மாதாவான தாயும், பிதா என்கிற தந்தையும் இல்லையேல் இப்பூலகில் நம் பிறப்பில்லை! அப்படிப்பட்ட கண்கண்ட தெய்வங்கள் நாம் நற்சிந்தனை, நல்லறிவு, நல்லெண்ணம், நல்லொழுக்கம் ஆகியவற்றுடன் உலகியல் வாழ்வியலில் வாழ்வாங்குவாழ “குரு”வை அறிமுகப்படுத்துகிறார்கள். அந்த குருவே நல்வாழ்விற்கு வழிகாட்டுவதுடன் மனிதன் தெய்வீகநிலைக்கு உயரவும் வழிகாட்டுகிறார்கள்.
”கு”என்றால் இருள். “ரு” என்றால் நீக்குதல் என்று பொருள். நம் அறிவினை கவ்வியிருக்கும் “அஞ்ஞானம்” என்னும் இருளை அகற்றுவதால் “குரு” என்றழைக்கிறோம்! ஒவ்வொரு குழந்தையின் திறன் மேம்பாட்டிலும் குருவின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்து தர்மத்தில் “குரு”விற்கு எப்போதும் உயரிய இடம் உண்டு.
கற்றுக்கொடுப்பவர் குரு. அவரிடம் வித்தைகளைக் கற்றுக்கொள்பவன் சீடன். பெரும்பாலும் அறிவில் பிரகாசிக்கும் குருவானவர் வயதில் பெரியவராக இருப்பது சகஜமான ஒன்று. ஆனால், அதிலும் விதிவிலக்காக நம் முன்னோர்கள் சில உதாரணங்களின் மூலம் வயதால் சிறியவர்களையும் குருநிலைக்கு ஒப்பாக கருதி வணங்கியிருக்கிறார்கள்!
பிரணவ மந்திரத்தின் பொருளை விளக்கத் தெரியாததால் தமிழ்க்கடவுள் முருகனால் படைப்புக்கடவுள் பிரம்மா சிறைப்பிடிக்கப்பட்டார். பிரம்மனை விடுவிக்கும்படி சிவன் ஆணையிட, அதற்கு மறுப்பு தெரிவித்த முருகனிடம் சிவபெருமானே சிக்கும் நிலை ஏற்பட்டது. ஆகவே, பிரணவத்தின் பொருளை தனக்கு உபதேசிக்குமாறு சீடனுக்குரிய மனோபாவத்துடன் சிவன் மண்டியிட்டு வேண்டினார். அதை ஏற்றுக்கொண்ட அவருடைய மைந்தன் முருகன் தானே குருவாக அமர்ந்து பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசித்தார். இதனாலேயே ”சிவபெருமானுக்கே குருவாக விளங்கிய நாதன்” என்கிற பொருளில் முருகபெருமானுக்கு “சிவகுருநாதன்” என்கிற பெயரும் உண்டு. குழந்தையான முருகன் குருவாக விளங்கிய இடமே, இன்று முருகனின் அறுபடை வீடுகளுள் ஒன்றான ”சுவாமிமலை!”
இதே தமிழ்க்கடவுள் முருகன்தான் தமிழ்மூதாட்டி ஒளவையிடம் சிறுவனாகத் தோன்றி “சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?” என்று கேட்டு வியக்க வைத்தவன்!
இன்றைய சீர்காழியில் பிறந்தவர் திருஞானசம்பந்தர். இவர் சிறு குழந்தையாக இருந்தபோது, பசியால் வாடித்துடித்தபோது பார்வதி தேவியே நேரில் பிரசன்னமாகி “ஞானப்பால்” ஊட்டியதாகவும், அந்த கணமே அவர்
”தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசிஎன் உள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த
பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே” எனும் தேவாரப்பதிகத்தைப் பாடத் தொடங்கியது வரலாறு.
திருப்புகழ் அருளிய அருணகிரிநாதர், திருவருட்பா அருளிய வடலூர் வள்ளலார் முதலானோர் ”முருகப்பெருமானே திருஞானசம்பந்தராக அவதரித்தார்!” என்ற நம்பிக்கை கொண்டிருந்தனர்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த திருஞானசம்பந்தர் என்ற பாலகனின் அருமை பெருமைகளை வயதில் பன்மடங்கு பெரியவரான திருநாவுக்கரசர் உணர்ந்து, அவரை ஒரு குருவாக வரித்தெடுத்து, அவருடன் பல்வேறு திருத்தலங்களுக்கும் சென்று சிவபெருமானைப் போற்றும் பதிகங்கள் பாடினார் என்பது வரலாற்று உண்மை. வேதாரண்யம் என்னும் ஊரில் உள்ள சிவன் கோவிலின் கதவுகளை பதிகங்கள்பாடியே திறந்தவர்கள் இவ்விருவரும்!
