தென்மேற்கு பருவமழை: ஜூன் முதல் வாரத்தில் கேரளாவில் தொடங்க சாதகமான சூழல்!
நடப்பு 2026-ஆம் ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை தொடங்குவது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) ஏற்கனவே வெளியிட்ட புள்ளிவிவர மாதிரிகளின்படி, மே 26-ஆம் தேதியை ஒட்டி கேரளாவில் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், தற்போதைய காற்றின் திசை மற்றும் வேகத்தைக் காட்டும் வரைபடங்களின் (Wind charts) அடிப்படையில் ஆராயும்போது, இந்தியத் தீபகற்பப் பகுதியில் பருவமழைக்கான முழுமையான சாதகமான சூழல் உருவாவதற்கு இன்னும் சில நாட்கள் கூடுதல் காலம் எடுக்கும் என்பது தெரியவந்துள்ளது.
இதன்படி, வரும் ஜூன் மாதத் தொடக்கத்தில் (ஜூன் 3 அல்லது 4-ஆம் தேதி வாக்கில்) கேரளாவில் பருவமழை முறைப்படி கால்பதிக்கக் கூடும் என்றும், இது வழக்காமான இயல்பான காலகட்டத்திற்குள்ளேயே (Normal onset window) அமையும் என்றும் வானிலை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த ஆண்டு பருவமழை மிகவும் வலுவான தொடக்கத்தைக் கொண்டிருக்கும் என்று உலகளாவிய வானிலை மாதிரிகள் கணிப்பதால், ஜூன் மாதத்தின் முதல் பாதியில் இந்தியத் தீபகற்பத்தின் மேற்கு கடற்கரைப் பகுதிகள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிகச் சிறந்த அளவில் மழை பொழிவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

