வருடத்திற்கு ஒருமுறை குரங்குகள் வழிபாடு செய்யும் குண்டலகர்ணேஸ்வரர்
அறந்தாங்கி சங்கர்
உலகமெலாம் தனது அருளாட்சியால் தன்னை நம்பி வரும் பக்தர்களுக்கு அற்புதங்களை செய்து அவர்களை ஆனந்தமாக வாழ வைக்கும் அந்த சிவபெருமானை மனித இனம் மட்டுமின்றி பல்வேறு உயிரினங்களும் வழிபாடு செய்து பலன் பெற்று வருகின்றன என்பது கண்கூடு.
யானை, சிலந்தி, எறும்பு, ஆடு, பசு, பாம்பு , நண்டு போன்ற உயிரினங்கள் இறைவனை வழிபட்டு பேரு பெற்ற கதைகள்நாம் அறிவோம். அதே போல குரங்குகளும் இறைவனை வழிபட்டு பேரு பெற்ற அற்புதமான வரலாறு இதோ உங்களுக்காக..
வாழ்க்கைப் பயணத்தை பாதுகாப்போடு நடத்தவேண்டுமென்றால் ஒருவர் தன் கடமை களை பக்தி சிரத்தையுடன் செய்யவேண்டும். பக்தியென்பது சாஸ்திர சம்பிரதாயமல்ல. அது கடவுளிடம் அன்பு செலுத்துவதாகும். உண்மையான அன்பு பக்தியாக உள்ளத்தில் மலரவேண்டும்.
இறைவன் தந்த இந்த மனிதப் பிறவியை வீணடிக்காமல், அதை நன்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும். நம் மனதில் தோன்றும் காம, குரோத, உலோப அழுக்குகளை நீக்கி தூய்மைப்படுத்திக் கொள்ளவேண்டும். இந்த உலகத்தில் எதையும் உரிமை கொண்டாட நமக்கு அதிகாரமில்லை. இறைவனுக்கே எல்லா அதிகாரங்களும் உண்டு.

எல்லா பிராணிகளையும் ஈஸ்வரன் தன் மாயசக்தியினால் ஆட்டி வைக்கின்றான்.
அவர்களுடைய இதயத்துள்ளும் சாட்சியாக நிற்கிறான். பலமும் அறிவும் மிகுந்தவன் என்று பெருமையடித்துக் கொள்பவர்களும் முதுமையடைந்ததும் மற்றவரைச் சார்ந்தே வாழவேண்டி யுள்ளது. எனவே வாழ்க்கையில் நிலையாமையை உணர்ந்து கொள்ளவேண்டும். இறைவன் ஒருவனே கடைத்தேற்ற வல்லவன் என்பதை அறிந்து கொள்ளவேண்டும்.
ஆன்மா பாசத்தால் கட்டுண்டு அறியாமை இருளில் மூழ்கியுள்ளது. இந்த துன்ப இருளிலிருந்து இன்பமயமான ஞானவெளிச்சத்துக்கு கொண்டுவர வகை செய்யும் தலம்- தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 28-ஆவது தலம்- காவிரி வடகரைத் தலங்களில் அப்பரால் பாடப்பட்ட பெருமைவாய்ந்த தலம்- அதிசயத்தின் அடிப்படையில் குரங்குகள் பூஜித்துப் பேறுபெற்ற திருத்தலம்தான் திருக்குரங்குக்கா.
இங்குள்ள இறைவன் குண்டலகர்ணேஸ்வரர் எனவும் இறைவி ஏலாசௌந்தரி அம்பிகை.எனவும் அழைக்கப்படுகிறார்கள் . சிறப்பு மூர்த்தியாக : சிவபக்த ஆஞ்சனேயர். அருள் பாலிக்கிறார்
இந்த ஊரின் புராணப்பெயர்:திருக்குரக்குக்கா. தற்போது வழங்கப்படும் பெயர் திருக்குரக்காவல். பிள்ளையார் : செங்கழனி விநாயகர் என்று அலைக்கபடுகிறார். தலவிருட்சம்: அசோக மரம், மற்றும் வில்வ மரம். இங்குள்ள தீர்த்தம்: கணபதி நதி என்று வழங்கப்படுகிறது
திருவானைக்கா, திருக்கோடிக்கா, திருக் குரங்குக்கா, திருநெல்லிக்கா, திருக்கோலக்கா ஆகிய ஐந்தும் பஞ்ச “கா’ தலங்கள் எனப்படும். அவற்றில் ஒன்றான இத்தலம் பழமைவாய்ந்தது.

தலவரலாறு
திரேதாயுகத்தில் இராமபிரான் சிவபக்தனான இராவணனையும் பல அரக்கர்களையும் கொன்ற பாவம் தீர இராமேஸ்வரத்தில் சிவபூஜை செய்ய எண்ணி, கயிலையிலிருந்து சிவலிங்கம் எடுத்துவருமாறு ஆஞ்சனேயரிடம் கூறினார். அதன்படி கயிலை சென்ற அனுமன் சிவலிங்கத்தை எடுத்துக்கொண்டு வரும் வழியில், சுருட்டப்பள்ளி தலத்தில் சுயம்புலிங்கம் இருப்பதை அறிந்து அங்குசென்றார். தன் கையிலிருக்கும் சிவலிங்கத்தை ஒரு அந்தண ரிடம் கொடுத்துவிட்டு சுயம்புலிங்கத்தை தரிசிக்கச் சென்றார். அந்தணர் வேடத்தில் இருந்த பைரவர் அந்த சிவலிங்கத்தை இராமகிரி என்னும் இடத்தில் பிரதிஷ்டை செய்துவிட்டுச் சென்றுவிட்டார். தரிசனம் முடிந்து அனுமன் திரும்பி வந்தபோது தான் கொணர்ந்த சிவ லிங்கம் பிரதிஷ்டையாகிவிட்டதைக் கண்டார். மறுபடியும் கயிலை சென்று சிவலிங்கம் கொண்டுவர நேரமில்லை என்பதால், காசிக்குச் சென்றார். அங்கே ஒரு சிவலிங்கத்தைக் கண்டு அதை எடுக்க முயன்றபோது, காசியின் காவல்தெய்வமான காலபைரவர் அனுமதி மறுத்துத் தடுத்தார். அதனால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. ராமேஸ்வரத்தில் அனுமனின் வருகைக்காகக் காத்திருந்த இராமபிரான், குறித்த காலத்தில் அனுமன் வராததால் அகத்தியர் கூறியபடி சீதை செய்த மணல் லிங்கத்தைக் கொண்டு சிவபூஜை செய்துமுடித்தார். அதன்பிறகு வந்த அனுமன் சிவபூஜை முடிந்துவிட்டதை எண்ணி சினம் கொண்டு, அந்த மணல் லிங்கத்தை அகற்ற முயன்று தோல்வி கண்டார். உடனே தனது வாலை லிங்கத்தின்மேல் கட்டி இழுக்க,அதுவும் முடியாமல் போனது. அப்பொழுது அங்கு தோன்றிய ஈசன், “”அனுமனே, நீ சிவஅபசாரம் செய்தவனாகிறாய். அதனால் உனது பலத்தை இழந்துவிட்டாய். உனது தோஷம் நீங்க வடதிசைநோக்கி சிவத்தல யாத்திரை செய்வாயாக. இறுதியாக உனதுசாபம் நீங்கும் தலம் உன் பெயரால் வழங்கப் படும்” என கூறி மறைந்தார்.
அதன்படி பல சிவத்தலங்களை வழிபட்ட அனுமன் திருக்கருப்பறியலூர் இறைவனையும் வழிபட்டு வரும் வழியில், அழகான நதியையும் அசோக விருட்சத்தையும் பூஞ்சோலைகளையும் கண்டார். அங்கேயே அமர்ந்து ஈசனை மனதில் நினைத்து தவம்செய்தார். அப்பொழுது ஒரு அசரீரி,
“அனுமனே, உனக்கு சாப விமோசனம் கிடைக்க இங்கேயே ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து சிவபூஜை செய்துவா’ எனக் கூறியது. அவ்வாறே சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து தொடர்ந்து சிவபூஜை செய்துவந்தார். அனுமனை சோதித்து அருள்புரிய எண்ணிய இறைவன், அனுமன் பூஜை செய்யும்பொழுது அவரது காதிலிருந்த குண்டலத்தை மறையச் செய்தார். அதனைக் கண்ட அனுமன், “நம் குண்டலம் நம்முடன்ஒட்டியே பிறந்ததா யிற்றே; இதனைக் கழற்றமுடியாதே. இறைவன் நம்மை சோதனை செய்கிறார்’ என்றெண்ணி, மற்றொரு குண்டலத்தை இறைவனிடம் சமர்ப்பணம் செய்தார். இதனைக் கண்டு மகிழ்ந்த இறைவன் அனுமனின் முன்னே தோன்றி முன்பிருந்த அனைத்து சக்திகளையும் கொடுத்து திருவருள் புரிந்தார். “”அனுமனே, இவ்வூர் உனது பெயராலே திருக்குரங்குக்கா (திருக்குரக்காவல்) என்றே அழைக்கப்படும்.
