தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகப் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைக்கும் ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ திட்டம், அதன் தொடக்க நாளியலேயே சீருடைக்கான கட்டாயப் பண வசூல் என்ற பெரும் அவப்பெயரையும் சர்ச்சையையும் சந்தித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
இச்சிறப்புப் படையில் இணைந்துள்ள பெண் காவலர்களுக்கான புதிய சீருடைக்கு (நீல நிற சட்டை, காக்கி பேண்ட்) தலா ₹2,300 வீதமும், அதுபோகப் புதிய பெல்ட்டிற்கு ₹400, புதிய ஷூவிற்கு ₹1000 என மாவட்ட எஸ்பிக்களின் உத்தரவின் பேரில் ஆயுதப்படை இன்ஸ்பெக்டர்கள் மூலம் கட்டாயப் பணம் வசூலிக்கப்பட்டிருப்பது காவல்துறை வட்டாரத்திலேயே பெரும் மன உளைச்சலையும் குமுறலையும் ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாகக் காவல்துறையில் ஏதேனும் ஒரு புதிய சிறப்புத் திட்டம் தொடங்கப்பட்டால், அதற்கான பிரத்யேகச் சீருடைகள் மற்றும் உபகரணங்கள் அனைத்தும் அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் காவல்துறை சார்பிலேயே இலவசமாக வழங்கப்படுவதுதான் காலம் காலமாக இருக்கும் மரபுவழி நடைமுறையாகும்.
ஆனால், அந்த மரபை முற்றிலும் சீர்குலைக்கும் விதமாக, குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு ஆர்வமாக இப்படையில் இணைந்த பெண் காவலர்களிடமே, “ஏன் இந்தத் திட்டத்தில் சேர்ந்தோம்?” என்று புலம்பும் அளவுக்கு அநியாயமாகப் பணம் பறிக்கப்பட்டிருப்பது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத நிர்வாக அவலமாகும்.
பெண்களின் பாதுகாப்பிற்காகத் தொடங்கப்படும் ஒரு உன்னதமான திட்டத்தின் தொடக்கமே இப்படிப் பெண் காவலர்களின் கண்ணீரிலும் அதிருப்தியிலும் அமைவது ஒட்டுமொத்தத் திட்டத்தின் நோக்கத்தையே பாழாக்கிவிடும் என்பதால், முதலமைச்சர் விஜய் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, வசூலிக்கப்பட்ட பணத்தை முழுமையாகத் திரும்ப வழங்க உத்தரவிடுவதோடு, சீருடைகளை இலவசமாக வழங்க ஆவன செய்ய வேண்டும் என்பதே சமூகத்தின் எதிர்பார்ப்பாகும்.
