Wednesday, June 10, 2026
Homeசினிமாஇமயம் சரிந்தது: தமிழ் சினிமாவின் மண்வாசனைக்கு உயிர் கொடுத்த ‘இயக்குனர் இமயம்’ பாரதிராஜா காலமானார்!

இமயம் சரிந்தது: தமிழ் சினிமாவின் மண்வாசனைக்கு உயிர் கொடுத்த ‘இயக்குனர் இமயம்’ பாரதிராஜா காலமானார்!

தமிழ் சினிமாவை ஸ்டூடியோக்களின் செயற்கை வெளிச்சத்திலிருந்தும், நாடகத்தனமான வசனங்களிலிருந்தும் விடுவித்து, பொன்னி நதி ஊறிய கிராமத்து மண்ணிற்கு அழைத்துச் சென்ற ‘இயக்குனர் இமயம்’ பாரதிராஜா காலமானார். தமிழ் சினிமாவின் போக்கைத் தீர்மானித்த ஒரு சகாப்தம் இத்துடன் நிறைவடைந்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையில் மோதிய காற்று மருத நில வயல்வெளிகளில் புகுந்து விளையாடும் அழகையும், நெய்தல் நிலத்தின் நெய்மீன் வாசத்தையும், குறிஞ்சி நிலத்தின் மலை மேடுகளையும், கம்பீரமான முல்லை நிலத்தின் வாசத்தையும், பாலை நிலத்தின் பஞ்சத்தையும் என தமிழ்நாட்டின் ஐந்திணைகளின் பெருமைகளையும், அழகியலையும் அங்குள்ள கிராமத்து மக்களின் வாழ்வியலோடு, அவர்களின் சொந்த மொழியிலேயே தமது செல்லுலாய்ட் கண்களால் காட்சிப்படுத்தியவர் பாரதிராஜா. கல்லுக்குள் ஈரம் போல் கள்ளம் கபடமற்ற கிராமத்து மக்களின் உணர்வுபூர்வமான வாழ்வியலை தன் திரைப்படங்களில் கொட்டித் தீர்த்துவிட்ட வெள்ளந்தி மனசுகாரர் அவர்.

தமிழ் சினிமாவின் பூமத்திய ரேகை

1977-ம் ஆண்டு ‘16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் பாரதிராஜா. இத்திரைப்படத்தின் வரவுக்குப் பின், தமிழ் சினிமாவின் வரலாற்றை ‘பாரதிராஜாவுக்கு முன்பு, பாரதிராஜாவுக்கு பின்பு’ என இருதுருவங்களாகப் பிரிக்கும் பூமத்திய ரேகையாக அவர் மாறினார். ஊர்க்குருவியென ஸ்டூடியோக்களுக்குள்ளேயே வட்டமடித்துக் கொண்டிருந்த தமிழ் சினிமாவை, சிறகுகள் சூட்டி வானத்துக்கு அழைத்துச் சென்றவர் அவரே.

கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை, கிழக்கு சீமையிலே, வேதம் புதிது, என் உயிர் தோழன் என பாரதிராஜாவின் படங்களின் பெயர் பட்டியலை வாசித்தாலே ஒரு கவிதை புத்தகம் வாசித்தது போன்ற உணர்வு ஏற்படும். மூக்கால் நுகரக்கூடிய கிராமத்து மண்வாசனையை, திரையின் வழியே ரசிகர்களின் மனதால் நுகரவைத்த அற்புதம் நிகழ்த்திய படைப்பாளி அவர்.

கழுதைக் கதாபாத்திரமும் திரையுலக விதையும்

தேனி அருகே உள்ள அல்லி நகரத்தில் பெரியமாயத்தேவர் – கருத்தம்மாள் தம்பதியின் மகனாகப் பிறந்த சின்னச்சாமியே, பின்னாளில் சினிமாவுக்காக ‘பாரதிராஜா’ என்று தன் பெயரை மாற்றிக்கொண்டார். சிறுவயதில் படிப்பு ஏறாமல் கள்ளிக்காடுகளில் சுற்றித்திரிந்த இவருக்கு நாடக உலகை அறிமுகப்படுத்தியவர் இருதய அண்ணன் என்பவர். அவர் எழுதிய நாடகத்தில் பாரதிராஜாவுக்கு முதன்முதலில் கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் ஒரு ‘கழுதை’.

சுவாரசியமாக, தன் ஆரம்பகால நாடகக் கதாபாத்திரமான கழுதையைத் தன் திரைப்படங்களிலும் அவர் பயன்படுத்தத் தவறவில்லை. ’16 வயதினிலே’ படத்தில் சப்பானி மயிலை சிரிக்க வைக்கப் பாடும் பாடலிலும், ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் நாயகனைக் கழுதை மேல் ஏற்றி ஊர்வலமாக அழைத்து வரும் காட்சியிலும், ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் கதாநாயகி பாட்டு கற்றுக்கொள்ளும் இடத்திலும் கழுதையை ஒரு குறியீடாகப் பயன்படுத்தியிருப்பார்.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது, தமிழ் ஆசிரியர் ராமலிங்கம் கொடுத்த ஊக்கமும், அவர் இயக்கிய நாடகத்திற்கு கிடைத்த சிறந்த இயக்குனர் விருதும், “நீ வருங்காலத்தில் மிகப்பெரிய சினிமா இயக்குனராக வருவாய்” என்ற ஆசிரியரின் தீர்க்கதரிசனமான வார்த்தைகளுமே பாரதிராஜா என்கிற பல்கலைக்கழகம் உருவாக அடித்தளமாக அமைந்தது.

தமிழ் சினிமாவின் போக்கைத் தீர்மானித்த ஆளுமை

பண்ணைபுரத்தில் இளையராஜாவுடன் ஏற்பட்ட நட்பு, பாரதிராஜாவின் கலைப் பயணத்தில் ஒரு பொற்காலத்தின் தொடக்கமாக அமைந்தது. ‘பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து’ ஆகிய மூவருமே தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய மூவேந்தர்களாகக் கருதப்படுகிறார்கள்.

பாரதிராஜாவின் திரையுலகப் பங்களிப்பு என்பது வெறும் படங்களை இயக்குவதோடு நின்றுவிடவில்லை. தமிழ் சினிமாவின் அடுத்தடுத்த தலைமுறை இயக்குனர்களின் கதை சொல்லும் பாணியையே அவர்தான் தீர்மானித்தார். அவரை அடியொற்றி மகேந்திரனும், பாலு மகேந்திராவும், பாலாவும், அமீர் மற்றும் சசிகுமாரும் வந்தனர்.

அதேபோல், இயக்குனர்களுக்கு என்று தனி ரசிகர் மன்றங்கள் (950 மன்றங்கள்) உருவாவதற்குக் காரணமானவரும் அவரே. பின்னாளில் “ரசிகனாக இருக்கலாம், ரசிகவெறியனாக இருக்கக்கூடாது” என்று கூறி அவரே அந்த மன்றங்களைக் கலைத்துவிட்டார். எந்தவொரு பெரிய நடிகரிடமும் சென்று ஒருமுறை கூட ‘கால்ஷீட்’ கேட்காத அசாத்தியத் துணிச்சல் கொண்டவர் பாரதிராஜா.

சமூகச் சாட்டையும் ‘ர’ வரிசை நாயகிகளும்

திரைப்படங்களை வெறும் பொழுதுபோக்குக் கருவியாகப் பார்க்காமல், சமூகக் கருத்துக்களைப் பேசும் ஆயுதமாகவும் அவர் பயன்படுத்தினார். சாதிய தீ, பெண்ணடிமைத்தனம், பெண் சிசு கொலை போன்ற சமூக அவலங்களுக்கு எதிராக ‘வேதம் புதிது’, ‘கருத்தம்மா’ போன்ற திரைப்படங்கள் மூலம் சாட்டையைச் சுழற்ற அவர் தயங்கியதே இல்லை.

ஹீரோக்களுக்கு மட்டுமே அடைமொழிகள் இருந்த காலத்தில், தன் படங்களின் நாயகிகளுக்கு ‘ராதிகா, ராதா, ரேவதி, ரேகா, ரதி’ என ‘ர’ வரிசையில் பெயர் சூட்டி, அவர்களைத் தமிழ்த் திரையுலகின் தவிர்க்க முடியாத பெண் ஆளுமைகளாக மாற்றிய பெருமை இவருக்கு உண்டு. பின்னாளில், “பெற்றோர் வைத்த பெயரை மாற்ற நான் யார்?” என்று கூறி அந்த செண்டிமெண்ட்டை கைவிட்ட நற்பண்பும் அவரிடம் இருந்தது.

பாலச்சந்தருடனான கண்ணியமான நட்பு

இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தருக்கும், இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கும் இடையே திரையுலகில் ஆரோக்கியமான போட்டி இருந்தாலும், இறுதிவரை கண்ணியமான நட்பு நீடித்தது. ‘16 வயதினிலே’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, பாரதிராஜாவைக் கட்டிப்பிடித்து அழுத பாலச்சந்தர், “Its thundering in my heart” என்று பாராட்டினார். இதனை நினைவுகூர்ந்து பாரதிராஜா பலமுறை நெகிழ்ந்துள்ளார்.

தமிழ்நாட்டின் ‘மோர்கன் ஃப்ரீமேன்’

இயக்குனராக இமயம் தொட்ட பாரதிராஜாவுக்குள் இருந்த நடிகனை முழுமையாக வெளிக்கொண்டு வந்த திரைப்படம் மணிரத்னத்தின் ‘ஆயுத எழுத்து’. அதில் அனுபவமிக்க அரசியல்வாதியாகத் தோன்றி, காட்சிகளில் தோட்டாக்களாக வெடித்திருப்பார். தொடர்ந்து ‘பாண்டியநாடு’, ‘குரங்கு பொம்மை’, ‘நம்ம வீட்டுப் பிள்ளை’, ‘மாநாடு’, ‘திருச்சிற்றம்பலம்’ வரை 80 வயதைக் கடந்த பின்னரும் தமிழ்நாட்டின் ‘மோர்கன் ஃப்ரீமேன்’ (Morgan Freeman) போல ஒரு சிறந்த குணச்சித்திர நடிகராக ஜொலித்தார்.

“என் இனிய தமிழ் மக்களே…”

என்று இருகைகளையும் கூப்பி, திரையில் நிழற்பட (Silhouette) பிம்பமாகத் தோன்றி, கம்பீரமான குரலில் அவர் பேசிய வார்த்தைகள் என்றும் தமிழர்களின் நெஞ்சில் ஒலித்துக் கொண்டே இருக்கும். ஸ்ரீதர், பாலச்சந்தர், சாந்தாராம், சத்யஜித் ரே மற்றும் டேவிட் லீன் ஆகியோரைத் தன் ஆதர்சங்களாகக் கொண்டு, தமிழ் சினிமாவின் முகவரியையே மாற்றியெழுதிய பாரதிராஜா மறைந்தாலும், அவர் விட்டுச் சென்ற மண்வாசனையும், கலைப் படைப்புகளும் தமிழ் மண்ணில் என்றும் அழியாமல் நிலைத்திருக்கும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments