”நீரின்றி அமையாது உலகு” என்பது திருவள்ளுவர் வாக்கு. அத்தகைய நீர்வளத்தினை தருகின்ற இயற்கையையும், அதனைக் கொண்டுவரும் நதிகளையும், போற்றி வணங்கி நன்றி சொல்வதற்கும் நம் முன்னோர்களால் எடுக்கப்பட்ட விழாவே “ஆடிப்பெருக்கு” .
தமிழகத்திற்கு தென்மேற்குப்பருவக்காற்றின் மூலம் பலனடையும் பகுதிகள் மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகள். இந்தப்பகுதிகளில் பெய்யும் மழையானது நதிகளில் பெருக்கெடுத்து வரும் காலம். இந்த நீர்வளத்தினை நம்பியே நம் வாழ்வாதாரம் அமைந்திருக்கிறது. விவசாயப் பெருங்குடி மக்கள் தங்கள் உழைப்பினை புத்துணர்ச்சியுடன் தொடங்கும் காலம் இந்த ஆடிமாதம். “ஆடிப்பட்டம் தேடி விதை” என்கிற கூற்றின்படி, ஆடிமாதத்தில்தான் விவசாயப் பணிகள் தொடங்கப்படுகின்றன. இதனை சமயம் சார்ந்த விழாவாக கொண்டாடி மகிழ்கின்றோம்.
விவசாயத்திற்கும் , இறைவனுக்கும் இம்மாதத்தினை நம் முன்னோர்கள் அர்ப்பணித்ததால், இந்த ஆடிமாதத்தில் தங்கள் குடும்பத்தின் சுபநிகழ்வுகள் எதனையும் மேற்கொள்வதில்லை. பொருளாதார ரீதியில் முழுமையாக விவசாயத்திற்கு முதலீடும், மனித உழைப்பையும் தரவேண்டியிருப்பதாலும், வேறு சொந்த நிகழ்வுகளை மேற்கொள்வதில்லை.
ஆனால், இறைவனுக்கு நன்றி சொல்லும் விதமாகவும், அதே வேளையில் தங்களின் சொந்த நற்காரியங்களையும் ஒருங்கிணைக்கும் விதமாக ஆடி மாதத்தின் 18 ஆம் நாளை தேர்ந்தெடுத்து விழாவாகக் கொண்டாடி வருகிறோம்.
