Wednesday, May 13, 2026
Homeசெய்திகள்அதிமுக எம்எல்ஏக்கள் ‘விலைக்கு வாங்கப்பட்டனர்’ – ஸ்டாலின் சரமாரி தாக்கு!

அதிமுக எம்எல்ஏக்கள் ‘விலைக்கு வாங்கப்பட்டனர்’ – ஸ்டாலின் சரமாரி தாக்கு!

தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைவதற்கோ அல்லது தொடர்வதற்கோ திமுக தடையாக இருக்காது என்ற தனது முந்தைய நிலைப்பாட்டின் அடிப்படையில், இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பைப் புறக்கணித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத்தில் தங்களது தோழமை இயக்க உறுப்பினர்களான பிரேமலதா விஜயகாந்த், ஜவாஹிருல்லா, தமிமுன் அன்சாரி மற்றும் நித்தியானந்தம் ஆகியோரும் வெளிநடப்பு செய்துள்ளதற்கு அவர் நன்றி தெரிவித்ததுடன், குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற உயர்ந்த நோக்கில் அரசுக்கு ஆதரவாக வாக்களித்த கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக மற்றும் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் முடிவையும் மதிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், தூய்மையான அரசியல் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், கடந்த மூன்று நாட்களில் குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது போல அதிமுக உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ‘அழுக்கு அரசியலில்’ (Dirty Politics) ஈடுபட்டுள்ளதாக அவர் சாடியுள்ளார்.

“உங்களது தொடக்கமே இப்படி இருந்தால் முடிவு எப்படி இருக்கும்?” என்று வாக்களித்த மக்களே வருந்தும் நிலை உருவாகியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், பிளவுபட்ட அதிமுக உறுப்பினர்களுக்கு முதல்வர் கொடுக்கப்போகும் ‘ரிட்டன் கிப்ட்’ என்ன என்பதை மக்கள் கவனித்துக் கொண்டிருப்பார்கள் என்றும், திமுக தொடர்ந்து தனது கொள்கையில் உறுதியாக இருந்து ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படும் என்றும் தனது அறிக்கையில் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments