Home Uncategorized அக்டோபர் – 2 – காமராஜர் நினைவு நாள் கட்டுரை

அக்டோபர் – 2 – காமராஜர் நினைவு நாள் கட்டுரை

“பெருந்தலைவர் கு.காமராஜர்”

உலகம் தனது சரித்திரத்தில் அவ்வப்போது ஞானியர் , மாமேதைகள், மாவீரர்கள் விஞ்ஞானிகள், மற்றும் ஒப்பற்ற தலைமையாளர்கள் என பலரை ஏற்றிக்கொண்டே வந்திருக்கிறது.

இத்தகைய நிலை தொடர்ந்துகொண்டே யிருக்கிறது. இனியும் தொடரும். இதில் சாணக்யர் , ஆர்யபட்டர், ஸ்ரீ இராமனுஜர், ராஜராஜ சோழன், மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஸ் கணிதமேதை இராமானுஜம், சர்.சி.வி.ராமன், விஞ்ஞானி ஜெகதீஸ் சந்திரபோஸ், டாக்டர். அப்துல்கலாம் என பல்வேறு துறைகளில் பாரதத்தின் பங்களிப்பு மிக மிக அதிகம்.

இந்த தேசத்தில் பிறந்ததனால் பெருமைப்படும் நம்போன்றோர்களிடையே தன்னால் நம் தேசத்தை பெருமைகொள்ளச் செய்த பலருக்குமிடையே தங்கள் மாண்புகளால் அமரநிலை எய்தபின்னும் ஜோதிசொரூபமாய் ஜொலிக்கும் அரிய சிலரில் அற்புதமானவர் ”பெருந்தலைவர்” எனப் போற்றப்படும் கு.காமராஜர்.

தனிப்பட்ட வாழ்க்கை, பொது வாழ்க்கை இரண்டிலும் தன்னுடைய தனித்துவமான முத்திரையைப் பதித்து, அசைத்துப் பார்க்கமுடியாத சாதனைக்கோட்டையை நிர்மாணித்த காமராஜரின் வாழ்க்கையை ஆராய்வதே நம் நோக்கம்.

கோயில்யானையை அடக்கிய தீரம்: 

  ஒருமுறை விருதுநகரில் உள்ள ஒரு கோயில்யானை திடீரென மதம்பிடித்து, பலத்த சேதம் விளைவித்தவண்ணம் வீதிவீதியாக ஓடியது. யானைப்பாகன் முதற்கொண்டு பொதுமக்கள் பீதியடைந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள அஞ்சி ஓடினர். இதைக் கேள்விப்பட்டு விரைந்து வந்த ஒரு சிறுவன், தனது கையில் பலமான நீளமான ஒரு இரும்புச் சங்கிலியுடன் யானையைத் துரத்திக்கொண்டு ஓடினான்.

துணிச்சலுடன் யானையை எதிர்கொண்டு யாரும் எதிர்பாராத வண்ணம் சங்கிலியை யானையின் பின்னங்கால்களில் வீசி அதனைப் பிணைத்தான். மேற்கொண்டு முன்னேறிச் செல்லமுடியாமல் யானை சீறியது. சிறுவன் மீது தாக்குதலுக்கு முயற்சித்தது. ஆனால் தன் பலங்கொண்டமட்டிலும் சாதுர்யத்துடன் போராடி அதனைக் கட்டுக்குள் கொண்டுவந்தான்.

யானைப்பாகனும் அருகில் வந்துசேர, ஒருவழியாக யானை சமாதானமானது. உயிர்ப்பலியிலிருந்து மக்களைக் காப்பாற்றிய அச்சிறுவனை ஊரே மெச்சிக்கொண்டாடியது. அச்சிறுவனே பின்னாளில் ”பெருந்தலைவர்”, ”கிங்மேக்கர்” என உலகமே கொண்டாடிய கு.காமராஜர். 

