சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவரை ஐகோர்ட் வளாகத்திலேயே போலீஸ் அவரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் ஏடிஜிபி ஜெயராமுக்கு தொடர்புள்ளதாகவும், ஆள் கடத்தலுக்கு அரசு வாகனத்தைப் பயன்படுத்தியதாகவும் போலீஸ் கூறியதை அடுத்து, விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவும் ஐகோர்ட் உத்தரவிட்டது.
திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர், தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து பதிவு திருமணம் செய்துள்ளார். இந்த விவகாரத்தில் பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையினர் மூலம் இளைஞரின் சகோதரரை புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஜெகன் மூர்த்தி கடத்தியதாக புகார் எழுந்தது.
காதல் விவகாரத்தில் இளைஞரை கடத்தியதாக புரட்சி பாரதம் தலைவரும், கே.வி.குப்பம் எம்.எல்.ஏவுமான பூவை ஜெகன்மூர்த்தி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பெண்ணின் தந்தை உள்பட 5 பேர் கைதாகியுள்ளனர். பூவை ஜெகன்மூர்த்தியை போலீசார் விசாரிக்கச் சென்றபோது அவரது கட்சியினர் தடுத்து, மறியல் செய்தனர். இந்தச் சம்பவத்தின்போது பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவானார்.
இந்நிலையில் பூவை ஜெகன்மூர்த்தி முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். திருமணம் செய்து கெண்ட இளம்பெண்ணின் தந்தை வனராஜா மற்றும் முன்னாள் பெண் கான்ஸ்டபிள் மகேஷ்வரியின் அறிவுறுத்தலின் பேரில், ஏ.டி.ஜி.பி மூலம் இந்தப் பிரச்சனை பூவை ஜெகன்மூர்த்தியிடம் சென்றுள்ளது. அதன் பிறகு, எம்.எல்.ஏ ஜெகன் மூர்த்தியின் ஆதரவாளர்கள் இரு கார்களில் திருமணம் செய்து கொண்ட இளைஞரை கடத்துவதற்காக அவரது வீட்டுக்குச் சென்றுள்ளனர்.
ஆனால், அவர் இல்லாததால், அவரது சகோதரனை கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் போலீசார் தேடுவதை அறிந்து, ஏ.டி.ஜி.பியின் காரில் சிறுவனை கொண்டு சென்று இறக்கி விட்டுள்ளனர். அந்தக் காரில் வனராஜா மற்றும் மகேஷ்வரியும் இருந்துள்ளனர். பூவை ஜெகன் மூர்த்தி மட்டுமின்றி ஏ.டி.ஜி.பி., ஜெயராமிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்று வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதி, பூவை ஜெகன்மூர்த்தி, ஏடிஜிபி ஜெயராம் ஆகியோர் பிற்பகலில் ஆஜராக உத்தரவிட்டார். ஆஜராக தவறினால் இருவரையும் கைது செய்ய ஆணையிடப்படும் என நீதிபதி தெரிவித்தார். இதையடுத்து இன்று பிற்பகலில் பூவை ஜெகன்மூர்த்தி, ஏடிஜிபி ஜெயராம் ஆகியோர் ஆஜர் ஆகினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், ஏடிஜிபி ஜெயராமை கைது செய்து காவலில் வைக்க உத்தரவிட்டார். ஏடிஜிபி ஜெயராமை கைது செய்து காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில் அவரை போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
