தமிழகத்தில் டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் மதுபானக் கொள்கைகளில் பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள அரசு திட்டமிட்டு வரும் வேளையில், அதன் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் ‘ரெஸ்டோ – பார்’ (Resto-Bar) கலாச்சாரத்தை முறைப்படி விரிவாக்கம் செய்ய ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
தற்போது டாஸ்மாக் கடைகளுடன் இயங்கி வரும் சாதாரண பார்களின் உரிமக் காலம் முடிவடைந்ததை அடுத்து அவை தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில், புதிய டெண்டர் விதிகளின் கீழ் இந்த மாற்றங்களைக் கொண்டு வர அரசு ஆயத்தமாகி வருகிறது.
சுகாதாரம் மற்றும் போதிய இடவசதி இல்லாத குறுகிய பார்களின் எண்ணிக்கையைக் குறைத்து, அவற்றுக்குப் பதிலாக வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்தும் வசதியுடன் கூடிய தரமான ரெஸ்டோ-பார்களுக்கு அனுமதி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்குக் கூடுதல் வருவாய் கிடைப்பதுடன், அண்டை மாநிலங்களான புதுச்சேரி மற்றும் பெங்களூரு போன்ற இடங்களுக்கு வாடிக்கையாளர்கள் நகர்வதைத் தடுக்க முடியும் என்றும் கருதப்படுகிறது.
மேலும், சென்னை மாநகராட்சி, சி.எம்.டி.ஏ (CMDA) போன்ற அமைப்புகளிடம் இருந்து முறையான கட்டிடத் திட்ட அனுமதி மற்றும் தீயணைப்புத் துறை சான்றிதழ்களைப் பெற்ற பாதுகாப்பான மற்றும் பெரிய கட்டிடங்களுக்கு மட்டுமே இந்த புதிய ரெஸ்டோ-பார் உரிமங்களை வழங்க டாஸ்மாக் நிர்வாகம் கடுமையான விதிகளையும், திருத்தங்களையும் வகுத்து வருகிறது.
