Homeசெய்திகள்முருகப்பெருமானுக்கு எழுப்ப வேண்டிய அரோகரா கோஷத்தை முதல்வருக்கும், அமைச்சருக்கும் எழுப்புவதா? வலுக்கும் கண்டனம்!

முருகப்பெருமானுக்கு எழுப்ப வேண்டிய அரோகரா கோஷத்தை முதல்வருக்கும், அமைச்சருக்கும் எழுப்புவதா? வலுக்கும் கண்டனம்!

முருகப்பெருமானுக்கு எழுப்ப வேண்டிய அரோகரா கோஷத்தை முதல்வருக்கும், அமைச்சருக்கும் எழுப்புவதா? திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்ச்சியை அரசியல் மேடையாக்கியதா அறநிலையத்துறை?

இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அவர்களின் பத்திரிகை அறிக்கை

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நேற்று நடைபெற்ற கந்தசஷ்டி சூரசம்ஹார விழா நிகழ்ச்சியில், நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவர் புஷ்பவனம் குப்புசாமி அவர்களும், இந்து சமய அறநிலையத்துறையின் அறங்காவலர் தேர்வுக் குழு உறுப்பினர் வேல்முருகன் அவர்களும், முருகப்பெருமானுக்கு பக்தர்கள் எழுப்ப வேண்டிய “அரோகரா” கோஷத்தை தமிழக முதல்வர் அவர்களுக்கும், அறநிலையத்துறை அமைச்சருக்கும் எழுப்பியது கடும் கண்டனத்திற்குரியது.

உலகெங்கிலும் உள்ள முருக பக்தர்கள் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் நடைபெறும் சூரசம்ஹார விழாவை மிகுந்த பக்தியுடனும், ஆன்மிக உணர்வுடனும் கண்டு தரிசிக்கின்றனர். சூரனை வதம் செய்து தர்மத்தை நிலைநாட்டிய முருகப்பெருமானின் வீரத்தையும் அருளையும் போற்றும் புனிதமான நிகழ்வு இது.

அத்தகைய ஆன்மிக நிகழ்வில், முருகப்பெருமானுக்கு உரிய பக்தி முழக்கத்தை அரசியல் தலைவர்களின் புகழ்பாடுவதற்குப் பயன்படுத்துவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. பக்தர்களின் ஆன்மிக உணர்வுகளையும், திருவிழாவின் புனிதத்தன்மையையும் கொச்சைப்படுத்தும் செயலாகவே இதனைப் பார்க்க வேண்டியுள்ளது.

ஆறு நாட்கள் கடும் விரதம் இருந்து திருக்கோவிலில், இவ்வைபவத்தில் கலந்து கொண்ட பக்தர்களின் முகத்தை சுளிக்க வைக்கும் செயலாகவும், அவமதிக்கும் செயலாகவும் இது அமைந்துள்ளது.

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோவில்கள் அரசியல் தலைவர்களின் புகழ்பாடும் மேடைகள் அல்ல. அவை கோடிக்கணக்கான இந்துக்களின் நம்பிக்கைக்கும், வழிபாட்டு உரிமைக்கும் அடையாளமாகத் திகழ்பவை. கோவில் நிகழ்ச்சிகளில் அரசியல் தலையீடோ, தனிநபர் துதிபாடல்களோ ஒருபோதும் அனுமதிக்கப்படக் கூடாது.

தங்களுக்கு புதியதாக முதல்வர் பொறுப்பு வழங்கி உள்ளார் என்பதற்காக முதல்வரின் மனதை குளிர வைக்கும் நோக்கில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்களா என்ற எண்ணம் பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

உங்களுக்கு பதவி வழங்கியதற்காக நீங்கள் தனிப்பட்ட முறையில் முதல்வரை வாழ்த்தலாமே அன்றி இதுபோன்று கடவுளோடு ஒப்பிடுவது மிகவும் கண்டனத்திற்குரியது.

எனவே, இந்தச் சம்பவத்திற்கு சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசினை இந்து முன்னணி வலியுறுத்துகிறது. மேலும், இனிவரும் காலங்களில் கோவில் திருவிழாக்கள் மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளில் அரசியல் புகழ்ச்சிகளுக்கு இடமளிக்கக் கூடாது என்பதை இந்து சமய அறநிலையத்துறை உறுதிப்படுத்த வேண்டும் என்பதையும் இந்து முன்னணி வலியுறுத்துகிறது.

முருகப்பெருமானின் திருவிழா முருகப்பெருமானுக்கே! அரசியல் துதிபாடல்களுக்கு அல்ல! என்பதை தமிழக அரசு உணர்ந்து செயல்பட வேண்டும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments