Monday, May 25, 2026
Homeகிளாசிக்காந்தக் குரலால் காலத்தை வென்ற இசைச் சக்கரவர்த்தி டி.எம்.எஸ் – நினைவு தின சிறப்புப் பதிவு!

காந்தக் குரலால் காலத்தை வென்ற இசைச் சக்கரவர்த்தி டி.எம்.எஸ் – நினைவு தின சிறப்புப் பதிவு!

தமிழ் நெஞ்சங்களின் சிம்மாசனத்தில் ‘சிங்கக் குரலோனாக’ என்றும் வீற்றிருக்கும் தெய்வீகப் பாடகர் டி.எம். சௌந்தரராஜன் நினைவு தினமான இன்று, அவரது அசாத்திய இசைப் பயணத்தை நன்றியோடு நினைவு கூர்கிறோம். மதுரையில் ஒரு சௌராஷ்டிர பிராமணக் குடும்பத்தில் பிறந்து, சின்னகொண்டா சாரங்கபாணி பாகவதர் மற்றும் காரைக்குடி ராஜாமணி ஐயங்கார் ஆகியோரிடம் முறையாகக் கர்நாடக சங்கீதம் கற்று, தனது 21 வயதில் கச்சேரிகள் செய்யத் தொடங்கிய டி.எம்.எஸ், 1950-ல் வெளியான ‘கிருஷ்ண விஜயம்’ படம் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்.

ஆரம்பத்தில் சில காலம் வாய்ப்புகள் கிடைக்காமல் பக்திப் பாடல்கள் பாடி வந்த இவரை, இசையமைப்பாளர் ஜி. ராமநாதனிடம் அறிமுகம் செய்து வைத்த கவிஞர் மருதகாசியின் முயற்சியால் ‘தூக்கு தூக்கி’ படத்தில் சிவாஜி கணேசனுக்காகப் பாடும் அரிய வாய்ப்பு கிடைத்தது.

சிவாஜியின் குரல் மேனரிசத்தை அப்படியே பிரதிபலித்து அவர் பாடிய பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பட்டையைக் கிளப்ப, அதனைத் தொடர்ந்து ‘கூண்டுக்கிளி’ படத்தின் பாடலால் கவரப்பட்ட மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், தனது ‘மலைக்கள்ளன்’ படத்தில் ‘எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்’ பாடலைப் பாட வைத்து டி.எம்.எஸ்ஸை தனது ஆஸ்தான பாடகராக மாற்றிக் கொண்டார்.

எம்.ஜி.ஆருக்கு கம்பீரமாகவும், சிவாஜிக்கு உணர்ச்சிப்பூர்வமாகவும், ஏன் ‘குமுதம்’ படத்தில் எம்.ஆர்.ராதாவுக்காக அவரது பாணியிலேயே பாடியும் அசத்திய டி.எம்.எஸ், 1950களில் இருந்து 1980கள் வரை தமிழ் சினிமா பின்னணிப் பாடல் துறையின் முடிசூடா மன்னனாக வலம் வந்தார்.

சுமார் 11,000 சினிமா பாடல்கள், 2,500 பக்திப் பாடல்கள் எனப் பாடி சாதனை படைத்ததுடன், ‘பட்டினத்தார்’, ‘அருணகிரிநாதர்’ போன்ற படங்களில் கதாநாயகனாகவும் நடித்து முத்திரை பதித்த இவருக்கு, இந்திய அரசின் ‘பத்மஸ்ரீ’, தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருதுகளும், ‘பாடகர் திலகம்’, ‘இசை சக்கரவர்த்தி’ போன்ற எண்ணற்ற பட்டங்களும் கிடைத்தன.

உலகத் தமிழர்களின் நெஞ்சங்களை காந்தக் குரலால் கட்டிப்போட்ட இந்த மாபெரும் இசைச் சக்கரவர்த்தியைப் பெருமைப்படுத்தும் விதமாக, அவர் வாழ்ந்த சென்னை மந்தவெளியில் உள்ள தெருவுக்குத் தமிழக அரசு ‘டி.எம். சௌந்தரராஜன் சாலை’ எனப் பெயரிட்டு கௌரவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments