Thursday, June 25, 2026
Homeஉலகம்தண்ணீர் நெருக்கடியால் பொருளாதாரம் பாதிப்பு? மூடிஸ் அதிர்ச்சி அறிக்கை!

தண்ணீர் நெருக்கடியால் பொருளாதாரம் பாதிப்பு? மூடிஸ் அதிர்ச்சி அறிக்கை!

சர்வதேச கடன் தர நிர்ணய நிறுவனமான ‘மூடிஸ் ரேட்டிங்ஸ்’ (Moody’s Ratings) வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கையில், இந்தியாவின் தற்போதைய நீர் மேலாண்மை கட்டமைப்பு மிகவும் பலவீனமாகவும், நெகிழ்வுத்தன்மையற்றதாகவும் உள்ளதால், எதிர்காலத்தில் நாடு கடுமையான தண்ணீர் பற்றாக்குறையையும், அதன் விளைவாகப் பெரும் பொருளாதார நெருக்கடியையும் சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளது.

இந்தியாவில் தண்ணீர் மேலாண்மை மற்றும் அதற்கான கொள்கைகள் 28-க்கும் மேற்பட்ட மாநில அரசுகளின் வசம் சிதறிப் போயிருப்பதும், விவசாயத் துறைக்கு வழங்கப்படும் அதிகப்படியான மானியங்கள் காரணமாக நாட்டின் ஒட்டுமொத்த நன்னீரில் சுமார் 80 சதவீதம் அங்கேயே நுகரப்படுவதும் இந்த நெருக்கடிக்கு முதன்மைக் காரணங்களாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

மேலும், பருவமழை மாற்றம், கடுமையான வெப்ப அலைகள், நிலத்தடி நீர் மட்டத்தின் அதிவேக வீழ்ச்சி மற்றும் பழமையான உள்கட்டமைப்புகள் ஒருபுறம் அச்சுறுத்தலாக இருக்கும் வேளையில், மறுபுறம் வேகமாக வளர்ந்து வரும் கிளவுட் கம்ப்யூட்டிங், தரவு மையங்கள் (Data Centres) மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற நவீன தொழில்நுட்பத் துறைகளின் குளிரூட்டும் தேவைகளுக்காகத் தண்ணீரின் பயன்பாடு வரலாறு காணாத அளவில் அதிகரித்து வருகிறது.

பல்வேறு துறைகளுக்கு இடையே தண்ணீரைப் பகிர்ந்து அளிப்பதில் நிலவும் மந்தநிலை, நீடித்த தட்டுப்பாடு மற்றும் உள்கட்டமைப்பில் போதிய முதலீடில்லாத சூழல் ஆகியவை பொதுச் சேவைகள் மற்றும் தொழில்துறையைப் பாதிப்பதுடன், அரசுகளுக்குப் பெரும் நிதிச் சுமையையும், நாட்டின் கடன் தகுதிக்கு (Credit Strain) கடுமையான பாதிப்பையும் ஏற்படுத்தும் என்பதால், உடனடி நீர் மேலாண்மை சீர்திருத்தங்கள் அவசியம் என்று மூடிஸ் நிறுவனம் தனது அறிக்கையில் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments