ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு, சித்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட காளஹஸ்தியில் ரூ.2 கோடியில் கோவில், நவரத்னா திட்ட அலுவலகம் ஆகியவற்றை காளஹஸ்தி எம்.எல்.ஏ. மதுசூதன் ரெட்டி கட்டியுள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் இதுவரை என்டிஆர் முதல் எத்தனையோ முதல்வர்கள் ஆட்சியில் இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு இல்லாத சிறப்பு, தற்போது முதலமைச்சர் ஒருவருக்கு முதல் முறையாக கோவில் கட்டப்பட்டுள்ளது. அங்கே, தொகுதி மக்கள் தங்களின் பிரச்னைகள் குறித்த மனுக்களை அளிக்க ஒரு பெட்டி அமைக்கப்பட்டுள்ளது. ஜெகன் மோகன் ரெட்டி கோவிலில் இருக்கும் பணியாளா்கள் மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்க வழிவகை செய்ய இருக்கின்றனர்.
இந்த கோவிலில் தங்கம், வெள்ளியில் ஜெகன் மோகன் ரெட்டி, நவரத்னா திட்டம் குறித்த படங்கள் வைக்கப்பட்டுள்ளன.மேலும், ஆந்திர முதலமைச்சரின் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களும் செப்பு இலைகளின் மேல் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அந்த ‘ஜெகண்ணா நவரத்னா கோவில்’ நேற்று திறக்கப்பட்டது. இங்கு வருவோருக்கு ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி செய்த நலத்திட்டங்கள் குறித்த கையடக்க பிரதிகள் வழங்கப்படுகின்றன.

