ஸ்டார்ட்.. ஆக் ஷன்.
அத்தியாயம். 12.
இயக்குனர்கள் கிருஷ்ணன் -பஞ்சு..
ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒரு பாணி இருக்கும்.. கதை தேர்விலிருந்து …நடிக.. நடிகையர் தேர்வு….வரை தனித்துவமான சிந்தனை இருக்கும்..!
அப்படியிருக்கும் கடின சூழலில்.. இரண்டு.. இயக்குனர்கள் சேர்ந்து.. ஒரு படத்தை இயக்குவது என்பது.. இரட்டைக் குதிரை மேல் ஏறி சவாரி செய்வது போல ஆபத்தான விஷயம்.!. வெற்றி என்பதும் குதிரைக் கொம்புதான்..!
இந்த நிலையில்.. ஒரு படம்.. இரு படம்.. அல்ல.. 50 படங்களுக்கும் மேலாக சேர்ந்து இயக்கி.. வெற்றிகரமாக 36 வருடங்கள் இந்தியத் திரை உலகில் வலம் வந்தவர்கள்…
திரு கிருஷ்ணன் – பஞ்சு.. என்கிற இரட்டையர்..!..
அவர்கள் இயக்கத்தில் வெளி வந்த.. பல படங்கள் சரித்திரங்களை நிகழ்த்தியவை!… சமுதாயத்தில்… தாக்கங்களை உருவாக்கியவை!..
அவர்கள்.. இயக்கிய படங்களில் பணி புரிந்த சில..கலை மேதைகள்.. எதிர்.. எதிர்.. துருவங்களாக மாறி.. ஒருவர் வாழ்வை ஒருவர் திசை மாற்றிய.. விதியின்.. கோர.. திரைக் கதைகளும்.. நிகழ்ந்தன!..
திரு.எம்.ஜி. ஆர்..(vs) திரு.. M.R. இராதா..
ஒரு நொடி நிகழ்வு..!
வெடித்த குண்டில்.. வெடித்த.. சமூகப் பிரளயம்..!
தமிழக தேர்தல்.. களத்தையே திருப்பிப் போட்ட அணுகுண்டு சம்பவம்…!
திரு.எம்.ஜி.ஆர்..(vs) திரு மு.க.முத்து..!
தமிழக அரசியலை.. புரட்டிப் போட்ட சுனாமி.. அலை !
இருவரின் படங்களை ஒரே நேரத்தில் திரு. கிருஷ்ணன் – பஞ்சு அவர்கள் இயக்கும்.. சூழலில்..
புறப்பட்ட.. அரசியல்.. பூகம்பம்..
ஒரு புது…கட்சியை.. பிறக்க வைத்து.. ஆளும்.. கட்சியை பல காலம் அஞ்ஞான வாசம் இருக்க வைத்தது!
திரையுலகில் 40 ஆண்டு.. காலம்.. இரு தண்டவாளங்களாய்.. பயணித்த கலைஞரும்.. புரட்சி நடிகரும்.. எதிரிகளாகி… இருவரும்.. அவரவர்.. வாழ்க்கை சரித்திரத்தை மாற்றி எழுதிக் கொண்ட … விதியின்.. விளையாட்டு…!
இப்படி பல சுவாரசியமான … அரசியல் களேபரங்களோடு.. பின்னிப் பிணைந்தது தான்.. இவர்களுடைய கலைப் பயணமும்!..
யார் இந்த கிருஷ்ணன் – பஞ்சு..?
திரு.கிருஷ்ணன் அவர்கள்..1909 இல்..
பிறந்தவர்.. கோவையில் பிரபலமாக விளங்கிய பட்சிராஜா ஸ்டூடியோவில் லேப்.. இன் சார்ஜாகப் பணியாற்றியவர்..!
திரு.பஞ்சு அவர்கள் 1915 இல். பிறந்தவர்.!..
இயக்குனர். எல்லிஸ் ஆர். டங்கனிடமும்.. இயக்குனர் ராஜா சாண்டோ அவர்களிடமும்.. உதவி இயக்குனராகவும்.. உதவிப் படத் தொகுப்பாளராகவும்…பணி புரிந்தவர்..!
திரு.கிருஷ்ணன் அவர்களும்… திரு.பஞ்சு.. அவர்களும்.. 1942 இல் … திரு.ராஜா சாண்டோ அவர்கள்.. இயக்கிய ‘ஆராய்ச்சி மணி ’ (அல்லது) ‘மனு நீதிச் சோழன்’ என்கின்ற திரைப்படத்தில் உதவி இயக்குனர்களாக பணியாற்றினார்கள்!..
திரு ராஜா சாண்டோ அவர்களுக்கு இந்திய திரைப் பட வரலாற்றில் என்றென்றும் சிறப்பு இடம்.. உண்டு!…
தமிழிலும் … இந்தியிலும் … மௌனப் படங்கள் வந்த காலங்களில் இருந்து நடிக்க ஆரம்பித்து … கதாசிரியராக.. இயக்குனராக … தமிழ் …ஹிந்தி திரை உலகில் 20 ஆண்டுகள் வெற்றி வலம் வந்தவர்.. அவர்!..
அவர் கிருஷ்ணன்- பஞ்சு.. இருவரின் கலைத் திறமையை கண்டு பிரமித்து அவர்கள் இருவரும் இணைந்து ‘பூம்பாவை’ என்ற படத்தை இயக்கும் வாய்ப்பை தந்தார்!.
