நோய்கள் தீர்க்கும் திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோயில்
அறந்தாங்கி சங்கர்
அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன் அந்த சிவபெருமான் பல்வேறு திருத்தலங்களில் பல்வேறு பெயர்களில் அமர்ந்து அருள் பாலித்து கொண்டு இருக்கிறார் . மனித இனத்தை வாட்டும் பல்வேறு பிரச்சனைகளில் முக்கியமான பிரச்சனை பிணிகளால் வருந்துவது ஆகும்.. அந்த பிணிகளை தீர்க்கும் பெருமானாக திருவாசி என்னும் திருத்தலத்தில் மாற்றுரைவரதீஸ்வரர் என்ற பெயரிலே கோவில் கொண்டு அருள் புரிகிறார் அந்த இறைவன் .. அந்த திருக்கோயிலை பற்றி இப்பொழுது காணலாம்,,
மாற்றுரைவரதீசுவரர் கோயில் என்பது திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவாசி என்ற ஊரில் அமைந்துள்ள சிவாலயமாகும். இத்தலம் தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும், காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 62வது சிவதலமாகவும் உள்ளது. இச்சிவாலய மூலவரை உமாதேவி, பிரம்மதேவன், இலக்குமி, அகத்திய முனிவர், கமலன் எனும் வைசியன், கொல்லிமழவன் ஆகியோர் வழிபட்டுள்ளனர்.

சிவாலயத்தின் எதிரே அடைக்கலம் காத்தார் கோயிலும் அதில் கருப்பண்ணசாமி சன்னதியும் உள்ளது. அக்கோயிலின் அருகே மதுரை வீரன் சன்னதியும் அமைந்துள்ளது.
இச்சிவாலயம் அமைந்த திருவாசி ஊரானது புராண காலத்தில் திருப்பாச்சிலாச்சிராமம் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்துள்ளது
சுந்தரர் தன்னுடன் சிவதல யாத்திரைக்கு வருகின்ற சிவனடியார்களுக்கு உணவு படைப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அவ்வாறு உணவு படைக்க சிவபெருமானிடம் பொன்னையும் பொருளையும் பெற்றுக் கொள்வார். ஆனால் இத்தலத்தில் சுந்தரர் பொற் பதிகம் பாடியும் சிவபெருமான் பொன்னைத் தரவில்லை. சுந்தரர் கோபம் கொண்டு பாடல்களைப் பாடினார். அதன்பின்பு சிவபெருமான் பொன்னை தந்தார். பிறகு அந்தப் பொன் சுத்தமானதா என்ற சந்தேகம் சுந்தரருக்கு வந்தது. அப்போது அங்கு வந்த இருவர் அந்தப் பொன்னை சோதித்து அதன் தரத்தினை உரைத்தனர். சிவபெருமான் தன்னை இகழ்ந்து பாடினாலும் பொன் தருவார் என்பதை சுந்தரர் அறிந்தார். பொன்னை உரைத்து தரத்தை உரைத்த இருவரும் மறைந்தனர். அவர்கள் சிவபெருமானும் திருமாலும் என சுந்தரர் அறிந்தார். மாற்றுரைவரதர் எனும் பெயர் இதன் காரணமாகவே வந்தது.
அர்த்தஜாம பூசையின் பொழுது முதலில் அம்பாளுக்கு பூசைகள் செய்யப்படுகின்றன. அதன் பின்பு இறைவனுக்கு பூசைகள் செய்யப்படுகின்றன.
இச்சிவாலயத்தின் மூலவரை ஒவ்வொரு திங்கட்கிழமையும் 7 விளக்குகளில் இலுப்ப நெய்யூற்றி தீபம் ஏற்றினால் பொருளாதார சுபிட்சம் அடைவர் . பாலதோஷம் அல்லது பாலாரிஷ்டம் என்று சொல்லப்படும் குழந்தைகளுக்கான தோஷம் பற்றியவர்கள் தொடர்ந்து மூன்று ஞாயிறுகளில் அம்பாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். அத்துடன் அபிஷேக தீர்த்தத்தை பருகினால் மூன்று நாளில் இந்த பாலதோஷம் குழந்தைகளிடமிருந்து விலகும். திருமணமாகாத இளைஞர்களும், இளம் பெண்களும் தொடர்ந்து 5 வெள்ளிக்கிழமை அன்னமாம் பொய்கையில் நீராடி அம்பிகைக்கு அர்ச்சனை , அபிஷேகம் செய்தால் திருமணம் விரைவில் நிச்சயமாகும். வலிப்பு, வயிற்றுவலி, வாதம் முதலிய நோய்கள் பாதித்தவர்கள் தொடர்ந்து ஒரு மண்டலத்திற்கு நடராஜ பெருமானுக்கு அர்ச்சனை செய்துவந்தால் நோயின் கடுமை குறைந்து பூரண குணமாகும்.