1903 ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் நாள் தமிழ்நாட்டில் விருதுநகர் என்கிற ஊரில் குமாரசாமி – சிவகாமி அம்மாள் தம்பதியருக்கு பிறந்தவர் காமராஜர். பெற்றோர் இட்ட பெயர் காமாட்சிநாதன்.

தந்தையின் நினைவுபலப்படாத நாளிலேயே தந்தையின் மறைவினால் தடுமாறிய காமராஜர் தன்னுடைய தாய்மாமன் ஆதரவினால் நடைபோடத் தொடங்கியது. கேரளத்தில் ஜவுளிவியாபரத்தில் ஈடுபடுத்தப்பட்ட காமராஜர் அதில் முழுமையாக கவனம் செலுத்த முடியாமல், மீண்டும் விருதுநகருக்குத் திரும்பினார். 

அரசியல் பங்களிப்பு:

அப்போதைய காங்கிரஸ் பேரியக்கத்தின் தேசவிடுதலைப் போராட்டத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட காமராஜர் போராட்டங்களில் கலந்துகொண்டு பலமுறை சிறைசென்றார்.

தனது அரசியல் குருவாக தீரர். சத்தியமூர்த்தி அவர்களை ஏற்றுக்கொண்டார். உயர்கல்வி வகுப்புக்குச் செல்லாத காமராஜர், தன் அரசியல் ஞானத்தை புத்தகங்கள் படிப்பதன்மூலமும், தலைவர்களுடனான நெருக்கத்தின் மூலமும் வளர்த்துக்கொண்டார்.

தொண்டர்களை அரவணைப்பதிலும், மாற்றுக்கருத்து கொண்டவர்களிடம்கூட நல்லிணக்கமுடன் தோழமை கொண்டிருந்தார். நடைமுறைப்பேச்சு வழக்கிலேயே மிக எளிமையாக அனவரிடத்திலும் பேசிய இவர், மேடைப்பேச்சின்போதும் கள்ளமும் ஜாலவார்த்தைகள் கலப்பு ஏதுமின்றி நாகரீகம் காத்தவர்.

சாதனை முதல்வராக காமராஜர்:

1954 ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாண முதல்வராக இருந்த திரு.ராஜாஜி அவர்கள் அரசின் ”குலக்கல்வி” திட்டம் கடும் எதிர்ப்புகளைச் சந்தித்ததால் பதவி விலகவேண்டியிருந்தது.

இதனால் காங்கிரஸ் கட்சி – சென்னை மாகாண காங்கிரஸ் அரசு ஆகியவை கடும் நெருக்கடிகளைச் சந்தித்தது. இத்தகைய நிலையில் காமராஜர் அவர்கள் சென்னை முதல்வராகப் பதவியேற்றார். 

ஆளுமைப்பண்பு மேலோங்கியிருந்த காமராஜர் தனது ஆட்சிகாலத்தில் அணைகள் கட்டுதல், விளைபொருட்களைப் பெருக்குதல், வேலைவாய்ப்பினைப் பெருக்கும் ஆலைகளை அமைத்தல், என பெரும் சாதனைத்திட்டங்களை உண்டாக்கினார்.

அப்போது அவரது அமைச்சர்களின் எண்ணிக்கைவெறும் 12 மட்டுமே. ஊழலற்ற உயர்வான நோக்கம்கொண்ட, அப்பழுக்கற்ற ஆட்சியினை நடத்திய, அவரால் கொண்டு வரப்பட்டதே பள்ளிகளில் இலவச மதிய உணவுத் திட்டம். அவர் பதவியேற்றபோது பல ஊர்களில் அரசுப்பள்ளிகளை நடத்த வழியின்றி இழுத்துமூடும் நிலைக்குச் சென்றபோது, அதனைத் தடுத்ததோடு மேலும் குக்கிராமங்களிலும் புதியக் கல்விச்சாலைகளை அமைத்தவர் காமராஜர். இதனால் ஒரு புதுயுகத்திற்கான கல்விப்புரட்சி ஏற்பட்டது.

