திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் காலம் காலமாகப் பக்தர்களுக்குச் சேவை செய்து வரும் திருசுதந்திர அர்ச்சகர் சமுதாயத்தை இழிவுபடுத்தியதாக, தற்போதைய அறநிலையத்துறை அமைச்சர் திரு. ரமேஷ் ஐய்யங்காருக்குத் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டுப் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து காவடியேந்தி திருச்செந்தூர் வந்துள்ள சூழலில், திடீர் ஆய்வு என்ற பெயரில் வந்த புதிய அறநிலையத்துறை அமைச்சர், பல நூற்றாண்டுகளாகப் பக்தர்களுக்கு வழிகாட்டி, மரபுவழியாக ஆன்மீகப் பணி செய்து வரும் திருசுதந்திர அர்ச்சகர்களை இழிவுபடுத்தியிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது என்றும், இந்தச் செயல் அர்ச்சகர் சமுதாயத்தினரிடம் பெரும் மனவேதனையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் சாடியுள்ளார்; மேலும், உள்ளூர் மக்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கான வழிமுறைகள் பற்றி முறையான எந்த அறிவிப்பும் வெளியிடாதது சரியல்ல என்று ஊர்மக்கள் கருதுவதைச் சுட்டிக்காட்டியுள்ள அனிதா ராதாகிருஷ்ணன், திருச்செந்தூர் தொகுதி மக்களின் நலனைப் பாதுகாக்கும் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில், அர்ச்சகர்களை இழிவுபடுத்தியதோடு திருக்கோயிலின் புகழைச் சிறுமைப்படுத்திய அமைச்சர் ரமேஷ் ஐய்யங்காருக்குத் தனது வன்மையான கண்டனத்தை மீண்டும் அழுத்தமாகப் பதிவு செய்வதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