கொல்லிமலையை ஆண்ட மன்னரின் மகளுக்கு முயலகன் நோயைத் தீர்த்து, இன்றளவும் கொடிய நோய்கள் பலவற்றுக்கு தீர்வு தரும் தலமாக இருப்பது திருவாசி. நீர்வளம், நில வளம், செல்வ வளம் நிறைந்த சோழவள நாட்டின் காவிரி நதியின் வடகரையில் உள்ளது இந்தத் திருத்தலம். தேவாரப் பாடல் பெற்ற சிவத் தலங்களுள் 62ஆவது தலமாகும். திருப்பாச்சிலாச்சிராமம் என்பதே இதன் இயற்பெயர். தற்போது, திருவாசி என அழைக்கப்படுகிறது.
இத்தலத்து இறைவன் சமீவனநாதன் என்றும், சமீவனேஸ்வரர் என்றும் அழைக்கப்படு கிறார். மேலும் பிரம்ம தேவன் வழிபட்டதால் பிரம்மபுரீஸ்வரர், மாற்றறிவரதர், மாற்றுரை பிரம்மபுரீஸ்வரர், மாற்றறிவரதர், மாற்றுரைவரதீஸ்வரர் போன்ற பெயர்களிலும் வழங்கப்படுகிறார். உமாதேவி ஒரு முறை சிவபெருமானிடம், “28 சிவாகமங்களில் விருப்பமான செயல் ஒன்றை அருள வேண்டும்” என்று கேட்டார்.
அதற்கு இறைவன், “நான் விரும்புவது பூசனையே. அதுவும் காவிரி வடகரையில், தேவர்கள், முனிவர்கள் தவம் செய்யும் திருப்பாச்சிலாச்சிராமம் தலமே என் விருப்பம்” என் தலமே என் விருப்பம்” என்றார். அதைக் கேட்டதும், பார்வதி தேவி யாரும் அறியாத வகையில், அன்னப் பறவை வடிவம் எடுத்து இத்தலம் வந்து இறைவனை வழிபட்டார். அன்னையின் வழிபாட்டில் மகிழ்ந்த இறைவன், “நீ வழிபட்ட இந்த தலத்தில் உள்ள தீர்த் தத்தில் நீராடி வணங்குவோரின் பிணிகள் நீங்கும். இந்த தீர்த்தமானது ‘அன்னமாம் பொய்கை’ என்று வழங்கப்படும்” என்று அருளினார் என்கிறது இந்த ஆலயத்தின் தல வரலாறு.

திருப்பாச்சிலாச்சிராமம் என்பதில் திரு, பாச்சில், ஆச்சிராமம் என்ற மூன்று சொற்கள் உள்ளன. இவற்றில் திரு என்பது தெய்வத்தன்மை. அழகு, செல்வம் எனவும் குறிப்பிடப்படுகிறது. பாச்சில் என்பது ஊர்ப் பெயர் ஆகும். ஆச்சிராமம் என்பது கோயிலின் பெயர்.
வசிஷ்டர், அகஸ்தியர், துர்வாசர் ஆகியோர் தவம் செய்த இடம். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்று பெருமைகளைக் கொண்ட திருத்தலம்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டத்தில் உள்ளது. திருச்சியிலிருந்து முசிறி செல்லும் வழியில் 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
அறந்தாங்கி சங்கர் 9444160161

