Home செய்திகள் ‘கண்காணிப்பு ஊதியம்’ – ஊழியர் சம்பளத்தை நிர்ணயிக்கும் AI!

‘கண்காணிப்பு ஊதியம்’ – ஊழியர் சம்பளத்தை நிர்ணயிக்கும் AI!

நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கும் முறையில் ‘கண்காணிப்பு ஊதியம்’ (Surveillance Wages) என்ற புதிய செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த பெருநிறுவன உத்தியைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.

விமானக் கட்டணங்கள் மற்றும் ஆன்லைன் வர்த்தகங்களில் வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து விலையை உயர்த்தும் ‘கண்காணிப்பு விலை’ (surveillance pricing) உத்தியைப் போலவே, தற்போது வேலைவாய்ப்புச் சந்தையிலும் வேட்பாளர்களின் தனிப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தி மிகக் குறைந்த ஊதியத்தை நிர்ணயிக்கும் கொடூரமான முறை தலைதூக்கியுள்ளது.

இந்த முறையில், செயற்கை நுண்ணறிவு மற்றும் பிக் டேட்டா (Big Data) தொழில்நுட்பங்கள் மூலம் ஒரு விண்ணப்பதாரரின் தனிப்பட்ட வரலாறு, கடன் புள்ளிகள் (credit scores), வசிப்பிடப் பகுதி (ZIP code) மற்றும் ஆன்லைன் நடத்தைகள் வரை தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றன.

ஒரு ஊழியரின் தகுதி, அனுபவம் அல்லது சந்தை நிலவரத்திற்கு ஏற்ப ஊதியம் வழங்குவதற்குப் பதிலாக, அவர் எந்த அளவுக்கு நிதி நெருக்கடியிலும் அவசரத்திலும் இருக்கிறார் என்பதை அல்காரிதம்கள் துல்லியமாகக் கணித்து, அவர் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆகக் குறைந்தபட்ச ஊதியத்தை மட்டும் நிர்ணயிக்கின்றன. விண்ணப்பதாரர்களின் அனுமதி அல்லது அறிதலே இன்றி அவர்களின் கடன் சுமை போன்ற தனிப்பட்ட விவரங்களை அவர்களுக்கு எதிரான ஆயுதமாக நிறுவனங்கள் பயன்படுத்துவது, சுகாதாரத் துறை, சில்லறை வர்த்தகம் மற்றும் சேவைத் துறைகளிலும் பரவி வருகிறது.

நியாயமான தரப்படுத்தப்பட்ட ஊதியக் கொள்கையைத் தகர்த்து, உழைப்பிற்கேற்ற ஊதியத்தைப் பறிக்கும் இத்தகைய நடைமுறை, நிதி நெருக்கடியில் உள்ள எளிய உழைப்பாளர்களை மேலும் சுரண்டுவதோடு, ஊதியச் சந்தையில் பெரும் பாகுபாட்டிற்கும் நிதி நிலையற்ற தன்மைக்கும் வழிவகுப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்

Exit mobile version