Sunday, March 8, 2026
HomeUncategorizedமதுரை முக்குறுணி விநாயகர் - M. பழனிவாசன்

மதுரை முக்குறுணி விநாயகர் – M. பழனிவாசன்

வேழமுகமென்னும் யானை முகத்துடன் 

வேண்டுவோர்க்கு அருள்செய்யும்

விநாயகபெருமான்….

 

மஞ்சளோ, 

பசுஞ்சாணியோ எதனையும் 

சிறிதளவு எடுத்து

கூம்பு போல் பிடித்து வைத்து… 

 

அருகம்புல் ஒன்றையாவது

அதனில் சொருகிவைத்தால் போதும்… 

அந்த கணமே அதில் 

அழகாய் எழுந்தருள்வான்…

 

ஞான முதல்வனாய் விளங்கும்

ஆனை முகத்தவன் 

காளஹஸ்தி திருத்தலத்தில்

பாதாள விநாயகராக

பாசம்காட்டி…

 

காரைக்குடி அருகில்

பிள்ளையார்பட்டி

சமவெளியில் 

வந்தோர்க்கு வரமருளி…

 

மெச்சி எல்லோரும் 

கொண்டாடும் வகையில்

உச்சிப்பிள்ளையார் என்றோர் பெயர்கொண்டு

திருச்சிராப்பள்ளியினில்

மலைமீது குடிகொண்ட

பாச மகன்… 

 

தன் தந்தை

செஞ்சடை சிரத்தான்

சொக்கநாத பெம்மான்

திருவிளையாடல் பலசெய்த

மதுரையம்பதியில்

 

மக்கள் மனம் மகிழ

எழுந்தருளும் திருக்கோலமே 

முக்குறுணி விநாயகர் …  

 

முளைத்தெழுந்த செய்தியினையும், 

பெயர்பெற்ற காரணத்தையும்

வரலாற்று வாசனையுடன் பந்திவைப்பதே

இப்பதிவின் 

லட்சியம்…

 

நாயக்க வம்சமது 

பாண்டிய நாட்டை ஆண்டுவந்த காலமது… 

அத்தகைய வம்சத்தில் 

ஆற்றலுடன் விளங்கிய

மாமன்னரே

திருமலை நாயக்கர்…

 

தன்னுடைய ஆட்சிகாலத்தில்

தற்போது புகழ்பெற்று விளங்கும்

“நாயக்கர் மஹால்”தனை

கட்டியெழுப்ப பேராவல் கொண்டார்.

 

மஹாலை எழுப்புதற்கு 

பெருமளவில் மண் தேவைப்பட்டது. 

 

மந்திரி பிரதானிகளுடன்

ஆலோசித்த பின்னர்

அவ்வளவு மண்ணையும் 

இன்றைய வண்டியூரில் எடுப்பதென முடிவு செய்யப்பட்டது.

 

அதன்படியே மலையளவு மண் வெட்டி

எடுக்கப்பட்டது.

 

இதனால்

அவ்விடத்தில் 

பிரம்மாண்டமான 

பள்ளமொன்று உருவானது.

 

அந்த 

பள்ளத்தை அப்படியே விட்டுவிட மனமின்றி, என்னசெய்வதென…

யோசித்து உருவாக்கப்பட்டதே இன்று 

பிரபலமாய் விளங்கும்

“வண்டியூர் தெப்பக்குளம்” .

 

இந்த தெப்பக்குளத்திற்கு 

தண்ணீர் வந்துசேரும் வழிகளையும் உண்டாக்கி,

எழிலாய் வடிவமைத்தான் மன்னன் திருமலை நாயக்கன். 

 

மதுரையின் மற்றுமொரு மகத்தான அடையாளமாய்

வண்டியூர் தெப்பக்குளம்

இன்றும் விளங்குகிறது.

 

இப்படி மஹாலுக்கு 

மண்ணெடுத்தபோது …

வெளிப்பட்டதே … இன்று மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் அருள்பாலிக்கும் முக்குறுணி விநாயகர்… 

 

இந்த முக்குறுணி விநாயகர்…

 

அதற்குமுன் எந்த காலத்தில் 

செதுக்கப்பட்டார் ?

 

எப்படி வணங்கப்பட்டார்?

 

மண்ணிற்குள் ஏன் மறைந்துபோனார்?  என்பதற்கெல்லாம் வரலாற்றில் விளக்கங்கள் இல்லை.  ஆனால், நாயகர் திருமேனி கண்டெடுக்கப்பட்டவுடன் 

மன்னன் திருமலை நாயக்கருக்கு  தகவல் சொல்லப்பட்டது. 

 

மகிழ்ந்துபோனான் மன்னன். 

 

தீர்க்கமான முடிவுடன்

”மண்ணெடுத்த இடத்தில்

கிடைத்த மோதக நாயகனை …

 

மீனாட்சி அம்மன் கோயிலிலே பிரதிஷ்டை செய்திடுக …” என்று மன்னனவன் 

ஆணையிட்டான். 

