சென்னை திருவேற்காட்டில் மிகவும் பிரசித்தி பெற்றது தேவி கருமாரியம்மன் கோவில். ஆடி முதல் வெள்ளிக்கிழமையான நேற்று கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்தனர். இந்நிலையில் திரைப்பட நடிகையான நடிகை நளினி கருமாரியம்மன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்த பிறகு கோவில் வாசல் முன்பு நின்று திடீரென மடிப்பிச்சை ஏந்திய படி நின்று கொண்டிருந்தார்.
அப்போது அவர் கூறுகையில்,” திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் திருப்பணி நடந்து வருகிறது, அம்மன் எனது கனவில் வந்து எனக்காக என்ன செய்யப் போகிறாய் என கேட்டதால் மடிப்பிச்சை ஏந்தி அதில் வரும் காணிக்கையை செலுத்துகிறேன் எனக் கூறினேன். அதனால் கோவில் முன்பு நின்று மடிப்பிச்சை ஏந்தி நிற்கிறேன்” என்று கூறினார்.

நடிகை நளினி கோவிலுக்கு வந்து மடிப்பிச்சை ஏந்தி வருவதை பார்த்த பக்தர்கள் சாமி கும்பிடுவதை மறந்து விட்டு நளினியை பார்க்க ஆர்வம் காட்டினார்கள். அவருடன் முந்தியடித்து புகைப்படம் எடுத்துக் கொண்டு அவருக்கு மடிப்பிச்சை செலுத்தினர். அவரிடம் எலுமிச்சை பழங்களை வாங்கி, ஆசீர்வாதமும் பெற்றனர்.
பிறகு மடிப்பிச்சை ஏந்தி கிடைத்த காணிக்கைகளை மனம் உருகி வேண்டிய படி கோவில் உண்டியலில் செலுத்தி சென்றார். இதனால் சிறிது நேரம் கோவில் வளாகத்தில் பரபரப்பும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.

