தலைநகர் டெல்லியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும், போக்குவரத்து விதிமீறல்களைத் துல்லியமாகக் கண்காணிக்கவும் ₹1,789.52 கோடி மதிப்பிலான Intelligent Traffic Management System (ITMS) திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டத்தை டெல்லி போலீஸ் செயல்படுத்த உள்ளது.
42 முக்கிய போக்குவரத்து வழித்தடங்களில் செயல்படுத்தல்
ITMS திட்டம் டெல்லியில் அடையாளம் காணப்பட்டுள்ள 42 முக்கிய Traffic Corridors-ல் மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளது. இதன் செயல்படுத்தும் காலம் 24 மாதங்கள் என்றும், அதன்பிறகு 5 ஆண்டுகள் Operation & Maintenance மேற்கொள்ளப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம், சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தற்போதுள்ள சாலை வசதிகளை தொழில்நுட்பத்தின் உதவியுடன் மிகவும் திறமையாகப் பயன்படுத்துவதாகும். டெல்லியில் சுமார் 71 லட்சம் active registered vehicles இருப்பதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
AI அடிப்படையிலான ஸ்மார்ட் சிக்னல்கள்
புதிய அமைப்பில் Adaptive Traffic Control System பயன்படுத்தப்படும். அதாவது, குறிப்பிட்ட சாலையில் எந்த நேரத்தில் எவ்வளவு போக்குவரத்து உள்ளது என்பதை நிகழ்நேரத் தரவுகள் மூலம் கணித்து, அதற்கேற்ப சிக்னல்களின் நேரத்தை தானாக மாற்றும் வகையில் அமைப்பு செயல்படும்.
இதன் மூலம் தேவையில்லாமல் நீண்ட நேரம் சிக்னலில் காத்திருப்பது குறைக்கப்பட்டு, முக்கியமான வழித்தடங்களில் வாகனங்களின் சீரான இயக்கத்திற்கு உதவ முடியும். மொத்தம் 1,092 Adaptive Traffic Control System locations திட்டத்தில் இடம்பெறுகின்றன.
விதிமீறல்களை AI கேமராக்கள் கண்காணிக்கும்
திட்டத்தின் மற்றொரு முக்கிய அம்சம் Automated Enforcement. மொத்தம் 1,029 enforcement locations அமைக்கப்பட உள்ளன.
தொழில்நுட்பக் கேமராக்கள் மூலம்,
- சிவப்பு விளக்கு மற்றும் Stop-line விதிமீறல்
- அதிவேகமாக வாகனம் ஓட்டுதல்
- Wrong-side / Wrong-way driving
- ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுதல்
- சீட் பெல்ட் அணியாமல் பயணம் செய்தல்
- வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்துதல்
- சட்டவிரோதமாக வாகனங்களை நிறுத்துதல்
போன்ற விதிமீறல்களைக் கண்டறிய திட்டமிடப்பட்டுள்ளது. AI அடிப்படையிலான பகுப்பாய்வு மூலம் திருடப்பட்ட அல்லது கண்காணிப்புப் பட்டியலில் உள்ள வாகனங்கள், மீண்டும் மீண்டும் விதிமீறும் வாகனங்கள் உள்ளிட்டவற்றையும் அடையாளம் காண உதவும்.
ஆம்புலன்ஸ்களுக்கு முன்னுரிமை
ITMS வெறும் விதிமீறல்களைக் கண்டறிவதற்காக மட்டுமல்ல. ஆம்புலன்ஸ் மற்றும் பிற அவசரகால வாகனங்கள் நெரிசலான சாலைகளில் விரைவாகச் செல்ல priority movement / green corridor வசதிக்கும் இந்த அமைப்பு உதவும்.
மேலும், விபத்து, போக்குவரத்து நெரிசல் அல்லது மெதுவாக நகரும் வாகனங்கள் போன்றவற்றை நிகழ்நேரத்தில் கண்டறிந்து, போக்குவரத்து போலீஸார் விரைவாக மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இந்த அமைப்பு உதவும்.
பொதுமக்களுக்கும் நிகழ்நேர தகவல்
சாலைகளில் Variable Message Signs (VMS) மற்றும் டிஜிட்டல் தளங்கள் மூலம் போக்குவரத்து நெரிசல், மாற்றுப்பாதைகள், பார்க்கிங் வசதி மற்றும் சாலை நிலவரம் போன்ற தகவல்கள் பயணிகளுக்கு வழங்கப்பட உள்ளன. இந்தத் தகவல்கள் Navigation service providers-க்கும் பகிரப்படலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதற்காக Traffic Command and Control Centres, Data Centre மற்றும் Disaster Recovery infrastructure ஆகியவை ஒருங்கிணைந்த அமைப்பாக செயல்படும்.
டெல்லியின் போக்குவரத்து நிர்வாகத்தில் புதிய கட்டம்
இதுவரை போக்குவரத்து நிர்வாகத்தில் மனித கண்காணிப்பு மற்றும் நிரந்தர சிக்னல் நேரங்கள் முக்கியப் பங்கு வகித்த நிலையில், புதிய ITMS திட்டம் நிகழ்நேரத் தரவு, AI, தானியங்கி விதிமீறல் கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையங்கள் ஆகியவற்றை அதிகளவில் பயன்படுத்தும் முறையை உருவாக்குகிறது.
இதன் மூலம் டெல்லியில் போக்குவரத்து நெரிசல், சாலை விதிமீறல்கள் மற்றும் விபத்துகளுக்கான பதிலளிப்பு நேரத்தை மேம்படுத்துவதே திட்டத்தின் முக்கிய நோக்கங்களாக உள்ளன.

