தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தேக்கம்பட்டி மாவட்ட சிறையில் காவலர்களைத் தாக்கிவிட்டு 17 விசாரணை கைதிகள் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
200 பேர் மட்டுமே தங்கும் வசதிகொண்ட இந்தச் சிறையில் 334 கைதிகள் அடைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இரவு கைதி ஒருவருக்கு வலிப்பு நோய் வந்ததாகக் கூறி நாடகமாடிச் சிறைக் கதவைத் திறக்கச் செய்து பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர்களைத் தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பியோடியுள்ளனர். இத்தாக்குதலில் காயமடைந்த காவலர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், தப்பியோடியவர்களைப் பிடிக்க 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
இதுவரை பிரவீன், சிலம்பரசன், ராஜ்குமார், ராஜா சிக்கந்தர் ஆகிய 4 கைதிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 13 பேரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, இச்சம்பவத்தில் பணியில் அலட்சியமாக இருந்ததாகக் கூறி 9 சிறைக் காவலர்களைச் சஸ்பெண்ட் செய்து சிறைத் துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.

