுவில் உள்ள அம்புட்டு இசைக் கலைஞர்களுக்கும் ஆதரவு அளிச்சு வந்தார் அவர்.
நாம் பேச வேண்டாம், நம் சாதனைகள் பேசட்டும்
காலத்தால் அழிக்க முடியாத பல காவியப் பாடல்களைத் தன் இசையமைப்பில் அளித்தவர் கே.வி.மகாதேவன். ஆனால், அவர் தன்னைப்பற்றி வெளி உலகத்துக்கு மிகமிகக் குறைவாகவே வெளிப்படுத்தியிருக்கிறார். பேட்டிகளுக்கு அவர் ஒப்புக் கொண்டதேயில்லை
வெட்கம் வேண்டாம்
பள்ளிப்படிப்பு ஏறவில்லை. துவக்கத்தில் பாய்ஸ் கம்பெனி நாடகங்களில் பெண் வேஷங்களில் நடித்த போது மாதச்சம்பளம் 15 ரூபாய். கதாகாலட்சேபம் நடந்தபோது அதில் பின்பாட்டுப் பாடியிருக்கிறார். வேறு வழியில்லாமல் சென்னைக்கு வந்த நாட்களில் மிகவும் சிரமப் பட்டிருக்கிறார்.
சென்னையில் பல ஹோட்டல்களில் சர்வராக வேலை பார்த்ததை அவரே பிந்தைய நாட்களில் சொல்லியிருக்கிறார். வெறும் அரைக்கால் ட்ரௌசர். மேலே ஒரு பனியனோடு துறைமுகத்திலிருந்து சைக்கிளில் சூளைக்குப் போய் லாரி ஆபிஸில் அனுப்பும் சரக்குகளைப் பற்றிய துண்டுச் சீட்டைக் கொடுத்துவிட்டு வரும் வேலையும் பார்த்திருக்கிறார்.பலப் பல வேலைகள். அதற்காக அப்போது அவருக்குக் கிடைத்தவை பத்தணா தான். “அதைச் சொல்ல நான் வெட்கப்பட மாட்டேன். திருடாம, பொய் சொல்லாம, பிச்சை எடுக்காம, எந்தத் தொழில் செஞ்சு சம்பாதிச்சாலும் தப்பில்லை’’ என்றிருக்கிறார் தனது கடந்த காலத்தை நினைவுகூரும்போது.
சிறப்பான நடத்தை எதிர்பாராத கோணங்களிலும் உதவும்
கே.வி.மகாதேவனின் சக காலத்தில் விஸ்வநாதன் – ராமமூர்த்தி இணை, திரையிசையில் அவருக்கு சமமாக ஆட்சி செய்யத் தொடங்கிய கால கட்டம் வந்தது. ஒரு முறை காலகாலமாக கே.வி.மகாதேவன் இசையமைப்பில் வெளியான படங்களில் நடித்த எம்ஜிஆர் தனது அடுத்த படத்துக்கு எம்.எஸ்.விஸ்வநாதனை இசை அமைக்கச் சொல்லி அணுகினார். எம்.எஸ்.விஸ்வநாதனுக்கும் ஆசைதான். ஆனால் அவர் தன் தாயிடம் இதுபற்றி கூறிய போது பளார் என்று அவரை அறைந்தாராம் அவரது தாய். “மகாதேவன் தொடர்ந்து இசையமைக்கும் கம்பெனிகளுக்கு நீயேன் இசையமைக்க ஒப்புக் கொள்கிறாய்? அது கூடாது” என்றாராம். (இதைத் தொடர்ந்து அந்த வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டார் விஸ்வநாதன்). அப்படி ஒரு நற்பெயரை சம்பாதித்து வைச்சிருந்தார் கே.வி. மகாதேவன்.
எப்போதும் நம்மை முதன்மைப்படுத்திக் கொண்டிருக்கக் கூடாது
பல பிரபல திரை இசையமைப்பாளர்கள் தங்களது பெரும்பாலான பாடல்களுக்கு ‘மெட்டுக்குப் பாட்டு’ எனும் வகையில்தான் இசை அமைப்பது வழக்கம். அதாவது இசைக்குத் தகுந்தபடி பாடல் வரிகளை எழுத வேண்டும். ஆனால் இதில் கே.வி.மகாதேவன் நேர்மாறானவர். கிட்டத்தட்டத் தனது அனைத்துத் திரைப்பட பாடல்களுக்கும் வரிகள் எழுதப்பட்ட பிறகுதான் அவற்றுக்கு ஏற்றவாறு இசையமைச்சிருக்கார். இத்தனைக்கும்
கே.வி.மகாதேவனின், காதல் பாடல்கள் பலாச்சுளை. சோகப்பாடல்கள் வீணையின் இதம். உற்சாகப் பாடல்கள், தபேலாவின் வேகம். தத்துவப் பாடல்கள் புல்லாங்குழலின் மென்மை. இப்படித்தான், கே.வி.மகாதேவனின் பாடல்கள், ஹிட்டடித்தன. ‘உன்னைக்காணாத கண்ணும் கண்ணல்ல’ என்று உருகவைப்பார். ’இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்’ என்று கிறங்கடிப்பார். ’நதி எங்கே போகிறது கடலைத்தேடி’ என்றும் ‘பறவைகள் பலவிதம்’ என்றும் ‘கண்ணெதிரே தோன்றினாள் கனிமுகத்தைக் காட்டினாள்’ என்றும் ஒவ்வொருவிதமாக, பாடல்களைக் கொடுத்த கே.வி.மகாதேவன், பாட்டுக்குத்தான் மெட்டு என்பதில் உறுதியாக இருந்தார்.
முதல் தேசிய விருது இசை அமைப்பாளர்
நாற்பதுகளின் தொடக்கத்தில் தொடங்கிய மகாதேவன் மாமாவின் இசைப்பயணம் எழுபதுகளின் இறுதி வரை தொடர்ந்தது. 1967-ம் ஆண்டில், இசையமைப்பாளர்களுக்கும் தேசிய விருது வழங்கலாம் என மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதைப் பெற்ற முதல் இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் தான்!
1918-ம் ஆண்டு மார்ச் 14-ம் தேதி பிறந்தவர் கே.வி.மகாதேவன். நூற்றாண்டுகளைக் கடந்தும் பேசப்பட்டுக் கொண்டே இருக்கிற, போற்றப்பட்டுக் கொண்டே இருக்கிற, கொண்டாடிக்கொண்டே இருக்கிற மகா இசைமேதை கே வி மகாதேவன் ..

