Home செய்திகள் திருச்செந்தூரில் காரசார மோதல்… அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் பதிலடி!

திருச்செந்தூரில் காரசார மோதல்… அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் பதிலடி!

திருச்செந்தூர் அர்ச்சகர்கள் விவகாரத்தில் தன் மீது கண்டனம் தெரிவித்த திமுக எம்.எல்.ஏ அனிதா ஆர். ராதாகிருஷ்ணனுக்கு, தவெகவைச் சேர்ந்த அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் மிகக் காரசாரமாகப் பதிலடி கொடுத்துப் பதிவிட்டுள்ளார்.

அதில், மக்களைச் சுரண்டிப் பிழைப்பது யாராக இருந்தாலும் சாதி, மத பாகுபாடின்றி நடவடிக்கை எடுக்கத்தான் பொதுமக்கள் தங்களைத் தேர்ந்தெடுத்து வாக்களித்துள்ளார்கள் என்று குறிப்பிட்டுள்ள அவர், உங்களைப் போல் பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரைப் போடும் வழக்கம் உண்மையில் பெரியாரைப் பின்பற்றுபவர்களுக்குக் கிடையாது என்றும் அனிதா ராதாகிருஷ்ணனைச் சாடியுள்ளார்; மேலும், பக்தர்களிடம் சட்டத்திற்குப் புறம்பாகப் பணம் பெற்றுத்தான் சேவை செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை என்றும், அப்படிச் செய்வது சேவையும் கிடையாது, அதை எந்தக் கடவுளும் சொல்லவில்லை என்றும் விளக்கியுள்ளார்.

நேற்று வரை சாதியை வைத்து ஆதரவாகச் செயல்படுவதாகப் பேசிய திமுகவினர், இன்று அதே சாதியைச் சார்ந்தவர்களை அவமதித்துவிட்டதாகப் பேசுவது விந்தையாக இருக்கிறது என்று சாடியுள்ள அமைச்சர் ரமேஷ், தவறு செய்தவர்களைத் தண்டித்தால் உங்களுக்கு ஏன் திடீர் கொந்தளிப்பும் பதற்றமும் வருகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்; அத்துடன், திருச்செந்தூர் திருக்கோயிலில் இன்னும் பல முறைகேடுகள் நடந்து வருவதை விரைவில் வெளிக்கொண்டு வருவேன் என்றும், அதில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்றும் மிகத் திட்டவட்டமாக எச்சரித்துள்ளார்.

Exit mobile version