Friday, October 2, 2026
Homeசெய்திகள்கோயில் விழாக்களில் யானைகள்: 4 வாரங்களில் வழிகாட்டு நெறிமுறைகள்! தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

கோயில் விழாக்களில் யானைகள்: 4 வாரங்களில் வழிகாட்டு நெறிமுறைகள்! தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தின் கோயில் விழாக்கள் மற்றும் மத நிகழ்ச்சிகளில் யானைகளைப் பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி, நான்கு வாரங்களுக்குள் வரைவு Standard Operating Procedure (SOP)-ஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் அமர்வு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது. கோயில் யானைகளை மத நிகழ்ச்சிகள் மற்றும் திருவிழாக்களில் பயன்படுத்துவது தொடர்பாக தெளிவான மாநில அளவிலான SOP உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சேவா டிரஸ்ட் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

யானைகள் தமிழகத்தின் பண்பாடு, வரலாறு மற்றும் மத பாரம்பரியத்தில் முக்கிய இடம் வகிப்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. அதே நேரத்தில், சிறைப்பிடிக்கப்பட்ட யானைகளை மத நிகழ்ச்சிகளில் பயன்படுத்துவது சட்டரீதியான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்றும், பாரம்பரிய நடைமுறைகள் அரசியலமைப்பு மதிப்புகள் மற்றும் விலங்குகள் நலன் தொடர்பான சட்டப் பாதுகாப்புகளுடன் இணங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

SOP-ல் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள்

புதிய வழிகாட்டு நெறிமுறைகளில் விழாவுக்கு முன்பாக யானைகளின் உடல்நலம் மற்றும் உடற்தகுதி பரிசோதனை, மைக்ரோசிப் சரிபார்ப்பு, கட்டாயப் பதிவு மற்றும் மாவட்ட அளவிலான குழுவின் முன் அனுமதி போன்றவை இடம்பெற வேண்டும் என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், யானைகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அழைத்துச் செல்லும்போது பயண நேரத்திற்கு வரம்பு, கட்டாய ஓய்வு இடைவெளிகள், கால்நடை மருத்துவ உதவி மற்றும் உரிய போக்குவரத்து வாகனங்கள் தொடர்பான விதிமுறைகளும் உருவாக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

விழாக்களின் போது பட்டாசுகள் மற்றும் ஒலிபெருக்கிகளால் ஏற்படும் அதிகப்படியான சத்தம் யானைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால், ஒலிபெருக்கி மற்றும் பட்டாசுகளுக்கான அதிகபட்ச ஒலி அளவு (Decibel Limit) நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. யானைகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் பாதுகாப்பான இடைவெளி பராமரிக்கப்படுவதுடன், பட்டாசுகள் வெடிக்கப்படும் இடங்களுக்கு அருகில் யானைகளை நிறுத்துவதும் தடுக்கப்பட வேண்டும்.

யானைகளை கையாளும் பாகன்களின் தகுதி சரிபார்க்கப்பட வேண்டும் என்றும், அதிக எடையுள்ள கட்டுகள், கூர்மையான சங்கிலிகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவதையும் எந்தவிதமான உடல் ரீதியான கொடுமையையும் தடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

இந்த SOP உருவாக்குவதற்காக முதன்மை தலைமை வன உயிரினக் காப்பாளர் (Chief Wildlife Warden), இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் மற்றும் கால்நடை மருத்துவ நிபுணர்கள் அடங்கிய கூட்டு பணிக்குழுவை அமைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதிய SOP இறுதி செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் வரை, தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்கள் மற்றும் விலங்குகள் நல விதிமுறைகளை அதிகாரிகள் கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments