ஆந்திரப் பட உலகின் முடிசூடா மன்னனாக விளங்கி, ஆந்திர முதல்-மந்திரியாகவும் பதவி வகித்த என்.டி. ராமராவ், சில தமிழ்ப்படங்களிலும் நடித்துள்ளார்.
ஆந்திராவில், விவசாய குடும்பத்தில் 1923-ல் என்.டி. ராமராவ் பிறந்தார். விஜயவாடாவில் கல்லூரியில் படித்து, ‘பி.ஏ’ பட்டம் பெற்றார். கல்லூரி மாணவராக இருந்தபோதே நாடகங்களில் நடித்தார். பின்னர், பிரபல தெலுங்கு நடிகர் ஜக்கையா நடத்திய நாடகங்களில் நடித்தார். பின்னர் திரை உலகில் புகுந்தார். ‘மானதேசம்’ என்ற தெலுங்குப் படத்தில் நடித்தார்.
அந்தப்படம் வெற்றிகரமாக ஓடியதால், நிறைய பட வாய்ப்புகள் வந்தன. விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரித்த ‘பாதாள பைரவி’ என்ற படம், ஒரே நேரத்தில் தமிழிலும், தெலுங்கிலும் தயார் ஆகியது. என்.டி.ராமராவ் கதாநாயகனாகவும், கே.மாலதி கதாநாயகியாகவும் நடித்தனர்.
