Home Uncategorized ஆச்சி’ மனோரமா நினைவு நாளின்று!

ஆச்சி’ மனோரமா நினைவு நாளின்று!

நகைச்சுவை, குணச்சித்திரம் என பன்முக நடிப்பை வெளிப்படுத்தியவர் ‘ஆச்சி’ மனோரமா நினைவு நாளின்று! உங்களில் யாருக்கேனும் வாழ்க்கை வெறுத்துப்போனாலோ, தற்கொலை எண்ணம் தலைதூக்கினாலோ மனோரமாவின் வாழ்க்கை வரலாறை ஒருமுறை புரட்டிப் பாருங்கள்.

இளமையில் வறுமை, சில வருடங்களே நீடித்த மண வாழ்க்கை.. என அவர் தாண்டி வந்த தடைக்கற்கள் அதிகம். அதையெல்லாம் அவர் படிக்கட்டுகளாக மாற்றிக்கொண்ட திறமை, தங்கமாக ஜொலித்த அவரது குணம், வயிறு வலிக்கச் சிரிக்க வைத்த நகைச்சுவை… உங்களை ஒரே நொடியில் வாழ்க்கையின் மீது அதீதக் காதல்கொண்டவர்களாக மாற்றிவிடும். ஆம்..

இந்த கோலிவுட் திரையுலகம் ஆரம்பித்த காலகட்டங்களில் இருந்து இதுவரை க்கும்நம் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கின்ற எத்தனையோ கதாநாயகிகளைப் பார்த்திருப்போம்.

ஆனால், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவர்களுடைய புகழும், நடிப்பும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவிடும். ஆனால், காலத்திற்கும் மாறாமல் காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டு நகைச்சுவை, குணச்சித்திரம் எனப் பன்முக நடிப்பை வெளிப்படுத்தியவர், ‘ஆச்சி’ மனோரமா. நாடகத்துறை, சின்னத்திரை, வெள்ளித்திரை என நடிப்பின் அனைத்துப் பிரிவுகளிலும் தனது பெயரை நிலைநாட்டிய மனோரமா, நடிப்பில் ஐம்பது ஆண்டுகளைக் கடந்து ‘பொன்விழா’ கொண்டாடியவரவர்.

மனோரமாவின் தந்தை காசி கிளாக்குடையார், தனது மனைவியின் தங்கையை இரண்டாம் தாரமாக மணந்துகொண்டு, பத்து மாதக் குழந்தையான மனோரமாவையும், அவரது அம்மாவையும் வீட்டைவிட்டு வெளியேற்றினார்.

அப்படி வெளியேறியதும், காரைக்குடி அருகிலுள்ள பள்ளத்தூரில் குடிபெயர்ந்து வீட்டு வேலைகளைப் பார்த்தும், பலகாரங்களைச் செய்தும் சில காலம் வாழ்க்கையை ஓட்டியிருக்கிறார்,

மனோரமாவின் தாயார். ஒருகட்டத்தில் அவருக்கு உடல்நலம் குன்றிப்போக, குடும்பப் பொறுப்புகளைச் சுமந்துகொண்டு பள்ளிக்கூடம் படிக்க வேண்டிய பன்னிரண்டு வயதில், பத்து ரூபாய் சம்பளத்தில் ‘யார் மகன்’ என்ற நாடகத்தின் மூலம் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார்.

‘கிராமத்தில் பொம்பளப் புள்ளைங்க வெளியே வர்றதே பாவம்’ என்றிருந்த காலகட்டத்தில் ‘கலைமாமணி நாடக சபா’ குழுவில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தார், மனோரமா. ஒரு நாடகத்தில் நடிக்கத் திருமயத்தில் ரயிலேறியதும், நூறு பக்க வசனத்தை மனப்பாடம் செய்ய நாடகக் குழு கொடுத்துவிட, கோவையில் இறங்குவதற்குள் அத்தனை பக்கத்தையும் மனப்பாடம் செய்து முடித்திருந்தார், மனோரமா.

இவர் கலையார்வத்திற்கு இந்த ஒரு நிகழ்வே சிறந்த சான்று. மனோரமாவுக்கு படிக்கிற வயதிலேயே நன்றாகப் பாடும் திறமையும் வாய்த்திருந்தது. சினிமா பார்த்தும், கிராமபோனில் பாடல்களைக் கேட்டு, தன் பாடும் திறமையை வளர்த்துக்கொண்டே வந்தார்.

இவரது பாடும் திறமையைக் கண்டு வியந்த அக்கம் பக்கத்தினர், அவரை அழைத்துப் பாடச்சொல்வது வழக்கமாக இருந்ததாம். பலரும், ‘வா வாத்யாரே வூட்டாண்ட’ பாடல்தான் மனோராமா பாடிய முதல் பாடல் என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், ‘மகளே உன் சமர்த்து’ படத்தில் இடம்பெற்ற ‘தாத்தா தாத்தா பொடி கொடு’ பாடல்தான், இவர் பாடிய முதல் பாடல். தென்னிந்தியாவைச் சேர்ந்த அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, என்.டி.ராமாராவ் ஆகிய ஐந்து முதலமைச்சர்களுடன் இணைந்து நடித்த ஒரே நடிகை மனோரமாதான்.

மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்திருக்கிறார். 1500-க்கும் மேற்பட்ட படங்களிலும் 5000-த்திற்கும் அதிகமான நாடகங்களிலும் நடித்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தவர். கலைமாமணி விருது, பத்மஸ்ரீ விருது, அண்ணா விருது எனப் பல விருதுகளையும் வாங்கிக் குவித்திருக்கிறார்.

இப்படித் தனது வாழ்வின் பெரும்பகுதியைக் கலையுலகில் செலவழித்தால், ‘கலை’ என்னும் சொல்லோடு இரண்டறக் கலந்தவர் நடிகை மனோரமா. நடிப்பும் சரி, பாடலும் சரி, நடனமும் சரி… மனோரமா எதையும் முறையாகக் கற்றுக்கொண்டவர் இல்லை. அத்தனையும் கேள்வி ஞானம்தான்.

ஆனால், அதை எந்தளவிற்குச் சிறப்பாகச் செய்யமுடியுமோ, அந்தளவிற்கு சிறப்பாகச் செய்தார். அந்தக் காலத்தில் ஒரு பிரபலமான ஜோக் ஒன்று இருந்தது. ‘என் பொண்டாட்டி செஞ்ச அல்வா, மனோரமா மாதிரி, பாத்திரத்தோடு ஒட்டிக்கும்!’ என்பதுதான், அது. ஆரம்ப பேராவில் சொன்னது போல் தமிழ் மக்கள் அத்தனைபேரையும் வயிறு வலிக்கச் சிரிக்க வைத்த மனோரமாவின் சொந்த வாழ்க்கை இறுதிவரை சோகம் நிறைந்ததாகவே இருந்தது. ஆனாலும் மறைந்த நிலையிலும் மனத் திரையில் வாழும் ஆச்சிக்கு ஆந்தை சினிமா அப்டேட்ஸ் சார்பில் அஞ்சலி

Exit mobile version