எம்.சி.ராஜா மாணவர் விடுதி குறைகள் உடனடித் தீர்வு
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி.ராஜா மாணவர் விடுதியில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் நேற்று நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டதைத் தொடர்ந்து, அங்கு தங்கியுள்ள மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட அனைத்துக் கோரிக்கைகளும் சமூக நீதித் துறையின் மூலம் அடுத்த 24 மணி நேரத்திற்குள் அதிரடியாக நிறைவேற்றப்பட்டுள்ளன.
இதன்படி, மாணவர்களுக்குத் தரமான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் விடுதியின் உணவுப் பட்டியல் (Menu) முழுமையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதுடன், தட்டுப்பாடு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த இட்லி மற்றும் சப்பாத்தி வழங்கும் முறை மீண்டும் உடனடியாகத் தொடங்கப்பட்டுள்ளது.
மேலும், நீண்ட நாட்களாகப் பூட்டிக்கிடந்த கைப்பந்து (Volleyball) விளையாட்டு மைதானத்தைப் பயன்படுத்த மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் இரவு 12:00 மணி வரை விடுதிக்குள் வரவும் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
விடுதியில் தொடர்ந்து தரமான உணவு வழங்கப்படுவதை முறையாகக் கண்காணிப்பதற்காகப் பிரத்யேகக் கண்காணிப்புக் குழு ஒன்றும் தற்போதைய த.வெ.க. அரசால் உடனடியாக அமைக்கப்பட்டுள்ளது.
