அம்பத்தூர் கள்ளிக்குப்பம் முத்தமிழ் நகரை சேர்ந்தவர் ரகுமூர்த்தி. இவரது மனைவி லக்ஷ்மி இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் சந்தோஷ் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இரண்டாவது மகன் ஹேம்நாத்(18) நெற்குன்றத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த 21ஆம் தேதி மதியம் ஹேம்நாத் இருசக்கர வாகனத்தில் தனது நண்பரை பட்டரைவாக்கம் ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது சரக்கு வாகனம் ஒன்று அவர் மீது பயங்கரமாக மோதியது. இதில் தலையில் அடிபட்டு படுகாயம் அடைந்த ஹேம்நாத், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி ஹேம்நாத் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து சரக்கு வாகன டிரைவரான குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த கவின்(23) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த தன் மகனின் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர் முன் வந்துள்ளனர். இதனை அடுத்து ஹேம்நாத்தின் இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகளை தானமாக பெறப்பட்டன. விபத்தில் படுகாயம் அடைந்து அவரது கண்கள் செயல் இழந்து விட்டதால் கண்கள் தானம் செய்ய முடியவில்லை என அவர் பெற்றோர் கூறியுள்ளனர்.
