Wednesday, July 22, 2026
Homeசெய்திகள்மின்கட்டணம் பல மடங்கு உயர்வு!தமிழகம் முழுவதும் கொந்தளிக்கும் பொதுமக்கள்!

மின்கட்டணம் பல மடங்கு உயர்வு!தமிழகம் முழுவதும் கொந்தளிக்கும் பொதுமக்கள்!

மாநிலம் முழுவதும் தற்போது மின் கட்டண உயர்வு குறித்த விவாதங்கள் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகின்றன. எவ்வித முன் அறிவிப்பும் இன்றி உயர்த்தப்பட்டிருக்கும் கட்டணத் தொகையைப் பார்த்து சராசரி நுகர்வோர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். வீடுகளில் பெரிய அளவில் மின் பயன்பாடு அதிகரிக்காத நிலையிலும், ஏன்… சில இடங்களில் பூட்டிய வீடுகளுக்குக் கூட மின் கட்டணம் பன்மடங்கு உயர்ந்து வந்துள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த கவலையையும், எதிர்பாராத குடும்ப நிதி நெருக்கடியையும் உருவாக்கியுள்ளது.

சாதாரணமாக இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.700 முதல் ரூ.900 வரை கட்டணம் செலுத்தி வந்த குடும்பங்களுக்கு, தற்போதைய கணக்கீட்டில் திடீரென ரூ.4,000-க்கும் அதிகமாக மின்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஒரு சில குறிப்பிட்ட வீடுகளிலோ அல்லது ஏதேனும் ஒரு சில நகரங்களிலோ மட்டும் நடக்கும் தனிப்பட்டப் பிரச்னையல்ல. தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்கள் மற்றும் நகரப் பகுதிகளில் வாழும் ஆயிரக்கணக்கான நுகர்வோர்கள், இத்தகைய கணக்கீட்டுக் குளறுபடிகளாலும் அதிரடி கட்டண உயர்த்தலாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இத்தகைய சூழலில், மின் வாரியமும் அரசும் நீண்டகால கோரிக்கையான மாதாந்திர மின் கணக்கீட்டு முறையை (Monthly Billing System) உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது.

மாதாந்திர மின் கணக்கீட்டு முறையைக் கொண்டு வருவதன் மூலம் பல்வேறு நன்மைகள் பொதுமக்களுக்கும் மின் வாரியத்திற்கும் கிடைக்கும்:

மாதாந்திர நிதித் திட்டமிடல் : இரு மாதங்களுக்கு ஒருமுறை மொத்தமாக அதிகத் தொகையைக் கட்டுவதைக் காட்டிலும், மாதந்தோறும் சிறிய அளவிலான தொகையைச் செலுத்துவது நடுத்தர குடும்பங்களின் மாதாந்திர நிதி மேலாண்மையை எளிதாக்கும்.

மின் சிக்கனம் மற்றும் கண்காணிப்பு: ஒவ்வொரு மாதமும் தங்களது மின் பயன்பாட்டைப் பொதுமக்கள் துல்லியமாகக் கண்காணிக்க முடியும் என்பதால், தேவையற்ற மின் விரையத்தைத் தடுத்துச் சிக்கனத்தைக் கையாள விழிப்புணர்வு ஏற்படும்.

கணக்கீட்டு பிழைகள் குறைதல்: இரு மாதங்களுக்கு ஒருமுறை கணக்கிடும் போது ஏற்படும் ஸ்லாப் (Slab) மாற்றங்கள் மற்றும் மீட்டர் வாசிப்பில் ஏற்படும் மனிதத் தவறுகள் பெருமளவில் தவிர்க்கப்படும்.

சீரான வருவாய் மற்றும் நிலுவைக் குறைவு : மின்சார வாரியத்தைப் பொறுத்தவரை, அதிரடியான நிலுவைத் தொகைகளும் அபராதச் சுமைகளும் குறையும். வாரியத்திற்கானக் கட்டண வசூலும் மாதம் தவறாமல் சீரான முறையில் நடைபெறும்.

பொதுமக்களின் அன்றாட வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இத்தகைய மின் கட்டணக் குளறுபடிகளை உடனடியாகக் களைந்து, மக்களின் கோரிக்கையான மாதாந்திர மின் கணக்கீட்டு முறையைச் விரைந்து அமல்படுத்த அரசு முன்வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments