Home செய்திகள் அண்ணா சாலையில் ₹621 கோடி மேம்பாலம்: பாதியில் கண்டறியப்பட்ட வடிவமைப்புச் சிக்கல்!

அண்ணா சாலையில் ₹621 கோடி மேம்பாலம்: பாதியில் கண்டறியப்பட்ட வடிவமைப்புச் சிக்கல்!

சென்னையின் முக்கிய போக்குவரத்து வழித்தடமான அண்ணா சாலையில், தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை இடையே ₹621 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் 3.2 கி.மீ நீள நான்கு வழிச்சாலை உயர்மட்டப் பாலம், தற்போது எதிர்பாராத வடிவமைப்புச் சிக்கலில் சிக்கியுள்ளது.

2024 ஜனவரியில் தொடங்கிய இந்தத் திட்டம், முதலில் செப்டம்பர் 2026-க்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பணிகள் கணிசமாக முன்னேறிய பின்னரே நந்தனம் – தேனாம்பேட்டை பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் அடித்தளங்களின் அமைப்பில் முக்கியச் சிக்கல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் திட்டத்தின் அசல் வடிவமைப்பில் மாற்றம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

என்ன பிரச்சினை?

நந்தனம் முதல் தேனாம்பேட்டை வரையிலான பகுதியில், ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் அடித்தளங்கள் ஒரே நேர்கோட்டில் இல்லை. ஆனால், ஆரம்பகட்ட திட்ட அறிக்கையான DPR-ல் இந்த அடித்தளங்களின் உண்மையான alignment துல்லியமாகப் பிரதிபலிக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், திட்டமிட்டபடி நடுவில் தூண்களை அமைத்தால் மேம்பாலத்தின் பாதை நேராக இல்லாமல் வளைந்து செல்லும் அபாயம் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. அதே நேரத்தில், இந்தப் பகுதியில் சாலையின் அகலமும் இடத்துக்கு இடம் மாறுபடுகிறது.

  • சைதாப்பேட்டை பகுதியில் – சுமார் 40 மீட்டர்
  • DMS பகுதியில் – சுமார் 36 மீட்டர்
  • அரிவாளையம் அருகே – சுமார் 32 மீட்டர்
  • செனடாப் சாலையில் – வெறும் 28 மீட்டர்

குறுகலான பகுதிகளில் நடுவில் தூண்களை அமைத்தால், ஏற்கெனவே நெரிசலான அண்ணா சாலையில் போக்குவரத்துக்கு மேலும் பாதிப்பு ஏற்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

88 தூண்கள் அமைந்த பிறகே மாற்றம்!

இந்தச் சிக்கல் கண்டறியப்படும் நேரத்தில், திட்டத்தில் சுமார் 88 தூண்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில் 50 தூண்களுக்கு span-கள் பொருத்தப்பட்டிருந்தன. மொத்தம் 131 span-கள் அமைக்கப்பட வேண்டியுள்ளது.

இதனால், ஏற்கெனவே முன்னேறியிருந்த கட்டுமானப் பணிகளுக்கு இடையே வடிவமைப்பை மாற்ற வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

Portal Pillar முறைக்கு மாற்றம்

இதற்குத் தீர்வாக, நந்தனம் – தேனாம்பேட்டை மெட்ரோ நிலையப் பகுதிகளில் முதலில் திட்டமிடப்பட்டிருந்த நடுவண் தூண் அமைப்புக்குப் பதிலாக Portal Pillar முறையை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறையில் சாலையின் நடுவில் பெரிய தூண்களை அமைப்பதற்குப் பதிலாக, சாலையின் இருபுறமும் தூண்கள் அமைக்கப்பட்டு அவை மேல்பகுதியில் இணைக்கப்படும். அதன் மீது மேம்பாலத்தின் girders பொருத்தப்படும்.

புதிய வடிவமைப்பில் தேனாம்பேட்டை மற்றும் நந்தனம் மெட்ரோ நிலையப் பகுதிகளில் 45 தூண்கள் அமைக்கப்பட உள்ளன. மெட்ரோ நிலையங்களின் diaphragm walls மூலம் foundation support வழங்கப்பட உள்ளது.

மேலும், பழைய வடிவமைப்பில் சுமார் 30 மீட்டர் நீள span-களை அமைக்க வேண்டியிருந்த நிலையில், Portal Pillar முறையில் குறுகிய இடைவெளிகளில் சுமார் 11 மீட்டர் span-களை அமைக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செலவு அதிகரிக்குமா?

தற்போதைய தகவலின்படி, இந்த வடிவமைப்பு மாற்றத்தால் திட்டச் செலவு அதிகரிக்காது என தெரிவித்துள்ளனர். மாற்றத்திற்கான scope change திட்டம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, கடந்த மாதம் ஒப்புதல் பெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது.

புதிய காலக்கெடு எப்போது?

செப்டம்பர் 2026-ல் முடிக்க திட்டமிடப்பட்டிருந்த இந்த மேம்பாலப் பணி தற்போது அந்த இலக்கைத் தவறவிடும் நிலையில் உள்ளது.

புதிய இலக்கு பிப்ரவரி 2027 எனக் கூறப்பட்டாலும், அந்தக் காலக்கெடுவுக்குள் பணிகள் முழுமையாக முடிவடையுமா என்பது இன்னும் உறுதியாகவில்லை.

வாகன ஓட்டிகளுக்கு தொடரும் சிரமம்

மேம்பாலப் பணிகளால் ஏற்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் காரணமாக, குறிப்பாக தி.நகர் தியாகராய சாலை மற்றும் செனடாப் சாலை பகுதிகளில் வாகன ஓட்டிகள் தொடர்ந்து சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்த மாற்றுப்பாதைகளில் சாலையின் சில பகுதிகள் சீரற்ற நிலையில் இருப்பதாகவும், பள்ளங்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு கூடுதல் சிரமம் ஏற்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

3.2 கி.மீ மேம்பாலம் எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை இடையிலான இந்த 3.2 கி.மீ உயர்மட்டப் பாதை பயன்பாட்டுக்கு வந்தால், அண்ணா சாலையின் முக்கிய சந்திப்புகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதே திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

ஆனால், பணிகள் பெருமளவு முன்னேறிய பின்னர் கண்டறியப்பட்ட வடிவமைப்புச் சிக்கல் காரணமாக ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், திட்டத்தின் நிறைவு காலத்தை மீண்டும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

பிப்ரவரி 2027 என்ற புதிய இலக்கு நிறைவேறுமா? அல்லது சென்னையின் முக்கியமான இந்த மேம்பாலத் திட்டத்திற்கு மேலும் காலதாமதம் ஏற்படுமா? என்பது தற்போது வாகன ஓட்டிகளின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.

Exit mobile version