Home Uncategorized சித்ராலயா கோபு-வுக்கு இன்னிக்கு 93!

சித்ராலயா கோபு-வுக்கு இன்னிக்கு 93!

93 என்பது பிபி அளவோ அல்லது சர்க்கரை அளவோ இல்லை.அளவில்லாமல் மக்களை தனது வசனத்தின் மூலம் சிரிக்க வைத்த சித்ராலயா கோபு இன்று 93 வயதை தொட்டார்.

இவர் 60 படங்களுக்கு மேல் வசனமும்,சுமார் 27 படங்களை இயக்கியும் உள்ளார்.இயக்குனர் ஸ்ரீதரும் சடகோபனும் (சித்திராலயா கோபு ) பள்ளி தோழர்கள்,பள்ளி சமயத்திலேயே இருவரும் சேர்ந்து பல நாடகங்கள் நடத்தி உள்ளனர் .

பிற்காலத்தில் திரையிலும் இந்த இருவர் கூட்டணியில் உருவான கல்யாண பரிசு படத்தில் மன்னாரு & மன்னாரு கம்பெனி தங்கவேலு காமடி ட்ராக் மாஸ் ஹிட் அடிச்சுது. அந்த படத்தை தயாரித்த சித்ராலயா நிறுவனத்தின் பெயரையும் கூடவே தனது பெயரையும் சுருக்கி சித்திராலயா கோபு ஆனார்.

இவரின் விரசம் இல்லாத அக்மார்க் ஒரிஜினல் காமெடியை மக்கள் விழுந்து விழுந்து சிரித்து ரசித்தனர்.

இன்றும் கோபு எழுதிய காதலிக்க நேரமில்லை ஓஹோ ப்ரொடக்சன்,ஊட்டியின் டாக்டர் திருப்பதி- சீஃப் டாக்டர்,உத்தரவின்றி உள்ளே வந்த பூர்வஜென்ம ஆண்டாளின் மனோதத்துவ நிபுணர், பாட்டு வாத்தியார் பட்டுவின் சங்கீத குரு,கலாட்டா கல்யாணம் மாரேஜ் புரோக்கர்,அப்பாசாமி டீக்கடை சாமியாரின் ஆசான்,கண்ணாத்தா பாட்டி சொல்லை தட்டாதே என்ற பாட்டனார் எல்லாமே மறக்க முடியாத கதாபாத்திரங்களை உருவாக்கியவர்.

இயக்குனர் ஸ்ரீதர் மீது இருந்த அன்பினால்,தனது நான்கு மகன்களுக்கும் ஸ்ரீ என்ற ஆரம்ப எழுத்திலே பெயர் வைத்தார் கோபு. முதல் மகன் கல்யாண பரிசு வெளியான சமயத்தில் பிறந்தார்.இரண்டாவது மகன் நெஞ்சில் ஒரு ஆலயம் ரிலீஸ்,அடுத்தது காதலிக்க நேரமில்லை.கடைக்குட்டி காசேதான் கடவுளடா ரிலீஸ்.

இதை இயக்குனர் ஸ்ரீதர் கலாய்க்கும் விதமாக இப்படி கேட்பாராம்,”’கோபு ! அடுத்த படம் ரிலீஸ் செய்யணும். உன் மனைவிக்கு டாக்டர் ஏதாவது டேட்ஸ் கொடுத்திருக்கிறாரா என்று ?” கோபுவின் இரண்டாவது மகனும் பிரபல எழுத்தாளருமான காலச்சக்கரம் நரசிம்மா தனது தந்தையை பற்றி இப்படி விவரிக்கிறார், அம்மா இலக்கியத்தையும், தமிழையும் தந்தார் என்றால், எனது தந்தை எனக்கு நகைச்சுவை உணர்வையும் , சிரிப்பாற்றலையும் தந்தார்.

எங்கள் குடும்பத்தின் பொக்கிஷம், நகைச்சுவை உணர்வுதான். அப்பா சித்ராலயா கோபுவின் நகைச்சுவை சுனாமியாக தாக்கி ஆளை புரட்டி போடும். அம்மாவின் நகைச்சுவை அமைதியாக செவி வழியே உட்புகுந்து மூளையை அடைந்து, அந்தத் நகைச்சுவை கருத்து, அக்குவேறு ஆணிவேராக அங்கே ஆய்வு செய்யப்படும்போது குபீர் என்று சிரிப்பு வெடிக்கும்..

அந்த நகைச்சுவை கருத்தில் ஆழமான கருத்துகளும், நையாண்டிகளும் பொதிந்திருக்கும் அரசியல் நையாண்டிகளில் நான் சோபிப்பது இந்த இரு நகைச்சுவை கலவைகளால்தான்.

ஊரெல்லாம் நகைச்சுவை புலி என்று பெயர் பெற்றாலும், வீட்டில் அம்மாவின் நகைச்சுவைக்கு முன்பாக அப்பா எலிதான். 2012-ல் தான் இறப்பதற்கு முன்பாக அம்மா,”என் பின்னாடியே ஆறு மாதங்களில் நீங்களும் வந்து விடுவீர்கள்” என்று அப்பாவை பயமுறுத்திவிட்டு, மறைவில் எங்களிடம் ”அவர் நூறு வருடங்கள் வாழ்வார்.

பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள் ” என்று கூறிவிட்டுதான் போனார். ஆறு மாதங்கள் அறையை விட்டு வெளியே வராமல் பயத்துடன் பெட்டி பாம்பாக இருந்தார் அப்பா. பின்பு ஒரு நாள் தலையை வெளியே நீட்டி, ”ஆறு மாசம் ஆயிடுச்சே.

உங்கம்மா சொன்னது போல நான் பின்னாடியே போகிற அறிகுறியே காணோமே ” என்றார். ”சும்மா உன்னை ஒரு உலுக்கு உலுக்கிட்டு போகணும்னு அப்படி சொல்லியிருக்கா. உன்னை பத்திரமா பார்த்துக்க சொல்லி உத்தரவு போட்டிருக்கிறாள் .

நீ நூறு வருஷம் இருப்பியாம்” என்று சொன்னவுடன் தான் அறையை விட்டு வளியே வந்தார்,என்றார் சிரித்து கொண்டே. ‘சித்ராலயா கோபு பேசும் நகைச்சுவையில் பத்து சதவீதம் தான் அவரது திரைப்படங்களில் நுழைகிறது”– என்று நடிகர் கமல் கூறியது உண்டு.

குமுதத்தில் தொடர் எழுதிய சோ, ”குழாயை திறந்தால் நீர் கொட்டுவது போல, கோபுவின் பேனாவில் இருந்து நகைச்சுவை கொட்டும்”– என்று எழுதி இருந்தார். நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கும் பூ ‘சித்ராலயா கோபு’ நூறாண்டு தாண்டியும் வாழ வேண்டி உங்கள் அனைவரின் சார்பில் வாழ்த்துகிறது

Exit mobile version