சங்ககாலத்தைச் சேர்ந்த சோழமன்னன் ”கரிகாலச்சோழன்”. அவனுடைய தந்தையார் அரசவையில் இல்லாதபோது நீதிகேட்டு இருவர் வந்தனர். தானே அவர்களின் வழக்கை விசாரித்து தீர்ப்பு சொல்வதாக கரிகாலச்சோழன் கூறுகிறான்! வந்தவர்களோ வயதால் மிகவும் மூத்தவர்கள். அவர்கள் ”சிறுவனான இவனால் எப்படி நல்ல தீர்ப்பு கூறமுடியும்?!” என தயங்கி நின்றனர். அவர்களின் எண்ண ஓட்டத்தை உணர்ந்து கொண்ட சிறுவன் கரிகாலசோழன் அவர்களிடம், வயதால் முதிர்ந்த பெரியவரை சபைக்கு அனுப்பி வைப்பதாகவும், அவர் நல்லமுறையில் வழக்கைத் தீர்த்து வைப்பாரென்றும் கூறிச்சென்றான்.
சிறுவன் உள்ளே சென்று சில மணித்துளிகள் கடந்தன. அந்த அவைக்குள் தள்ளாடும் வயதினராய் ஒரு பெரியவர் வந்தார். வழக்கை விசாரித்தார். வழக்குடன் வந்த இருதரப்பும் மனமுவந்து ஏற்கும்வகையிலான தீர்ப்பினை வழங்கினார். அவர்கள் அந்த பெரியவரைக்கொண்டாடினர். அப்போதுதான் அந்த பெரியவர் தன் வேஷத்தைக்கலைத்தார். அந்த பெரியவர் வேறுயாருமில்லை. சிறுவன் கரிகாலசோழனே! ”அறிவிற்கு வயது ஒரு பொருட்டல்ல..” என்பதை உலகுக்கு உணர்த்தியது கரிகாலனின் கதை!
சென்னையில் ஒருவர் ஆன்மீகச் சொற்பொழிவாற்றுவதில் பெயர் பெற்றவர். அவர் தன் பராமரிப்பில் வயதால் மிகவும் சிறியவனான தன் சொந்த சகோதரனை வளர்த்து வந்தார். ஒருநாள் அவர் ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்க இயலாமல் போனது. ஆனாலும் அவர் சார்பில் அந்த சிறுவன் நிகழ்ச்சியில் எதிர்பாராத விதமாகப் பங்கேற்று, கேட்டவர்கள் உள்ளம் நெகிழும் வகையில், பக்திரசம் சொட்டச் சொட்ட, தமிழ்மணம் கமழ, பலமணிநேரம் ஆன்மீக அன்பர்களை தன் ஞானத்தால் கட்டிப்போட்டான். அத்தகைய பேராற்றல் மிகுந்த ஞானம் அவனுக்கு!
அந்த சிறுவன்தான் பின்னாளில் சமரச சுத்த சன்மார்க்கத்தை தோற்றுவித்து, வடலூரில் அணையாத அடுப்பினைமூட்டி, பசிப்பிணி போக்கிய ”வள்ளலார்” என்றழைக்கப்படும் “இராமலிங்க சுவாமிகள்!”
கடல்கடந்த வாணிபத்தால் நாடாண்ட சோழமன்னனுக்கு நிகரான செல்வ வளம் படைத்தவர்! அறியாதவர் எவருமே இல்லை என்கிற அளவிற்கு காவிரிப்பூம்பட்டினத்தில் பிரபலமானவர்! அத்தகைய சிறப்புகள் வாய்ந்தவர் “திருவெண்காடர்!” அவருடைய மகன் ஒரு சிறுவன். வாணிபம் முடித்து வந்தான்.
”அவன் ஈட்டிவந்த செல்வம் எங்கே?” என பேராவலோடு கேட்கிறார் திருவெண்காடர். அப்போது அவன் தந்துவிட்டுப்போனதாக ஒரு சிறு பெட்டியை நீட்டுகிறார்கள். அதைத்திறந்து பார்த்தபோது காதற்ற ஒரு ஊசியும், சிறு நூலும் அவர்றுடன் பனை ஓலை நறுக்கும் இருக்கிறது. அதை எடுத்து படித்துப் பார்க்கிறார். அதில் “காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே!” என எழுதப்பட்டிருக்கிறது! அதாவது ஒருவர் இறந்த பின், ஒரு காது அறுந்த ஊசி கூட அவருடன் செல்வதில்லை. அது பயனற்றது. அதுபோல் உலகத்தில் எவ்வளவு பொருள் சேர்த்தாலும், அதனால் ஒருபயனும் விளையப்போவதில்லை! எனவே இதை நன்கு உணர்ந்து, உலகப் பற்றை விட்டு, இறைவனை வழிபட வேண்டும் என்பதே அந்த வரிகளின் கருத்து.
அதை படித்துப்பார்த்த மாத்திரத்தில் தன் மூளைக்குள் ஒரு மின்னல் வெட்டியது போல் உணர்ந்தார் திருவெண்காடர். அந்த கணமே ஞானம் கிட்டியது. தன் ராஜவேஷத்தைக் கலைத்துவிட்டு, தன் இடுப்பில் சிறு துண்டுமட்டும் அணிந்து கொண்டு, வீட்டை விட்டு வெளியேறி ஞானரசம் சொட்டச் சொட்ட பாடல்கள் பாடி ”பட்டினத்தார்” என பெயர் பெற்றார்!
