மதுரையில் முதலமைச்சர் விஜய் பங்கேற்ற ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத் தொடக்க விழா மற்றும் காந்தி அருங்காட்சியகத் திறப்பு விழாக்களில் கலந்துகொள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால் ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசல் மற்றும் வெயிலின் தாக்கம் காரணமாக 15-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனை வளாகம் மற்றும் காந்தி அருங்காட்சியகப் பகுதிகளில் போதிய காற்றோட்டம் மற்றும் குடிநீர் வசதியின்றி நீண்ட நேரம் காத்திருந்த பெண்கள், முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் சிலர் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர்.
அவர்களை உடனடியாக அங்கிருந்த மருத்துவக் குழுவினர் மற்றும் காவல்துறையினர் மீட்டு, அவசர சிகிச்சைக்காக ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து முதலுதவி சிகிச்சைகளை வழங்கினர்.
