உலகெங்கிலும் பயங்கரவாதச் செயல்களைத் திட்டமிட்டு, ஒருங்கிணைத்து, செயல்படுத்தி வரும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) முக்கிய தலைவர்கள் 10 பேரின் பட்டியலை அமெரிக்க அரசு வெளியிட்டுள்ளது.
இவர்களைப் பற்றிய துல்லியமான தகவல்களை அளிப்பவர்களுக்கு ஒரு கோடி அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 92 கோடிக்கும் அதிகம்) வரை வெகுமதி வழங்கப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறையின் ‘நீதிக்கான வெகுமதிகள்’ (Rewards for Justice) திட்டம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தப் பட்டியலில் ஈரானின் புதிய உச்ச தலைவராகக் கருதப்படும் மோஜ்தபா கமேனி, அவரது அலுவலகத்தின் துணைத் தலைவர் அலி அஸ்கர் ஹெஜாசி, பாதுகாப்பு கவுன்சில் செயலாளர், உச்ச தலைவரின் மூத்த ராணுவ ஆலோசகர் மேஜர் ஜெனரல் யாஹ்யா ரஹீம் சஃபாவி, உள்துறை அமைச்சர் பிரிகேடியர் ஜெனரல் எஸ்கந்தர் மோமெனி மற்றும் புலனாய்வுத் துறை அமைச்சர் எஸ்மாயில் காதிப் உள்ளிட்ட முக்கிய நபர்களின் பெயர்கள் மற்றும் புகைப்படங்கள் (சிலர் நிழற்படங்களாக) இடம்பெற்றுள்ளன.
இவர்கள் குறித்த தகவல் உள்ளவர்கள் சிக்னல் (Signal) செயலி அல்லது பாதுகாப்பான டோர் (Tor) இணைப்பு வழியாகத் தொடர்பு கொள்ளலாம் என்றும், தகவல் அளிப்பவர்களுக்குத் தேவைப்படின் மறுவாழ்வு மற்றும் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