பூம்பாவை மூலமாக..1944 ல்… இயக்கம்.. கிருஷ்ணன் -பஞ்சு என்று துவங்கிய அவர்களது கலைப் பயணம்.. 1980 வரை நீடித்தது.. ஐம்பதுக்கும் மேலான படங்களை இயக்கிய அவர்கள் பல சாதனைப் படங்களையும் இயக்கி இருக்கிறார்கள்!..
1947 ல் கலைவாணர் திரு. N.S.கிருஷ்ணன் அவர்கள் துரதிருஷ்ட வசமாக சிறைக்குச் செல்லும் நிலை!.
திரு.N.S.கிருஷ்ணன்.. அவர்கள்.. தன்.. நகைச் சுவை.. கலந்த.. ஆழமான.. அறிவு பூர்வமான.. கருத்துக்களை… மக்கள்.. மனதில்.. வேரூன்ற வைத்து.. வெற்றி கண்டு கொண்டிருந்த கால கட்டம் அது..!
எதிர்பாராமல் அவர்.. சிறை சென்ற நேரம்..
அவரது நாடக குழுவை வாழ வைக்க ‘பைத்தியக்காரன்’!.. என்ற படத்தை திரு.கிருஷ்ணன் – பஞ்சு அவர்கள் இயக்கினார்கள்..!
தங்கள்.. வருமானத்தை மட்டுமே.. எண்ணாமல்…. வாடி வதங்கிய நாடகக் குழுவை.. வாழ வைக்க வேண்டும்.. என்ற அவர்களின்.. பெருந்தன்மை..
பைத்தியக் காரனாய்.. பரிணமித்தது..!
சிறையிலிருந்து விடுதலையான … திரு என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள் …
தன்னை மீண்டும்.. நிலை நிறுத்திக் கொள்ள… 1949 இல் ‘நல்லதம்பி’ என்ற படத்தை தயாரித்தார்!..அந்தப் படத்தையும்.. திரு.கிருஷ்ணன் -பஞ்சு அவர்களே இயக்கினார்கள்!
இந்தப் படம் Gary Cooper என்கின்ற பிரபல நடிகர் நடித்து..Frank Capra என்ற கவித்துவமான இயக்குனர் இயக்கி … 1936ல் வெளி வந்த ‘Mr Deeds Goes To Town’… என்ற ஆங்கிலப் படத்தைத் தழுவி எடுக்கப் பட்டது..!
பிரபல நடிகர். திரு. சகஸ்ர நாமம்.. அவர்கள் 1940 ல் இந்தப் படத்தைப் பார்த்து
விட்டு.. திரு. N.S.கிருஷ்ணன் அவர்களுக்கு இந்தப் படம் பொருத்தமாக இருக்கும் என்று பரிந்துரைத்தார்..!ஆனால் இந்த படத்தை 1949 இல் தான் திரு என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள் உருவாக்க முடிந்தது!.. படத்தின் கதை.. வசனத்தை பேரறிஞர் அண்ணா அவர்கள் எழுதினார்!..
தந்தை பெரியார் அவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்து … அவர் வாழ்வின் முக்கிய கட்டத்தில் போராடிக் கொண்டிருந்த நேரம்…. ‘நல்லதம்பி’ படத்தின் கதை.. வசனத்தை அவர் எழுதினார்!..
ஆழமான அரசியல் கருத்துக்கள் …! நாத்திக கருத்துகள் …! திராவிட கருத்துகள் அனைத்தையும் அவரது வசனத்தில் புகுத்தி இருந்தார்!..
அவர் உருவாக்கிய கதை…வசனத்தில் சில திருத்தங்களை உருவாக்கி திரு.என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள் படம் எடுத்தார்!.. அவர் செய்த மாற்றங்கள் பேரறிஞர் அண்ணாவிற்கு திருப்தி தரவில்லை!.. கலைவாணரோடு திரும்ப பணியாற்ற கூடாது.. என்ற மனநிலைக்கு ஆளானார்!.
ஆனாலும் திரு என்.எஸ்.கே அவர்கள் பாடல் காட்சிகளாலும்.. நகைச்சுவை கலந்த சீரிய சிந்தனைகளாலும் படத்தை ஒரு மறக்க முடியாத படமாக உருவாக்கினார்!…
மிகவும் பாராட்டப்பட்ட படமாக நல்ல தம்பி அமைந்தது! அந்த படத்தின் மூலமாக இந்தியாவின் சார்லி சாப்ளின் என கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் போற்றப் பட்டார்!.. ஆடியன்ஸை சிரிக்க வைக்க மட்டும் அல்ல.. சிந்திக்க வைக்கவும் அவரால் முடியும் என்பது நிரூபணம் ஆனது …!
திரு.கிருஷ்ணன் – பஞ்சு அவர்களின்.. இயக்கம்.. நேர்த்தியாக அமைந்தது.!..
பேரறிஞர் அண்ணா அவர்கள் பிற்காலத்தில் தமிழக முதல்வரானார்!
ஒரு எதிர்கால முதல்வரோடு பயணித்த பாக்கியம்.. திரு.கிருஷ்ணன் – பஞ்சு அவர்கட்கு கிடைத்தது..!
1952…தமிழ் திரை உலக வாழ்க்கையில் ஒரு மிகப் பெரிய அத்தியாயம் உருவாக்கப்பட்டது!..
தமிழ் திரையுலக நடிப்பு பாணியையே புரட்டிப் போட்ட ஒரு விடியல் சம்பவம் நடந்தது!..
திரு.கிருஷ்ணன்.. பஞ்சு.. அவர்கள் இயக்கத்தில் உருவான அந்தப் படம்?
(தொடரும்)
– இயக்குநர் நித்தியானந்தம்

