தமிழ்த் திரையிசையில் கிட்டாரின் பிதாமகனுக்கு அஞ்சலி!!
1960களை தமிழ்த்திரையிசையில் கிட்டார் இசைக்கருவியின் புரட்சிக்காலம் என்பேன். மொனோ தொழிநுட்பத்தில் இரண்டே இரண்டு ட்ராக்கில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட காலம் அது. அதனால் பாடலொன்றில் பயன்படுத்தப்பட்ட வாத்தியங்களின் சிறப்புக்களை டிஜிிடல் யுகமான இப்போதுபோல அப்போது துல்லியமாகக் கேட்டு திகைக்க முடியாது இருந்தாலும் அந்தக்காலத்தில் வெளியான பாடல்களை உற்றுக்கேட்டால் பல பாடல்களில் கிட்டார் வாசிப்பு பல நுட்பங்களைக் கொண்டிருப்பதை அவதானிக்கலாம் அந்த நுட்பங்களுக்கும் அற்புதமான வாசிப்புக்கும் சொந்தக்காரர் ஐயா பிலிப் அவர்கள்.
சாந்தியில் இடம்பெற்ற “யார் அந்த நிலவு ” ஆயிரத்தில் ஒருவனில் இடம்பெற்ற “நாணமோ இன்னும் நாணமோ ” ( இந்தப்பாடலில் நாணமோ என்று TMS பாடத்தொடங்கும் ஒவ்வொரு தடவையும் பின்னணியில் பிலிப்பின் அட்டகாசமான கிட்டார் வாசிப்பையும் அதே போன்றே சரணங்களை தொடங்கிப் பாடும்போது பின்னணியில் ஐயாவின் அசால்ட்டான வாசிப்பையும் கேட்டுக் கிறங்களாம் ) புதிய பறவையில் இடம்பெற்ற “எங்கே நிம்மதி “, ஶ்ரீதரின் படப்பாடலான “எங்கிருந்தாலும்
வாழ்க “.. இப்படி பிலிப் அவர்களின் கிட்டார் புகுந்துவிளையாடியுள்ள அழகான பாடல்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
இயக்குனர் ஶ்ரீதரின் படப்பாடல்களில் பிலிப் அவர்களின் கிட்டார் அடி தூள் கிளப்புவதுண்டு.
60 களில் தென்னமெரிக்க நாடுகளிலும் கியூபாவிலும் பிரபலமான கிட்டார் இசை நுணுக்கமொன்றை ஶ்ரீதரின் படமொன்றில் தன்னிடமிருந்த சாதாரண கிட்டாரைக் கொண்டு வாசித்து அசத்தியிருப்பார் பிலிப் என்று சசி அண்ணர் பல தடவை இவரின் திறமையை வானளாவ பிரமிப்புடன் சொல்லக் கேட்டுள்ளேன்.
இசைஞானியின் வரவின்பின்னர் கங்கை அமரன் உட்பட பல இசையமைப்பாளர்களுக்கு கொண்டக்டராகவும் பணியாற்றியிருந்தார் பிலிப் அவர்கள் தன்னுடைய வாழ்வை மற்றயோரை மகிழ்ச்சிப்படுத்தும் வாழ்வாக வாழ்ந்து தென்னிந்திய மற்றும் தமிழ்த் திரையிசைக்கு பல மிகச்சிறந்த கிட்டார் கலைஞர்கள் உருவாகக் காரணமான பிலிப் அவர்கள் இன்று காலமானதை அறிந்து கவலைப்படும் கோடிக்கணக்கான இசை ரசிகர்களில் நானும் ஒருவன்.
அந்த மகா கலைஞனுக்கு என் சிரந்தாழ்ந்த அஞ்சலிகளையும் இறுதி மரியாதையும் தெரிவிக்கிறோம்.