நீ இங்கேயே இருந்து பக்தர்களுக்கு அனுக்ரக மூர்த்தியாய் நின்று குறைகளைத் தீர்ப்பாயாக! உன்னால் பிரதிஷ்டை செய்யப்பட்ட எம்மை வணங்குபவர்கள் தங்கள் பாவ வினைகள் நீங்கி, சகலசம்பத்துகளையும் பெற்று சுகமுடன் வாழ்வார்கள்” எனக்கூறி இறைவன் மறைந்தார். இதன் காரணமாகவே ஈசன் குண்டலகர்ணேஸ்வரர் என்ற திருநாமத் துடன் விளங்குகிறார்.
ஆலயத்தில் நடக்கும் அதிசயம்!
இவ்வூரையடுத்து பத்து கிலோமீட்டர் சுற்றளவில் குரங்குகள் நடமாட்டமே கிடையாது. ஆனால் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே இரண்டே இரண்டு குரங்குகள் சித்திரை அல்லது தை மாதத்தில் இங்குவரும். இவை எங்கிருந்து வருகின்றன- எப்படி வருகின்றன என்பது யாருக்கும் தெரியாது.
அந்த இரண்டு குரங்குகளும் இத்தலத்திலேயே இரண்டு நாட்கள் தங்கும். கணபதி நதியில் நீராடியபின் ஒரு குரங்கு வில்வ மரத்தில் ஏறி இலைகளையும் பூக்களையும் பறித்துப்போடும். மற்றொரு குரங்கு அதை சேகரித்துக்கொண்டு கருவறையில் உள்ள ஸ்ரீகுண்டலகர்ணேஸ்வரர்மீது சாற்றி வழிபாடு செய்யும். இது இன்றளவும் ஆண்டுக்கொரு முறை நடக்கும் அதிசயமாகும்.
சிறப்பம்சங்கள்
✷ சிவபக்தனான இராவணனைக் கொன்ற இராமனுக்கு பாவம் நீங்க அகத்தியர் பரிகாரம் கூறியதால், அதுவே அவருக்கு தோஷமானது. அது நீங்க இத்தலம்வந்து இறைவனை வழிபட்டு தோஷத்தினை நீக்கிக் கொண்டார்.
✷ பிருங்கி மகரிஷி சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய தேவியர்களை விட்டுவிட்டு, பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரை மட்டும் வண்டுருவில் வலம்வந்து வணங்கிவந்தார். எனவே மூன்று தேவியர்களின் கோபத்திற்கு ஆளாகி, தபோ பலத்தை இழந்தார். வெண்குஷ்ட நோய் அவரைப் பற்றியது. நாரத மாமுனியின் அறிவுரைப்படி திருக்குரக்காவல் வந்த முனிவர் கணபதி நதியில் நீராடி அனுதினமும் ஸ்ரீஏலாசௌந்தரிஅம்பிகையையும், ஸ்ரீகுண்டலகர்ணேஸ்வரரையும் வழிபாடு செய்துவந்தார். அவரது பக்திக்கு மெச்சிய அம்பிகை பிருங்கி முனிவருக்கு காட்சியளித்து, அவரின் வெண்குஷ்ட நோய் நீக்கி தபோபலத்தை வழங்கி திருவருள் புரிந்தாள்.
✷ மார்க்கண்டேயர் தனது ஆயுள் பலம் அதிகரித்து எம பயம் நீங்க பஞ்ச “கா’ க்ஷேத்திரங்களிலும் இறைவனை வழிபட்டு ஈஸ்வர அனுக்ரகத்தைப் பெற்றார்.
✷ இந்திரன் கௌதம முனிவரின் சாபம் நீங்க வழிபாடு செய்த தலங்களில் திருக்குரக்காவும் ஒன்று.
✷ இத்தல இறைவன் ஆஞ்சனேயரால் திருவோண நட்சத்திர நாளில் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் என்பதால், திருவோண நட்சத்திரமுடையவர்களும், மகர ராசிக்காரர்களும் வழிபடவேண்டிய இறைவனாக இவர் திகழ்கிறார்.
✷ பன்னிரு ராசி நேயர்களும் ஸ்ரீகுண்டலகர்ணேஸ்வரரை வழிபடுவதால் பூர்வ ஜென்மத்தில் செய்த பாவங்களும் இந்த ஜென்மத்தில் செய்த பிழைகளும் நீங்கும்.
✷ ஸ்ரீஏலாசௌந்தரி அம்பிகையை வழிபடுவதால் குழந்தை பாக்கியம் கிட்டுவதோடு, குழந்தைகளின் ஞாபக சக்தி அதிகரித்து கல்வியில் மேன்மை பெறுவார்கள். பௌர்ணமியன்று அம்பாளுக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்து வழிபடுபவர்களுக்கு சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.
✷ ஒருவரது ஜாதகத்தில் ஒரு கிரகம் நற்பலனை வழங்கும்பொழுது அந்த கிரகத்தை வழிபடுவது சிறப்பு.
அதே கிரகம் தீயபலன்களைச் செய்தால், அதன் அதிதேவதைகளை வழிபடுவதுதான் சிறப்பு. ஒருசமயம் அனுமன் சூரியனை பழம் என நினைத்து விழுங்கச் செல்லும்போது ராகு பகவானிடமும், இராமாயண காலத்தில் தனது வாலைப்பிடித்த சனி பகவானிடமும் சண்டையிட்டுத் தோற்கடித்தார். அந்த இரு கிரகங்களும், “அனுமனே, உங்களை வழிபாடு செய்பவர்களை நாங்கள் துன்பப்படுத்த மாட்டோம்’ என்று உறுதி கூறின. அதனால்தான் நாம் ஆஞ்சனேயரை வழிபடும்போது சனியின் தானியமான எள்ளை எள்ளுசாதமாகவும், ராகு கிரகத்தின் தானியமான உளுந்தை வடைமாலையாகவும் சாற்றி வழிபாடு செய்கிறோம். அனுமன் ராமாயண காலத்தில் இறுதியாகத் தங்கி வழிபட்ட தலம் திருக்குரக்காவல்.
✷ பிரதி அமாவாசைதோறும் இவ்வாலயத்தில் பொது யாகம் நடைபெறும்.
அதாவது சர்வகாரிய சித்தி யாகம். (ஆஞ்சனேய மாலாமந்திர ஹோமம்). அயல்நாடு செல்ல நினைப்பவர்கள், எதிரிகள் தொல்லையில் அகப்பட்டவர்கள், பில்லி சூன்யத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த யாகத்தில் கலந்து வழிபாடு செய்தால் சிவ பக்த ஆஞ்சனேயர் சிறப்பான பலன்களைத் தருவார் என்று அகத்தியர் ஓலைச்சுவடி குறிப்பிடுகிறது.
சிவாலயத்திலுள்ள பரிவார மூர்த்தங்கள் எல்லாம் இங்கு சிறப்புடன் அமைந்துள்ளன. கிராமதேவதை செல்லியம்மனும் அருள்புரிகிறாள். பிராகார ஈசான்ய திக்கில் தனிச் சந்நிதி கொண்டு சிவபக்த ஆஞ்சனேயர் மேற்குநோக்கி அருள்புரிகிறார்.
திருக்குரக்காவல் ஆலயத்தை நாடிவந்தால் நற்பலன்கள் நம்மைத் தேடிவரும் என்பது பக்தர்கள் கண்ட உண்மையாம். அதனை மகாமக மாதத்தில் தரிசனம் செய்து நாமும் உணர்வோம். அருளைப் பெறுவோம்.
காலை 6.30 மணியிலிருந்து பகல் 12.30 மணிவரையிலும்; மாலை 4.30 மணியிலிருந்து இரவு 8.00 மணிவரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
ஆலயத் தொடர்புக்கு: டி.ஏ. நடராஜ சிவம் குருக்கள், அலைபேசி: 77088 20533. ஸ்ரீகுண்டலகர்ணேஸ்வரர் திருக்கோவில், திருக்குரக்காவல், எண்.1/281, சிவன் சந்நிதி தெரு, இளந்தோப்பு அஞ்சல்-609 201. மயிலாடுதுறை வட்டம், நாகை மாவட்டத்தில் அமைந்துள்ளது
ஆலயத்துக்கு செல்லும் வழி: மயிலாடுதுறை- மணல்மேடு, சீர்காழி- மணல்மேடு வழியாகச் செல்லும் பேருந்தில் ஏறி இளந்தோப்பு ஜி.எச்.எனும் நிறுத்தத்தில் இறங்கி வடக்கே மூன்று கிலோமீட்டர் சென்றால் திருக்குரக்காவலை அடையலாம். வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்தும், இளந்தோப்பி லிருந்தும் ஆட்டோ வசதி நிறைய உள்ளது
அறந்தாங்கி சங்கர்

