பாஜக தேசியத் தலைவர் நிதின் நபினுக்கு, தமிழக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை அனுப்பியுள்ள அதிகாரப்பூர்வ ராஜினாமா கடிதத்தின் முழுமையான விபரம் இதோ:
பெறுநர்: நிதின் நபின், தேசியத் தலைவர், பாரதிய ஜனதா கட்சி. மதிப்பிற்குரிய ஐயா, வணக்கம்! நமது மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையால் ஈர்க்கப்பட்டு, தமிழ்நாட்டிற்கு ஒரு நேர்மறையான மாற்றத்தைக் கொண்டு வரவும், மாநிலத்தில் அரசியல் நடத்தப்படும் முறையை மேம்படுத்தவும் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நான் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தேன்.
எல்லாவற்றிற்கும் மேலாக, அரசியல் என்பது மேல்தட்டு மக்களுக்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்குமான ஒரு பாதை மட்டுமே என்ற எண்ணத்தை மாற்றி, அது சாதாரண மனிதனுக்குமானது என்பதை நிலைநாட்ட நான் விரும்பினேன். மிகவும் இளையவனாகவும், அனுபவமற்றவனாகவும் இருந்த என்னைக் தகுதிக்கு மீறிய பெரிய பொறுப்புகளிலும், தலைமைப் பதவிகளிலும் அமர்த்தி என் மீது நம்பிக்கை வைத்த பாஜக தலைமைக்கு நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த பல தசாப்தங்களாக நிலவி வரும் பொதுவான அரசியல் பேச்சுகளால் இந்த மாநில மக்கள் சோர்வடைந்து, ஒரு மாற்றத்திற்காக ஏங்கிக் கொண்டிருந்தனர். கடந்த தசாப்தத்தில் பல கட்டங்களில் மாற்றங்கள் வந்தன, ஆனால் அவர்களால் தங்கள் நிலையைத் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை; மக்களின் நினைவிலிருந்தும் அவை மிக வேகமாக மறைந்துவிட்டன.
தேசியக் கட்சிகள் ஒருபோதும் தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொள்ளும் மொழியில் பேசியதே இல்லை. இந்த நம்பிக்கையை மாற்றுவதற்கு நான் முயன்றேன்; கட்சிக்குள்ளும் வெளியேயும் பல தடைகள், முட்டுக்கட்டைகள் மற்றும் எதிர்ப்புகள் இருந்தபோதிலும், அதில் நான் ஓரளவிற்கு நியாயமான வெற்றியையும் கண்டேன்.
பிராந்திய நலன்களில் ஆழமான வேர்களைக் கொண்ட ஒரு தேசியவாதியாக, எனது மொழியின் வளம், எனது கலாச்சாரத்தின் பன்முகத்தன்மை மற்றும் எனது பிராந்தியத்தின் தனித்துவமான பாரம்பரியம் குறித்து நான் அளவற்ற பெருமிதம் கொள்கிறேன். ஒரு வலுவான மற்றும் ஒன்றுபட்ட இந்தியா என்பது, அதன் பல பிராந்தியங்கள் மற்றும் சமூகங்களின் வலிமை, கண்ணியம் மற்றும் அபிலாஷைகளின் மீதுதான் கட்டமைக்கப்பட்டுள்ளது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
காலத்திற்குக் காலம் நான் தொடர்ந்து அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்த பல்வேறு காரணங்களுக்கும், கவலைகளுக்கும் தங்களது அசைக்க முடியாத ஆதரவை வழங்கிய பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைமைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் தருணத்தில், கடந்த 18 மாதங்களாகக் கட்சியின் உயர்மட்டத் தலைமையுடன் நான் நடத்திய பல உரையாடல்களையும், நான் வெளிப்படுத்திய மாறுபட்ட கருத்துகளையும் (Disagreements) நினைவு கூர விரும்புகிறேன்.
தமிழ்நாட்டில் வளர்ச்சி சார்ந்த மற்றும் கலாச்சார ரீதியாக வேரூன்றிய ஒரு அரசியலை நோக்கிச் செல்வது குறித்த எனது தொடர்ச்சியான சிந்தனைகளால், உயர்மட்டத் தலைமைக்கு இனிமேலும் சுமையாக இருக்க நான் விரும்பவில்லை. நமது மூத்த தலைமையுடனான உரையாடல்களுக்குப் பிறகு, தமிழ்நாடு தொடர்பான நமது பார்வைகள் ஒன்றோடொன்று ஒத்துப்போகவில்லை (Views don’t align) என்ற முடிவுக்கு நான் வந்துள்ளேன்.
நீண்ட சிந்தனைக்குப் பிறகு, நான் கட்சியை விட்டு வெளியேறவும், நான் அரசியலில் நுழைந்ததற்கான உண்மையான நோக்கத்தைப் பற்றிச் சிந்திப்பதற்கும், எதிர்காலத்தில் காற்று என்னை எந்தத் திசையில் அழைத்துச் செல்கிறதோ அந்தத் திசையில் பயணிப்பதற்கும் (Sail where the winds take me) இதுவே சரியான தருணம் என்று நான் நம்புகிறேன்.
எனவே, உடனடியாக என்னை அமைப்பின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்க வேண்டும் என்றும், பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தான எனது ராஜினாமாவை உடனடியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி! இப்படிக்கு உண்மையுள்ள, கே. அண்ணாமலை.