 

ஒரு நன்னாளில்

மீனாட்சி அம்மன் திருக்கோயில்

சுற்றுப்பிரகாரத்தில், மீனாட்சியின் சன்னதியிலிருந்து,

சுந்தரேசபெருமானை தரிசிக்கச் செல்லும் வழியில், 

விநாயக பெருமான் ஒய்யாரமாக உட்கார்ந்தார்.

 

இந்த சம்பவத்தில் மெய்சிலிர்க்க வைக்கும் ஒரு பின்னணியும் பிணைந்துள்ளது. 

 

ஏதோ ஒரு காரணத்தால்…

எப்போதோ …

தன் தாயைப் பிரிந்திருந்த பிள்ளை… 

 

மீண்டும் தன் தாயிடம் சேர்ந்த 

நெகிழ்வான சம்பவம் போல…

 

அன்னை மீனாட்சியின் கோயிலுக்குள் மகன் விநாயகர்  வந்துசேர்ந்தார்  

என்றே

நானின்று கருதுகிறேன். 

 

இப்படி வண்டியூரிலிருந்து வந்தமர்ந்த விநாயக பெருமானே “முக்குறுணி விநாயகர்”

என்று பெயர்பெற்றார். 

 

பிரதிஷ்டை செய்யப்பட்ட நாளிலேயே

இந்த பெயர் பெற்றாரா? 

 

ஏன் இந்த பெயர்பெற்றார் என்றும் தெரியவில்லை  

 

ஆனால்,

பெயருக்கான விளக்கத்தை மட்டுமே 

புரிந்து கொள்ள முடிகிறது…

 

 அது என்ன முக்குறுணி விநாயகர்?

 

இதோ வருகிறது விளக்கம்….

பழங்காலத் தமிழர்கள் 

கையாண்ட அளவு முறைகளில் ஒன்று

“பெய்தலளவை”. 

 

பெய்தலளவை என்பது

நெல் முதலிய தானிய வகைகளை அளக்கும் முறையாகும்.

 

இவற்றை அளக்க பயன்பட்ட அளவுகள் உழக்கு, படி, மரக்கால் ”குறுணி” ஆகியவை உள்ளிட்ட பலவும் உண்டு.  

 

இவற்றில் இரண்டு அரைப்படி கொண்டது 1 படி

2 படி கொண்டது 1 மரக்கால்

3 மரக்கால் கொண்டது 1 குறுணி

 

இதில் 3 குறுணி என்பது ”முக்குறுணி” எனப்படுகிறது. 

ஆக, 1 குறுணி என்பது 6 படி அளவாகும். 

 

அதுபோன்று 3 குறுணி என்றால் 18 படியாகும்.

 

ஒவ்வொரு விநாயகர் சதுர்த்தி நாளன்றும், 

18 படி அரிசி அளந்து, அதை ஊறவைத்து மாவாக்கி, வெல்லம், தேங்காய், கடலை, எள் மற்றும் நெய் கலந்து ”மோதகம்” எனப்படும் பிரம்மாண்டமான ஒரேயொரு கொழுக்கட்டை செய்து, 

விநாயகருக்குப் படைக்கப்பட்டு,

பின் மக்களுக்கு பிரசாதமாய் வழங்கப்படுகிறது. 

 

இப்படி, மூன்று குறுணி அதாவது முக்குறுணி எனப்படும், 18 படி அரிசியால், உருவாக்கப்பட்ட   கொழுக்கட்டை நைவேத்யம் செய்யப்படுவதனால் இந்த விநாயகர் “முக்குறுணி” விநாயகர் பெயர் பெற்றார். 

 

சரியாக 18 படி ஏன்  அரிசி போட வேண்டும்? 

 

இந்த வழக்கம் எப்போது?

யாரால் தொடங்கப்பட்டது? என்பதெல்லாம் தெரியவில்லை.

—————–

எது எப்படியோ…

 

17 ஆம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட மன்னனுக்கு, 

 

ஒரு பிரம்மாண்ட மஹால் கட்ட எண்ணம் ஏற்பட்டது ஏன்? 

 

அதற்கு மண்ணெடுக்க வண்டியூர் தெரிவு செய்யப்பட்டது ஏன்? 

 

அங்கு மண்ணுக்குள்

பல நூற்றாண்டுகளுக்கும் முன்பே எதனால் ஒரு சிலை புதைந்திருந்தது?

 

மண்ணெடுக்கும் போது சரியாக வெளிப்பட்டது எப்படி?

 

மன்னனின் முடிவினால்

அந்த விநாயகர் சிலை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரவைத்த சூட்சமம் எது? 

 

முக்குறுணி அரிசியால் கொழுக்கட்டை செய்யவைத்த தாக்கமென்ன? 

 

இவையெல்லாம் இயற்கையின் சுழற்சி்போல இயங்குகிறதே எப்படி?! 

 

ஒன்றுக்கொன்று பின்னிப்பிணந்த இந்த விநாயகரின் கதை… வியக்க வைக்கும் வரலாறு…

இறைவனின் மற்றொரு திருவிளையாடல் என்பதன்றி வேறென்ன?   

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments