கலை என்பது மக்களை மகிழ்விக்க மட்டுமின்றி, சிந்திக்கவும் வைத்து சமுதாயத்தில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற கொள்கை உடையவர் கலைவாணர். இவர் தன்னோட படங்களில் சுயமரியாதை கருத்துக்களையும், பகுத்தறிவு கருத்துகளையும் பரப்பியவர்.
பல தலைவர்கள் ஒன்றுசேர்ந்து செய்ய வேண்டிய சமூகப் பணியை தனி ஒருவராக திரைப்படங்களில் நிகழ்த்திக் காட்டியவர்.
தமிழ் சினிமாவின் முதல் தம்பதி கலைஞர்களான என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் இருவரும் இணைந்து நடித்த பல படங்கள் வெற்றி பெற்று இவர்களுக்கு புகழைத் தந்துச்சு. தமிழ் சினிமாவில் காமெடிக்கென டிராக்கை தனியாக உருவாக்கியவர். இவர் தமது கோஷ்டியை வைத்து சொந்தமாக தயாரித்து வைத்திருந்த காமெடி டிராக்குகளை விலைக்கு வாங்கி, பெரும்பாலான தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களில் இடம்பெறச் செய்தனர்.
என்.எஸ்.கிருஷ்ணன் தமக்குத்தாமே சூட்டிக்கொண்ட பட்டப்பெயர், ‘நாகரிக கோமாளி’ என்பதாகும்.
‘நாட்டுக்கு சேவை செய்ய நாகரிக கோமாளி வந்தான் ஐயா. ஆட்டம் ஆடி பாட்டுப் பாடி நல்ல அழகான ஜதையோடு வந்தான் ஐயா’ என்று தன்னுடைய சொந்தப் படமான ‘நல்ல தம்பி’யில் தம்மைப் பற்றிய கொள்கை முழக்கத்தை ஒரு பாடலின் மூலம் வெளியிட்டவர்.
ஒரு சமயம் சென்னை வானொலியில் உரையாற்றும்பொழுது, “என் கடன் களிப்பூட்டல்” என்று கூறிய அவர், தனது வாழ்விலும் சரி, திரையுலக வாழ்விலும் சரி நகைச்சுவை உணர்வுக்கு தந்த இடம் முக்கியமானது. ‘சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கு சொந்தமானது சிரிப்பு’ என்ற பாடல் ஒன்றே கலைவாணரின் நகைச்சுவை கலந்த சிந்தனைக்கு சிறந்த எடுத்துக்காட்டு.
நகைச்சுவையில் புதிய புரட்சியை ஏற்படுத்திய என்.எஸ்.கிருஷ்ணன் 1957ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி தன்னுடைய 49வது வயதில் காலமானார். தமிழக அரசு அவரது நினைவாக சென்னையில் உள்ள அரசு அரங்கத்திற்கு ‘கலைவாணர் அரங்கம்’ எனப் பெயர் சூட்டியது.
தமிழ் சினிமாவில் நகைச்சுவைக்கென தனி பாணியை உருவாக்கி, பிறர் மனதை புண்படுத்தாமல் நகைச்சுவையைக் கையாண்ட அற்புதமான கலைஞன் என்.எஸ்.கிருஷ்ணனை இந்நாளில் நினைவு கூறுவோம்.