ஆளுமை :

ஒருமுறை போக்குவரத்து சம்பந்தமாக பாலம் கட்ட வேண்டியிருந்ததால், அதுகுறித்து ஆய்வினை சமர்ப்பிக்க சிலநாட்கள் கெடுவிதித்து அரசின் உயர்நிலை அதிகாரிகளிடம் பொறுப்பை ஒப்படைத்தார். கெடுமுடிந்தநிலையில் அவ்வதிகாரிகளை வரவழைத்து விவரம் கேட்டார்.

அதற்கு அவர்கள் அத்திட்டத்தினை செயல்படுத்த சாத்தியக்கூறுகள் ஏதுமில்லை எனக் கூறிவிட்டனர். அதற்கு காமராஜர், “இல்லை… முடியாது… என்றெல்லாம் பதில் கூறுவதற்கு அரசின் சம்பளம் வாங்கும் அதிகாரிகளோ …. அல்லது என்னைப் போன்ற மக்கள் பிரதிநிதிகளோ தேவையேயில்லை.

மக்களுக்கான நலத்திட்டங்களை நிறைவேற்றுவதற்குத்தான் மக்கள் நம்மை நியமித்திருக்கிறார்கள். ஆகவே சாத்தியமில்லாததையும் சாத்தியப்படுத்துங்கள்” என மீண்டும் பணித்தார்.

பின்னர் அத்திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு, இன்றளவும் மக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இத்தகைய தனது செயல்களின் மூலம் மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பையும், அரசு அதிகாரிகளின் கடமையையும் தன் தெள்ளத்தெளிவான அணுகுமுறைகளால் எடுத்துக்காட்டினார். 

தொலைநோக்குப் பார்வை :

அதிகாரத்தில், புகழுச்சியில் இருப்பவர்களின் மனதில் எப்போது ஒருவித கிளர்ச்சியும், சற்று மமதையும் குடிகொண்டிருப்பது இயல்பான ஒன்று. அதேவேளையில் சட்டத்தை தன் இஷ்டப்படி வளைப்பதுமுண்டு.

ஆனால் இதிலிருந்து முற்றிலும் வேறுபட்ட நிலைப்பாடு கொண்டவர் காமராஜர். இதோ அதனை நிரூபிக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி: காமராஜர் முதல்வராக இருந்தபோது மத்தியில் ஜவஹர்லால் நேரு அவர்கள் பிரதமராக இருந்தார். அந்த காலகட்டத்தில், காமராஜர் மீது அபிமானம் கொண்டவர்கள் அவருக்கு சென்னையில் ஓரிடத்தில் சிலைவைக்க ஏற்பாடு செய்தனர்.

இதுபோன்ற காமராஜருக்கு உடன்பாடிருக்காது என்பதனால் அவருடைய கவனத்திற்கு கொண்டுசெல்லாமலேயே அனைத்தும் நடைபெற்றன. ஒரு முக்கிய சாலையின் சந்திப்பைக் குறிப்பிட்டு சிலையைத் திறந்துவைக்க பிரதமரிடமும் தேதி பெறப்பட்டது. 

இந்நிலையில், சிலைவைக்க அனுமதிகேட்கும் கோப்பு காமராஜரிடம் சென்றது. எதிர்பார்த்தது போலவே இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த காமராஜர், உடனே பிரதமரைத் தொடர்புகொண்டு நிகழ்ச்சியை ரத்துசெய்யும்படிக் கேட்டுக்கொண்டார்.

ஆனால்,” ஒரு மாமனிதருக்கு சிலைதிறக்க வேண்டியது எனக்குக்கிடைத்த நல்ல வாய்ப்பு. தேதி கொடுத்தது கொடுத்ததுதான். அதனால், விழாவிற்கு தயாராகுங்கள்” எனக்கண்டிப்புடன் கூறிவிட்டார். வேறுவழியில்லாமல், விழாநடைபெற்றது. 

