Home Uncategorized அளவு குறைவாக ஆவின் பால் பாக்கெட் விற்பனையா?

அளவு குறைவாக ஆவின் பால் பாக்கெட் விற்பனையா?

சென்னையில் நேற்று முன்தினம் விற்பனைக்கு வந்த 500 மில்லி லிட்டர் ஆவின் பால் பாக்கெட்டில் அளவு குறைவாக இருந்தது. ஆவின் பால் பாக்கெட்டை பொறுத்தவரை, அதன் அளவை, கிராமில் கணக்கிடும்போது 500 மி.லி. என்பது 517 கிராம் இருக்க வேண்டும். இதில், பாக்கெட் 2 கிராம் இருக்கும். எவ்வகையிலும் பாலின் எடை 515 கிராமுக்கு குறையாமல் இருக்க வேண்டும்.

ஆனால், கடந்த இரண்டு நாட்களாக விற்பனைக்கு வந்த பால் பாக்கெட்டுகள் 430 கிராம் மட்டுமே இருந்தன. இதை கண்டறிந்த சென்னையை சேர்ந்த பால் முகவர் ஒருவர், ஆவின் அதிகாரிகளுக்கு சமூக வலைதளம் வாயிலாக தகவல் அனுப்பியுள்ளார். ஆனால், அதிகாரிகள் இதை கண்டு கொள்ளவில்லை.

இந்நிலையில், நேற்றும் விற்பனைக்கு வந்த பால் பாக்கெட்டின் அளவு குறைவாக இருந்தது. ஒரு பாக்கெட்டை கணக்கிடும் போது இது சிறிய அளவாக இருந்தாலும், நாள்தோறும் விற்பனையாகும் 33 லட்சம் லிட்டர் பாலை கணக்கிடும் போது, அளவு குறைவால் பல லிட்டர் பால் நுகர்வோருக்கு செல்லாமல் தடுக்கப்படுகிறது.

விலை குறைப்பால், ஆவின் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை சமாளிப்பதற்கும், துறையின் முக்கிய புள்ளி உள்ளிட்டோருக்கு வருவாய் கிடைக்கவும் இந்த நூதன கோல்மாலில் ஈடுபட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து ஆவின் அதிகாரிகள் கூறுகையில், ‘சென்னை, மாதவரம் பால் பண்ணையில் புதிய இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. அந்த இயந்திரத்தில் உள்ள சிறிய குறைபாடு காரணமாக இந்த அளவு குறைவு ஏற்பட்டிருக்கலாம். அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

‘தமிழக அரசு இதுகுறித்து முறையான விசாரணை நடத்தி, நுகர்வோருக்கு சரியான அளவில் பால் கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, விற்பனையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version