இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கி உள்ள திரைப்படம் ‘லி மஸ்க்’. ‘விர்ச்சுவல் ரியாலிட்டி’ தொழில் நுட்பத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப்படம் 36 நிமிடங்கள் ஓடக்கூடியதாகும். இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், கேன்ஸ் திரைப்பட விழாவில் படம் திரையிடப்பட்டது.
பொதுவாக ‘விர்ச்சுவல் ரியாலிட்டி’ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்படும் படத்தை, அதற்காக பிரேயத்யமாக உருவாக்கப்பட்டிருக்கும் கண்ணாடி அணிந்து பார்வையாளர்கள் பார்க்க வேண்டும். அதே போல இந்தப்படத்தை அமர்ந்து பார்க்கும் நாற்காலியானது, திரைப்படத்தில் வரும் காட்சிகளுக்கு ஏற்ப, அசைவுகளையும் கொடுக்கிறது. இதனால் பார்வையாளருக்கு இது இன்னும் தத்ரூபமான அனுபவத்தை கொடுக்கிறது.
இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கி உள்ள இந்த ‘விர்ச்சுவல் ரியாலிட்டி’ படத்தை நடிகர் ரஜினிகாந்த் பார்த்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதே போல ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோருடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார்.