ஞானம் தந்ததாக மேலே சொல்லப்பட்டவர்கள் சிறுவர்களே! பெண் குழந்தைகளைப்பற்றிய பெருமைகளே இல்லையா? என்று கேட்டால் ”இருக்கின்றன” என்பதே பதில்!
மதுரையில் மீனாட்சி அம்மனின் பக்தனாக விளங்கினார் ஒரு ஆங்கிலேய அதிகாரி! அவன் பெயர் ரவுஸ் பீட்டர்.
ஒருநாள் இரவு ரவுஸ் பீட்டர் அவருடைய மாளிகையில் நன்றாக படுத்து உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது ஒரு சிறுமி ரவுஸ் பீட்டர் ஐ வந்து எழுப்புகிறாள். அவரை எழுப்பி, ‘வா! உடனேயே மாளிகையை விட்டு வெளியே போகணும்’ என்று அவரது கையை பிடித்து வெளியே கூட்டிச் செல்கிறார். இரண்டு பேரும் மாளிகையைவிட்டு வெளியே சென்றதும், ஒரு பெரிய இடி மாளிகையைத் தாக்கி தரை மட்டமாக்குகிறது. இதை பார்த்த ரவுஸ் பீட்டருக்கு ஆச்சர்யம்! தான் உள்பக்கமாக தாழிட்டிருந்த அறைக்குள் சிறுமி எப்படி வந்திருப்பாள்? என்று எண்ணிக்கொண்டே அந்த சிறுமியின் கால்களைக் கவனிக்கிறார்.
அவள் கால்களில் ஷூ, செருப்பு என்று எதுவுமேயில்லை. வெறுங்காலில் நடந்து சென்று கொண்டிருக்கிறாள்.
இவரும் அந்த சிறுமியை பின்தொடர்ந்து போய்க்கொண்டிருக்கிறார். அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்கிறது! அந்த சிறுமி மீனாட்சி அம்மன் கோவில் வாசலில் சென்று மறைந்துவிடுகிறாள்!
அப்போது தான் அவருக்குப் புரிகிறது அவருடைய உயிரை காப்பாற்றியது அந்த மதுரை மீனாட்சியம்மன் தான் என்பது! இது உண்மை வரலாறு!
குமரகுருபரர் என்கிற புலவரின் பிள்ளைத்தமிழ் நூல் கேட்டு மீனாட்சியம்மை முத்துமாலையை பரிசாக வழங்கியிருக்கிறாள்!

இவைபோன்று இன்னும் எண்ணற்ற உதாரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்!
பேரறிவின் முதிர்ச்சியே”ஞானம்!” அது ஒருவிதமான பண்பட்ட பக்குவ நிலை. ஒருவருக்கு அது கைகூடிவிட்டால் அதன்பிறகு எது குறித்தும் பதற்றம் இருக்காது! மகிழ்ச்சியுமில்லை! துக்கமுமில்லை! மனதிலே குழப்பங்கள் இல்லை! அது ஒரு தெளிந்த நீர்நிலை! அந்த நிலையானது வெறும் உலகியல் பற்றினை விட்டொழிப்பதில்லை! தான் கற்ற வித்தையில்.. தான் கற்ற கல்வியில்.. தன்னுடைய ஆன்மீகச்சிந்தனையில்.. என பலவாறாக இருக்கலாம். இப்படிப்பட்ட ஞானம் பலநாள் பயிற்சியால் கிடைக்கலாம்! சிலருக்கு எளிய முயற்சியால் கைகூடலாம்!
அத்தகைய ஞானம் யாரால்? எப்போது? எவ்விடத்தில் கிட்டும்? என்பதை யாராலும் உறுதியாக கூறமுடியாது. ஞானத்தை வழங்குபவர் வயதால் மூப்படைந்தவராக இருக்கக்கூடும். இளையவராகவும் இருக்கக்கூடும். அதற்கென வயது வரம்பு கிடையாது. அவர் ஆணாக, பெண்ணாக, அல்லது இருபாலினமும் இணைந்தவராகவும் இருக்கக்கூடும். இதை உணர்ந்துவிட்டால் பக்குவம் தானாக வாய்க்கும்.
ஆகவே, சிறியோர் சொற்களிலும் சிந்தனை மிளிரும் என்பதை உணர்வோம். அவர்கள் வயதால் இளையவர்களாக இருக்கலாம். அவர்களால் ஞானம் விளையும்போது அவர்களும் குருநாதர்களே! இதை உணர்ந்து கொண்டால் ஆணவம் வீழ்ந்துவிடும். அறிவு மிளிரும். ஒவ்வொரு வீடும், ஒவ்வொரு நாடும் சிறக்கும்!
மு.பழனிவாசன்

