Monday, March 16, 2026
HomeUncategorizedசரஸ்வதி பூஜை ஆயுத பூஜை ஐப்பசி 6 திங்கள் கிழமை

சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை ஐப்பசி 6 திங்கள் கிழமை

ஆயுத பூஜை பகல் 12.15 முதல் 2.15 வரை. விஜயதசமி ஐப்பசி 7 24.10.2023 செவ்வாய்கிழமை அதிகாலை 5 முதல் 6 வரை குழந்தைகளை பள்ளியில் சேர்க்க , மறு பூஜை செய்ய பகல் 10.46 முதல் 11.16 வரை. நாடு முழுவதும் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று நவராத்திரி விழாவின் இறுதியாக வரும் சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமியாகும். வட மாநிலங்களிலும், தென் மாநிலங்கள் சிலவற்றிலும் இந்த பண்டிகை துர்கா பூஜை மற்றும் தசரா என்ற பெயரிலும் கொண்டாடப்படுகிறது. ராமர், ராவணனை வதம் செய்ததும் இதே நாளில் தான் என சொல்லப்படுகிறது. இதனால் ராவண வதமாகவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

சரஸ்வதி பூஜை செய்வது எப்படி?

நவராத்திரியில் நவமி திதியில் முறைப்படி சரஸ்வதிதேவியை வழிபட்டால், அனைத்து கலைகளிலும் சிறந்து விளங்கலாம் என்கின்றன ஞான நூல்கள். இந்தப் புண்ணிய தினத்தில் அன்னை சரஸ்வதியை விரிவான முறையில் பூஜை செய்யும் முறைகள் உண்டு. முறைப்படி பூஜை அறையில், கலசம் வைத்து, அதில் அன்னையை எழுந்தருளச் செய்து, வேத விற்பன்னர்களின் வழிகாட்டலுடன் பூஜை செய்யும் வழக்கம் உண்டு.

சரஸ்வதி பூஜைக்கு முதல்நாளே (அதாவது இன்று) பூஜை அறையைக் கழுவி சுத்தம் செய்து கோலங்கள் இட்டு அலங்கரிக்க வேண்டும். இல்லை என்றால் நாளைக் காலையிலாவது இதைச் செய்துவிடுவது நல்லது. பூஜை அறையில் பிள்ளைகளின் பாடப் புத்தகங்களை அடுக்கி மேடை அமைக்க வேண்டும். புத்தகங்களை அடுக்கி அதன் மீது வெண்பட்டு அல்லது வெள்ளை ஆடை ஏதேனும் ஒன்றை விரித்து அலங்கரிப்பார்கள். மேடையில் மையமாக சரஸ்வதிதேவி படம் அல்லது பிம்பத்தை (விக்ரகத்தை) வைத்து பூஜைக்குத் தயாராக வேண்டும்.

அன்னை சரஸ்வதி தேவியின் படம் அல்லது பிம்பத்துக்குச் சந்தனக் குங்குமத் திலகமிட்டு, பூக்கள் சூட்டி அலங்கரிக்கலாம். அருகிலேயே பூஜைக்கான கலசம் வைத்து அதில் ஏலக்காய் முதலான வாசனைத் திரவியங்களைப் போட்டு (தங்க ஆபரணங்கள் முத்துக்கள் போன்றவற்றைப் போடுவதும் உண்டு), கலசத்தில் வாயில் மாவிலை தேங்காய் வைத்து வணங்கி, பூஜையைத் தொடங்க வேண்டும். புத்தகத்தை வைக்கும் முன் சிறிது நேரம் படித்துவிட்டு வைத்துவிட வேண்டும்.  அதேபோன்று அவரவர் அன்றாடம் பயன்படுத்தும் நோட்டுப்புத்தகங்கள், லேப்டாப், செக் புக், கணக்குப் புத்தகங்களையும் வைக்கலாம்.

முதலில் `முழுமுதற் தெய்வமாம் விநாயகரைத் தொழுது, நாம் மேற்கொள்ளப் போகும் சரஸ்வதிதேவிக்கான பூஜை எவ்விதத் தடங்கலுமின்றி நிறைவேற அருள்செய்ய வேண்டும் என்று பிரார்த்திக்க வேண்டும். பின்னர் சரஸ்வதிதேவியை மனத்தில் தியானித்து, `தாயே என் பூஜையை ஏற்று, அறியாமால் ஏதேனும் பிழை நேர்ந்தால் பொறுத்து, பூரண அருளை வழங்க வேண்டும்’ என்று மனதார வேண்டிச் சங்கல்பித்துக்கொண்டு, உரிய துதிப்பாடல்களைப் பாடி, வணங்க வேண்டும்.

குமரகுருபரர் அருளிய சகலகலா வல்லிமாலை முதலான துதிப்பாடல்களைக் குடும்பத்துடன் சேர்ந்து பாடுவது விசேஷம்.

பின்னர் தூப, தீப ஆராதனைகளைச் செய்யவேண்டும். நைவேத்தியம் படைத்து வழிபடவேண்டும்.

இதில் முக்கியம் பிறருக்கு தானம் வழங்குவது. ஏழைகளுக்கு பிரசாதங்களை வழங்கி அவர்கள் உண்டபின்னர், நாமும் பிரசாதம் ஏற்கலாம். சரஸ்வதி பூஜை அன்று ஏடு அடுக்கும் நாம், மறுநாள் விஜயதசமி தினத்தில் உரிய நேரத்தில், சரஸ்வதிதேவிக்கு கற்கண்டு கலந்த பால் நைவேத்தியம் செய்து ஏடு பிரிக்கவேண்டும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments