டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்றைய காலகட்டத்தில் பயணத் திட்டமிடல் (Travel planning) என்பது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியோடு மிகச் சுறுசுறுப்பாகவும் புத்திசாலித்தனமாகவும் மாறி வருவதாக ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
உலகளாவிய நுகர்வோர் மற்றும் நூற்றுக்கணக்கான பயண சேவை நிறுவனங்களின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு ‘கிரிட்டியோ’ (Criteo) நிறுவனம் நடத்திய ஆய்வில், ஆசிய-பசிபிக் (APAC) பிராந்தியத்தைச் சேர்ந்த பயணிகள், தங்களின் பயணங்களை முன்பதிவு செய்வதற்கு முன்பாக ஏஐ டூல்களைப் பயன்படுத்தி மிக விரிவான ஆராய்ச்சிகளில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. குறிப்பாக, முழுமையான பயணத் திட்டமிடலுக்கு ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் உலக அளவில் ஆசிய-பசிபிக் பகுதியே முதலிடத்தில் உள்ளதாகக் குறிப்பிடும் கிரிட்டியோ இந்தியாவின் தலைவர் மேதாவி சிங், பயணிகளின் தேடலும் முன்பதிவு முறையும் கணிசமாக மாறி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வின்படி, சுமார் 41 சதவீத பயணிகள் சுற்றுலாத் தலங்களில் செய்ய வேண்டிய பொழுதுபோக்குச் செயல்பாடுகளைத் தேர்வு செய்யவும், 40 சதவீதத்தினர் புதிய இடங்களைக் கண்டறியவும், மற்றொரு 40 சதவீதத்தினர் தங்குமிடங்களைப் பரிந்துரை பெறவும் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர்; மேலும் 30 சதவீதத்தினர் தங்களின் ஒட்டுமொத்தப் பயணத் திட்டத்தையுமே (Full-trip planning) இதன் மூலமே வடிவமைக்கின்றனர்.
‘சாட்ஜிபிடி’ (ChatGPT) போன்ற ஏஐ தளங்கள் மூலம் தங்களுக்குக் குறைந்தபட்சம் ஒரு புக்கிங் ரெஃபரலாவது கிடைப்பதாக 72 சதவீத பயண சேவை நிறுவனங்கள் ஒப்புக் கொண்டுள்ள வேளையில், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் விமானக் கட்டணங்களுக்கான சராசரிச் செலவு ஆண்டுக்கு ஆண்டு 9 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், மக்கள் நீண்ட தூரப் பயணங்களைத் தவிர்த்து குறுகிய கால சர்வதேசப் பயணங்களையே (Short international trips) அதிகம் விரும்புவதாகவும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
தொழில்நுட்பம் இவ்வளவு வளர்ந்த போதிலும், பயணங்களை இறுதி செய்வதில் மக்களின் நம்பகத்தன்மைக்கு மற்றவர்களின் விமர்சனங்கள் (Reviews – 66%), இலவச ரத்து வசதி (Free cancellation – 48%) மற்றும் சலுகைகள் (Promotions – 45%) ஆகியவையே முதன்மைக் காரணிகளாக விளங்குவதால், பயணச் சேவை பிராண்டுகள் இந்தத் தேவைகளை முன்கூட்டியே உணர்ந்து வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும் என்றும் இந்த ஆய்வு விரிவாக விளக்குகிறது.

