சென்னையில் 2-வது விமான நிலையத்திற்காகப் பரிந்துரைக்கப்பட்ட பரந்தூர் திட்டத்தை ரத்து செய்வதாக முதலமைச்சர் ஜோசப் விஜய் பேரவையில் அறிவித்ததை சுட்டிக்காட்டி, ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனரான கே.அண்ணாமலை தனது விமர்சனத்தையும் கோரிக்கையையும் முன்வைத்துள்ளார்.
மாற்று இடங்கள் பரிசீலனையில் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தாலும், புதிய இடத்தைத் தேர்வு செய்வதில் ஏற்படும் தாமதம் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியைச் சுமார் 10 ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிவிடும் என்றும், புதிய இடத்தைத் தீர்மானித்து, மத்திய அரசு மற்றும் அமைப்புகளின் அனுமதி பெற்று பணிகள் முடிவடைவதற்கு நீண்ட காலம் ஆகும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
தற்போதைய சென்னை விமான நிலையம் 1,300 ஏக்கர் பரப்பளவைக் கொண்டு ஆண்டிற்கு 3 கோடி பயணிகளைக் கையாண்டு 5-வது இடத்தில் உள்ளதுடன், பெரிய ரக ஏ380 (A380) ரக விமானங்களை இயக்கும் வகையில் ‘கோட் எஃப்’ (Code F) தரத்தில் இல்லை என்பதை ஹைதராபாத் (5,500 ஏக்கர்), பெங்களூரு (4,000 ஏக்கர்) விமான நிலையங்களுடன் ஒப்பிட்டு விளக்கியுள்ளார்.
எனவே, தொலைநோக்குப் பார்வையுடன் புதிய விமான நிலையத்திற்கான மாற்று இடத்தைக் கண்டறியும் பணிகளைத் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் விரைவுபடுத்த வேண்டும் எனவும், பரந்தூருக்காக ஏற்கெனவே கையகப்படுத்தப்பட்ட 1,700 ஏக்கர் நிலத்தை அரசு என்ன செய்யப்போகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

