புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைத்து, மின்சார வாகனங்களின் (Electric Vehicles – EV) பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில், ‘டெல்லி மின்வாகனக் கொள்கை 2026’ (Delhi EV Policy 2026)-ஐ அரசு அறிவித்துள்ளது.
இந்த புதிய கொள்கையின்படி, 30 லட்சம் ரூபாய் வரையிலான மின்சார கார்களை வாங்குபவர்களுக்கு சாலைவரி (Road Tax) மற்றும் பதிவு கட்டணம் (Registration Fee) ஆகியவற்றிலிருந்து 100 சதவீத விலக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 2027-ஆம் ஆண்டு முதல் டெல்லியில் புதிய CNG ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்றும், புதிய ஆட்டோ பதிவு அனைத்தும் படிப்படியாக மின்சார வாகனங்களாக மாற்றப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
மேலும், 2028-ஆம் ஆண்டு முதல் பெட்ரோல் மற்றும் டீசல் மூலம் இயங்கும் இருசக்கர வாகனங்களுக்கான புதிய பதிவுகளுக்கும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மின்சார இருசக்கர வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
மின்வாகனங்களுக்கான அடிப்படை வசதிகளை விரிவுபடுத்தும் வகையில், 32,000 பொது சார்ஜிங் நிலையங்கள் மற்றும் சுமார் 1 லட்சம் தனியார்/வீட்டு சார்ஜிங் வசதிகளை உருவாக்கும் இலக்கையும் டெல்லி அரசு நிர்ணயித்துள்ளது.
இந்த நடவடிக்கைகள் மூலம் காற்று மாசுபாட்டைக் குறைப்பதுடன், சுத்தமான மற்றும் நிலையான போக்குவரத்து அமைப்பை உருவாக்குவதே அரசின் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் டெல்லியை இந்தியாவின் முன்னணி மின்வாகன நகரமாக மாற்றும் முயற்சியில் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

