சுதந்திர இந்தியாவின் கம்பீர அடையாளமாக இருப்பது நம் தேசியக் கொடி. தேசியக் கொடியின் வரலாறு, சுவாரஸ்யம் நிறைந்தது. ஆம், 1906-ம் ஆண்டு தொடங்கி, 1947-ல் சுதந்திரம் பெற்ற காலம் வரை, நம் நாட்டுக்கான தேசியக்கொடி பல்வேறு அவதாரங்களை எடுத்தது. பலரும் பற்பல வண்ணங்கள் மற்றும் வடிவங்களில் அதை உருவாக்கினர். இறுதியாக வடிவமைக்கப்பட்டதுதான்… கடந்த 76 ஆண்டுகளாக நாம் ஏற்றிக்கொண்டிருக்கும் மூவர்ணக் கொடி!
தேசியக் கொடியில் மேலே உள்ள காவி நிறம் வலிமையையும் தைரியத்தையும், நடுவில் உள்ள வெள்ளை நிறம் அமைதியையும் சத்தியத்தையும், கீழே உள்ள பச்சை நிறம் வளர்ச்சியையும் சகிப்புதன்மையையும், இந்த மண்ணுடன் நாம் கொண்டுள்ள உறவையும் குறிக்கின்றன. அசோக சக்கரமானது தர்மத்தைக் குறிக்கிறது.
இந்நிலையில் இந்தியாவின் பெருமைமிகு தேசியக் கொடியில் அமைந்துள்ள மூன்று வண்ணங்கள் எதை குறிக்கின்றன என்பது குறித்து இளைஞர்கள் எத்தனை பேருக்கு தெரியும் என போதார் கல்வி மையம் என்ற அமைப்பு ஒரு சர்வே நடத்தியது. இந்த ஆய்வில் 18 முதல் 23 வயது வரையிலான இளைஞர்களிடம் மும்பை, பெங்களூரு, சென்னை ஆகிய பெருநகரங்களில் சர்வே நடத்தப்பட்டது.
♻இதில் கிடைத்த முடிவுகள் அதிர்ச்சியாக இருந்தது. இவர்களில் வெறும் 8 முதல் 12 சதவீத இளைஞர்களுக்கு மட்டுமே தேசியக் கொடியின் அருமை, பெருமை பற்றி தெரிந்துள்ளது. இதில் குறிப்பாக மும்பை 10, பெங்களூரு 12, சென்னையில் வெறும் 8 சதவீதம் இளைஞர்களுக்கு மட்டுமே தேசியக் கொடியின் வரலாறு பற்றி தெரிந்துள்ளது. அதே போல், 40 சதவீதத்திற்கும் குறைவான இளைஞர்கள் மட்டுமே தேசியக் கீதத்தை முழுமையாக தவறின்றி பாடுபவர்களாக உள்ளனர். மும்பையில் 42%, பெங்களுரு 34%, சென்னை 28% பேருக்கு தேசியக் கீதம் தெரிகிறது. தேசியக் கீதத்தை எழுதியவர் யார் என்ற கேள்விக்கு மும்பையில் 53%, பெங்களூருவில் 49%, சென்னையில் 38 சதவீதம் பேர் மட்டுமே பதில் அளித்தனர்.
சுதந்திர போராட்டம் குறித்த பல்வேறு கேள்விகளுக்கும் பெரும்பாலான இளைஞர்களுக்கு சரியான பதில் தெரியவில்லை. பகத்சிங், சுக்தேவ், ராஜகுரு யார் என்ற கேள்விக்கு மும்பையிலேயே 34 சதவீதம் பேர்தான் பதில் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கல்லூரி வளாகங்கள், ரயில் நிலையங்கள், டீக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மே முதல் ஆகஸ்ட் வரை இந்த சர்வே நடத்தப்பட்டது. ஒரு கேள்விக்கு கூட 50 சதவீதத்துக்கு அதிகமான இளைஞர்கள் பதில் அளிக்கவில்லை. சுதந்திரப் போராட்டம் குறித்த இளைஞர்களின் அறியாமையை இது காட்டுகிறது என சர்வே நடத்தியவர்கள் கவலை தெரிவித்தனர்