சிலை அமைப்பாளர் குழு கேட்ட இடத்தை மறுத்து போக்குவரத்துக்கு இடைஞ்சலில்லாத வேறு ஒரு இடத்தில் சிலைவைக்க அனுமதி தந்தார். இன்றும்கூட அந்த சிலையானது போக்குவரத்திற்கு எவ்வித இடையூறுமின்றி சென்னை அண்ணாசாலையில் ராஜாஜி ஹாலின் நுழைவாயிலில் கம்பீரமாக காட்சியளிக்கிறது. தன்னிடம் பதவி, ஆட்சி அதிகாரம், கட்சி மேலிட செல்வாக்கு, மக்களின் ஏகோபித்த ஆதரவு இத்தனை இருந்தும் எதையும் துஷ்பிரயோகம் செய்யாத தூய்மையாளராக விளங்கினார். 

எளிமை :

அரசுப்பணிகளுக்கு சிபாரிசு செய்வதையும், சிபாரிசு கேட்கப்படுவதையும் அறவே வெறுத்தார். திறமைக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்தார். அந்நியநாடுகளுக்குச் செல்லும்போதுகூட தாழ்வு மனப்பான்மைகொண்டு அந்நாட்டுவழக்கப்படியோ அல்லது சீதோஷண நிலைக்கு ஏற்றவாறு மேல்நாட்டு உடையணியாமல், தான் எப்பொழுதும் உடுத்தும் அதே கதர்வேட்டி, சட்டையையே அணிந்தார். இதன்மூலம் பாரதத்தின், குறிப்பாக தமிழகத்தின் பாரம்பரியத்தை உலக அரங்கில் பறைசாற்றினார். 

இப்படி எதிலும் தனித்துவம் கொண்ட தலைசிறந்தவராக இருந்த காரணத்தினால் அகில இந்திய காங்கிரஸுக்கு தலைமையேற்க வாய்ப்பு கிட்டியது. இதன்மூலம் தேசத்தின் இருபிரதமர்களை தேர்ந்தெடுக்கும் பணியை திறம்படச்செய்தார். இதனால் “கிங்மேக்கர்” எனப்புகழப்படுகிறார். 

தன் வாழ்நாளின் இறுதிக்காலம் வரையிலும் திருமணம் செய்துகொள்ளாமலேயே வாழ்ந்து, சாதி,மத,மொழி,இன வேறுபாடுகளைக்கடந்து சமத்துவ நாயகனாக வாழ்ந்த காமராஜர், தான் மிகவும் நேசித்த மகாத்மா காந்திஜி அவர்களின் பிறந்த தினத்தன்று (அக்டோபர் 2) 1975 ஆம் ஆண்டு தான் குடியிருந்த வீட்டில், தூக்க நிலையிலேயே அமரநிலை எய்தினார். 

இவர் முதல்வர் பதவியிலிருந்து வெளியேறி அரைநூற்றாண்டு காலத்திற்கும் மேலாகியும், அமரத்துவமெய்தி அரை நூற்றாண்டுகளை நெருங்கும் இக்காலத்திலும் “காமராஜர் ஆட்சி” என்பது ‘ராமராஜ்யம்’ எனக்கொண்டாடும் அழியாப்புகழ் கொண்டவர்.     

உலக சரித்திரத்தில் இடம்பெற்றவர்கள், பெறுபவர்கள் என பலருண்டு. ஆனால் தானே உலகத்திற்கு தனி சரித்திரமாக வாழ்ந்த காமராஜரின் வாழ்வு என்றென்றும் பூரிப்புடன் எண்ணி போற்றத்தக்கதாகும். வாழ்க காமராஜர் புகழ் !!!

Exit mobile version